மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 381

என் டைரி - 381
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 381

விலகும் மகள்... உருகும் உள்ளம்!

என் டைரி - 381

ரு பெண்ணுக்கு வாழ்வில் வரக்கூடாத கொடுமைகளை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். 53 வயதான நான் இதுநாள் வரையிலும் என் குடிகார கணவரின் கொடுமையால் பட்ட அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல. என் வேதனைகளை எல்லாம் என் மகன் மற்றும் மகளை வளர்ப்பதில் மறந்திருந்தேன். தாய் வீட்டார் தந்த ஆறுதலான வார்த்தைகள் என்னை மேலும் அமைதிப்படுத்தின.

வயதுக்கு வந்த மகளைப் பார்த்தாவது என் கணவர் என்றாவது குணம் மாறுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். நான் நினைத்த மாதிரியே  இந்த இரண்டு மாதங்களாக என் கணவர் குடியை நிறுத்திவிட்டு என்னை அன்போடு கவனித்துக்கொள்கிறார்.

ஒரு சந்தோஷம் கிடைத்தால் கூடவே ஒரு துக்கமும் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் தலை எழுத்துப் போல..! உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்குப் போயிருந்த எனக்கு புற்றுநோய் தாக்கி இருப்பதாக அதிர்ச்சி கொடுத்தார்கள் மருத்துவர்கள். வாழ்வில் கடைசி நிலையில் இருப்பதாக நினைத்தாரோ என்னவோ... குடிப்பதை நிறுத்திவிட்டு என்னை அன்போடு பார்த்துக் கொள்கிறார் கணவர்.

மருந்துகளும் கணவரின் அன்பும் என்னை இந்த நோயில் இருந்து மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அதே வேளையில், மகளின் மன மாற்றம் என்னை மனதளவில் பாதிக்கச் செய்கிறது. எனக்கு வந்துள்ள இந்த நோயைக்கண்டு மிகவும் பயந்துபோன என் மகள், என்னிடம் நெருங்கி வருவதை தவிர்த்துவிடுகிறாள். குமுறல் தாங்காமல் மகளிடம் அழுதேன். அவள் இப்போது என்னை முற்றிலும் ஒதுக்கிவிட்டு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாள். கணவனும் மகனும் அவள் செய்கையைக் கண்டிக்க முடியாமல் என்னை மட்டுமே தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நோயின் வலியைவிட மகள் காட்டும் அந்நியம் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் சாகடிக்கிறது. அவளின் அன்பும் ஆதரவும் கிடைக்க எனக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே!

- அன்புக்காக ஏங்கும் ஒரு நெஞ்சம்

என் டைரி 380-ன் சுருக்கம்

என் டைரி - 381

``திருமணமான புதிதில் என் கணவருக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. நானும், அவரும் சேர்ந்து உழைத்து, எங்கள் ஒரே மகனுக்கு 15 வயதானபோது 10 ஏக்கருக்குச் சொந்தக்காரர்கள் ஆனோம். உழைப்பும் செல்வமும் தொடர்ந்து வளர்ந்தன.  பிறகு, மகனுக்கு சொந்தத்திலேயே திருமணம் முடித்தோம். பேரன், பேத்தி என்று சந்தோஷமாக வாழ்ந்தோம். சில வருடங்களில் கணவர் இறந்துவிட்டார். விவசாய நிலத்தின் கணக்கு வழக்குகளை தான் பார்த்துகொள்வதாக சொல்லி, கைமாற்றிக்கொண்டான் என் மகன். அப்படியே சொத்துக்களையும் அவன் பேரில் மாற்றிக்கொண்டான். அதன் பிறகு நிலைமை தலைகீழானது.

அவமானம், உதாசீனம், எரிச்சல், கோபம்... என எல்லாவற்றையும் என்னிடம் காட்டினாள் என் மருமகள். அவளை எதிர்த்து என் மகனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கிடையே ஆடம்பர பங்களா கட்டி குடியேறிய மகன், பூர்வீக ஓட்டு வீட்டிலேயே என்னை விட்டுவிட்டான். எனக்குச் சமைத்துக்கொடுக்க முடியாது என்று மருமகள் கூற, தினமும் காலை 11 மணி வாக்கில், காலைக்கும் மதியத்துக்கும் ஹோட்டலில் இரண்டு பார்சல் வாங்கிவந்து கொடுக்கிறான். இரவில் வெறும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்துவிடுகிறேன். 68 வயதாகும் எனக்கு சாவு எப்போது என்று தெரியவில்லை. பலருக்கும் கூலிக் காசு கொடுத்த என்னால் இன்று வயிறு நிறைய சாப்பிட முடியவில்லை. என் நிலை மாற வழி உண்டா?''

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

மகனிடம் பேசிப்பாருங்கள்!

அம்மா... உங்களின் நிலை யாருக்கும் வரவே கூடாது. பின்விளைவுகளை எண்ணிப்பார்க்காமல் சொத்தை மாற்றி எழுதிக்கொடுத்தது உங்கள் தவறு. உங்கள் மகனிடம், `இனி எனக்கு நீ கடையில் பார்சல் வாங்கித்தர வேண்டாம். நான் கையேந்தி பிச்சை எடுத்து சாப்பிடுகிறேன்’ என்று ஒருமுறை கூறிப்பாருங்கள். அந்த நிலைக்கு எந்த மகனும் விடமாட்டான்.

- எம்.ராஜம், மதுரை

புகார் கொடுங்கள்!

தவறு முழுவதும் உங்கள் பெயரில்தான் அம்மா. மகன் கேட்டான் என்பதற்காக உலக நடப்பை புரிந்த பின்னும் சொத்துக்களை மகன் பெயருக்கு எழுதி வைக்கலாமா? கரன்ட் உள்ளவரைதான் டி.வி-யும், வாஷிங்மெஷினும், கிரைண்டரும் வேலை செய்யும். இதை அறியாத அப்பாவியா நீங்கள்? இனியும் கெட்டுப்போகவில்லை. `என் சொத்தை ஏமாற்றி வாங்கிவிட்டு என்னை கவனிக்க மாட்டேன் என்கிறார்கள்' என்று காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். மாற்றம் நிகழும்.

- நா.பாப்பா நாராயணன், பாளையங்கோட்டை

அனுபவத்தை வைத்து சம்பாதியுங்கள்!

உங்களுக்கு ரத்தக்கொதிப்பு, சுகர், நெடுநாள் வியாதி எதுவுமில்லை என்றால் கடவுள் கொடுத்த வரம்; 68 வயது ஒரு பொருட்டே அல்ல. விவசாய நிலத்தின் கணக்கு வழக்கு பார்த்த அனுபவம் இருப்பதால். யாராவது உங்களுக்குத்தெரிந்த நில உரிமையாளர்களிடம் குறைந்த ஊதியமாக இருந்தாலும்கூட பரவாயில்லை, கணக்குப்பிள்ளையாக சேருங்கள். அது உங்களுக்கு நினைவாற்றலையும் தக்கவைக்கும். வயதான காலத்தில் கடை உணவை சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் நீங்களே எளிமையாக சமைத்துக்கொள்ளுங்கள். பொழுதும் போகும். இறுதி மூச்சு உள்ளவரை போராடுங்கள்.

- தவமணி கோவிந்தராசன், சென்னை