மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 380

என் டைரி - 380
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 380

பங்களாவில் குடும்பத்தினர்... பசியுடன் நான்!

என் டைரி - 380

டம்பரச் சொத்து இருக்கிறது. கண்ணுக்கு அழகான உறவுகள் இருக்கிறார்கள். ஆனால், தனிமையும், பசியுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன், ஒரு நரக வாழ்க்கையை!

எனக்குத் திருமணமானபோது, என் கணவர் ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான விவசாயி. நானும் அவரும் சேர்ந்து உழைத்து, அரும்பாடுபட்டு பொருளீட்டி, அதைச் சிக்கனப்படுத்தி, சேமித்து, பெருக்கி என... எங்கள் பையனுக்கு 15 வயதானபோது 10 ஏக்கருக்குச் சொந்தக்காரர்கள் ஆகும் அளவுக்கு உயர்ந்தோம். உழைப்பும், செல்வமும் தொடர்ந்து வளர்ந்தன. அறுவடை நாட்களில் வயலில் வேலைபார்ப்பவர்களுக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. 100, 200 பேர் என பந்தியில் என் கையால்தான் பரிமாறுவேன். 

ஒரே மகனுக்கு, சொந்தத்திலேயே திருமணம் முடித்தோம். பேரன், பேத்தி என்று சந்தோஷமாக வாழ்ந்தோம். ஆனால், பள்ளியில் சேர்க்கும் வயதில், பெரிய ஸ்கூல் என்று சொல்லி அவர்கள் இருவரையும் கொடைக்கானலில் ஒரு கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார்கள். பேரப்பிள்ளைகள் வெகுதூரம் போனதில் எனக்கும் என் கணவருக்கும் மனது சந்தோஷமிழந்து போனது. சில வருடங்களில் என் கணவரும் இறந்துவிட, என் வாழ்க்கை இன்னும் சுருங்கிப்போனது.

அதுவரை விவசாய நிலத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம், ‘இனி எல்லாம்

நான் பார்த்துக்கிறேம்மா’ என்று கைமாற்றிக் கொண்ட என் பையன், அப்படியே சொத்துக்கள் அனைத்தையும் அவன் பேரில் மாற்றி எழுதிவாங்கிக்கொண்டான். கை, கால் சுகத்துடன் நாம் இருக்கும்போதே அவனுக்கு சொத்து வேலைகளை எல்லாம் முடித்துக்கொடுத்துவிட வேண்டும் என்று நானும் முழு மனதுடன் கையெழுத்திட்டேன்.

இதன் பிறகுதான் என் நிலைமை தலை கீழாக மாற ஆரம்பித்தது. என் மருமகள் என்னை மதிக்காமல் நடக்க ஆரம்பித்தாள். அவமானம், உதாசீனம், எரிச்சல், கோபம்... எல்லாவற்றையும் தந்தாள். மருமகளை எதிர்த்து என் மகனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.எங்களின் பூர்வீக ஓட்டு வீட்டுக்கு அருகிலேயே ஆடம்பர பங்களா கட்ட ஆரம்பித்தான் என் மகன். ஆனால், என்னை இந்த வீட்டிலேயே விட்டுவிட்டு, அவர்கள் மட்டும் அதில் குடியேறினார்கள். அடுத்த கொடுமையாக, எனக்கு சமைத்துக்கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாள் மருமகள். தினமும் காலை 11 மணி வாக்கில், காலைக் கும் மதியத்துக்குமாக ஹோட்டலில் இரண்டு பார்சல் வாங்கிவந்து கொடுக்கிறான் என் மகன். இரவு, வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்துவிடுகிறேன். அப்படி நான் என் மருமகளுக்கு என்ன கொடுமை செய்தேன்?

68 வயதாகும் எனக்கு சாவு எப்போது என்று தெரியவில்லை. ஊருக்கே கூலிக் காசு கொடுத்திருக்கிறேன் என் கைகளால். இன்று வயிறு நிறைய சாப்பாடுகூட இல்லை. என் நிலை மாற, என் மருமகள் மனம் மாற ஏதாவது வழியிருக்கிறதா மகள்களே?

- சோகத்தில் வாடும் ஒரு தாய்

என் டைரி 379-ன் சுருக்கம்

என் டைரி - 380

``இளம்வயதிலேயே கணவரை இழந்த எனக்கு என் மகன்தான் ஒரே பிடிப்பு. யார் உதவியுமின்றி என் மகனை வளர்த்தெடுக்க, அரசு வேலை எனக்குக் கைகொடுத்தது. ‘எனக்கு நீயும், உனக்கு நானுமே உலகம்’ என்று என் மகனிடம் சொல்லி வளர்த்தேன். அவனும் அதை ஏற்றுக்கொண்டான். பள்ளி, கல்லூரி முடித்து, இப்போது அலுவலகம் செல்லும் அவனுக்கு நெருங்கிய நண்பன், தோழி என்று யாரும் இல்லை. இளம் வயதுக்குரிய சந்தோஷங்கள், கேளிக்கைகள் என்று எதுவும் இல்லாமல், வீட்டுக்குள் என்னுடனேயே இருக்கிறான். `திருமணம் செய்துவைத்தால் சரியாகி விடுவான்’ என்று பெண் பார்க்க ஆரம்பிக்க, ‘எனக்குக் கல்யாணமெல்லாம் வேண்டாம். மீறிப் பண்ணினா நான் சந்தோஷமா இருக்க மாட்டேன்; அந்தப் பொண்ணோட வாழ்க்கையும் பாழாகிடும். கடைசிவரை எனக்கு நீ... உனக்கு நான்னே இருந்துடலாம்’ என்கிறான் பிடிவாதமாக! ‘நான் போயிட்டா உனக்குக் கடைசிவரை யாருடா இருப்பா?’ என்றால், ‘ஒருவேளை அப்போ தோணுச்சுன்னா, கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்காக உழைச்சு, ரிட்டையர்ட் ஆகி சில உடல் உபாதைகளால் போராடிட்டு இருக்கே... இப்போ உன்னைப் பார்த்துக்கிறது மட்டுமே என் சந்தோஷம்’ என்கிறான். 

`என் கஷ்ட நஷ்டங்களை அவன் மீதும் திணித்து, என்னைவிட்டு அகலாமல் இப்படி வளர்த்துவிட்டேனே’ என்று குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது. என் மகன் இல்லற வாழ்க்கை, இனிய உறவுகள், உற்சாகப் படுத்தும் நண்பர்கள் என வாழ வழிசொல்லுங்கள்.’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

கவுன்சலிங் தேவை!

உங்கள் ஆதங்கம் நியாயமானது. உங்கள் மகனுக்கு தேவை நல்ல ஆலோசனை. மகனை வற்புறுத்தி மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்; அவர் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி புரியவைப்பார். `மற்றவர்களைப்போல நானும் பேரன், பேத்திகளைப் பார்க்க வேண்டும்' என பிடிவாதமாக சொல்லுங்கள்.  தாயாருக்காக மணவாழ்க்கையை துறக்க விழையும் நல்ல மகன், உங்களை சந்தோஷப்படுத்தவாவது திருமணத்துக்கு இணங்குவார். அந்த மாற்றம் வந்தாலே, பின்னர்  பிற சந்தோஷங்களும் வந்துவிடும்
 

-  மல்லிகா குரு, சென்னை-33

வாய்ப்பு ஏற்படுத்துங்கள்!

உங்கள் மகனின் நிலையை முழுமையாக எடுத்துக்கூறி, ஒரு பெண்ணைப்பார்த்து, திருமணத்துக்கு முன்பே அவனுடன் பேசிப்பார்க்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுங்கள். அவனுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தும்விதமாக ஒரு பெண் நடந்துகொண்டால், உங்கள் மகன் மனதில் மாற்றம் ஏற்படும்; உங்கள் கவலை விரைவில் தீரும்.

- என்.ஜீவிதா, தஞ்சாவூர்

கனிவாக காய் நகர்த்துங்கள்!

அம்மா... இந்த விஷயத்தில் மற்றவர்களின் உதவியின் மூலமே தீர்வு கிடக்கும். திணிப்பு என்ற வகையில் இல்லாமல், இயல்பாக  புதியவர்களின் பழக்கம் - நட்பை  ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அவர்கள் மூலமாக காய் நகர்த்தினால்... காரியம் கைகூடும்.

- எலிஸபெத் ராணி, பழைய விளாங்குடி