
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ஓவியம்: ராமமூர்த்தி
பதறவைத்த முத்தம்!

என் தோழியின் குழந்தைக்கு காதணி விழா நடத்தினார்கள். நான் சென்றிருந்தேன். தன் குழந்தையின் திறமையை உறவினர்கள் அறிந்துகொள்வதற்காக, ‘`அத்தைக்கு ‘ப்ளையிங் கிஸ்’ கொடு’’, ``பெரியம்மாவுக்கு ‘பேபி கிஸ்’ கொடு’’ என்று கூறிக்கொண்டிருந்தாள் தோழி. குழந்தையும் அடம் பண்ணாமல் அவள் சொல்லியபடி செய்தது. பிறகு, ‘`மாமாவுக்கு கிஸ்’ கொடு’’ என்றதும், குழந்தை தன் மாமாவுக்கு முத்தமிட்டது. பதிலுக்கு அந்த மாமாவும் எச்சில் படும்படி பாசமாக முத்தமிட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
எச்சில் மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் இதுபோன்ற கெட்ட பழக்கத்தை சொல்லித் தரலாமா? தாய்மார்களே, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்... ப்ளீஸ்!
- ஆர்.வசந்தி, போளூர்
ஒட்டுப்போட்ட நோட்டு..!

என் தோழியுடன் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்கு சென்றிருந்தேன். பொருள்கள் வாங்கிவிட்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தாள். அவர்கள் மீதி சில்லறை தர, அந்த நோட்டுகளை வாங்கி பின்புறமாக திருப்பி எண்ணத் தொடங்கினாள். அவள் இதுபோல் சில முறை நோட்டு எண்ணுவதைப் பார்த்திருந்ததால், அன்று கேட்டேவிட்டேன். ``பெரும்பாலும் கிழிந்த நோட்டை ஒட்டுப்போடுபவர்கள் பின்புறமாகத்தான் செய்திருப் பார்கள். எனவே, திருப்பி எண்ணுவதன் மூலம் சரியில்லாத நோட்டை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்’’ என்றாள். அவளுடைய முன்ஜாக்கிரதையை எண்ணி வியந்தேன்!
கோமதி பூபாலன், வேலூர்
இப்படியும் திருடுகிறார்கள்... ஜாக்கிரதை!

சமீபத்தில் என் பக்கத்து வீட்டு அம்மா அவசரமாக என்னைத் தேடி வந்து, ‘’நான் பணம் போட்டிருக்கிற வங்கியிலேருந்து பேசினாங்க. என்னோட ஏ.டி.எம். நம்பரையும், வேறு சில நம்பர்களையும் கேட்டாங்க `என் கண்ணாடிய எங்கேயோ வெச்சுட்டேன் கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பேசுங்க’னு சொல்லிட்டேன். இந்தா, என் செல்போன், ஏ.டி.எம். கார்டு. அந்த போன் வந்தா அவங்க கேட்ட விவரத்தை சொல்லும்மா’’ என்றார். ``வங்கியிலிருந்து இதெல்லாம் கேட்க மாட்டாங்க. இதுபோல விவரத்தை கேட்டு நம் பணத்தை நமக்கு தெரியாமலே எடுக்குறாங்க. இனி இதுபோல போன் வந்தா விவரம் சொல்லாதீங்க’’ என்றேன். பணத்தை பறிகொடுப்பதிலிருந்து தப்பித்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினார் அந்த அம்மா.
டெக்னாலஜியைப் பயன்படுத்தி, நம் பணத்தைக் களவாட விஷமிகள் பலர் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும். பொதுநலம் கருதி, ஒரு விஷயத்தை மீண்டும் அழுத்தமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... நம் வங்கியிலிருந்து போன் செய்து ஏ.டி.எம் நம்பர், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கேட்கவே மாட்டார்கள்!
- ச.கலா, தஞ்சை
வளம் சேர்க்கும் வாழ்க்கைப்பாடம்!

கோடை விடுமுறை சமயத்தில் என் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தோழி பட்டதாரி. எனினும் திருமணத்துக்கு பிறகு வீடு, குழந்தைகளை சரிவர கவனித்துக் கொள்வதற்காக வேலைக்குப் போகவில்லை. அவளுடைய மகள் 7-ம் வகுப்பு மாணவி. தோழி தன் மகளுக்கு வீட்டில் செய்யக்கூடிய சிறிய வேலைகளான பூ கட்டுதல், கோலம் போடுதல், பஞ்சிலிருந்து விளக்கு ஏற்றுவதற்காக திரிகளை திரித்தல், சுத்தம் செய்யப்பட்ட பாத்திரங்களை அடுக்கி வைத்தல், காய்ந்த ஆடைகளை மடித்தல் போன்றவற்றை ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்திருப்பதாக கூறினாள். மகளும் பொறுமையாக கற்றுக்கொண்டு, சில நாட்களாக அவளாகவே செய்கிறாளாம்.
`சம்மர் கோர்ஸ்’ என்ற பெயரில், குழந்தைகள் எதை எதையோ விரைவில் கற்றுக்கொண்டுவிட வேண்டும் என பலரும் ஆலாய்ப்பறக்கும் இந்தக் காலத்தில், வாழ்க்கைக்கு தேவையானவற்றை மகளுக்கு பொறுமையாக கற்றுக்கொடுத்த என் தோழி, சரியான வழிகாட்டிதானே..!
- பத்மஜா, வாலாஜா