மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 382

என் டைரி - 382
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 382

விநோதமான அம்மா... விசனத்தில் மகள்!

என் டைரி - 382

திருமணத்துக்குப் பின் பெண் களுக்குப் பெரும்பாலும் மாமியார்தான் பிரச்னையாக இருப்பார். ஆனால், எனக்கோ என் அம்மாதான் பிரச்னை!

அன்பான கணவர் கிடைத்திருக் கிறார். ஆறு மாத திருமண வாழ்க்கையை காதல் பொங்க கடக்கவிருக்கிறோம். விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். மகிழ்ச்சிக்கு எந்தக் குறையும் இல்லை. என் கணவரின் பெற்றோர் வரும்போது அவர்களை நான் தாங்குவது, என் வீட்டினர் வரும்போது அவர்களை அவர் தாங்குவது என்று மிகப் புரிதலுடனும் பக்குவத்துடனும் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் என் அம்மா, ‘நீயெல்லாம் என்ன குடும்பம் நடத்துற?’ என்ற ரீதியில் என்னை கரித்துக்கொண்டே இருப்பதுதான் துயரம்.

அம்மாவின் 16 வயதிலேயே அவருக்கு நான் பிறந்துவிட்டேன். ஒரே பெண். என் அப்பா-அம்மாவுக்கு இடையே ஒரு சம்பிரதாய வாழ்க்கை இருந்ததே தவிர, அன்பு, காதல், நெருக்கம் என்று அவர்கள் வாழ்ந்த தில்லை. அதனால், நானும் என் கணவரும் அந்நியோன்யமாக இருக்கும் பொழுதுகளில் எல்லாம் என் அம்மாவுக்கு ஏக்கமும், சமயங்களில் பொறாமையும்கூட எழுவதை நான் உணர்கிறேன். அதனால் முடிந்தவரை அவர் முன் என் கணவரிடம் இருந்து நான் விலகியே இருக்கிறேன். ஆனால், ரொமான்டிக் ஆளான கணவரை என்னிடம் இருந்து நிறுத்திவைக்க முடியவில்லை.

அனைவரும் இருக்கும்போது, ‘வேர் இஸ் மை ஸ்வீட் பொண்டாட்டி?’ என்று தேடிவந்து என் அருகில் அமர்வார்; குங்குமம் இட்டுவிட்டு, விரிந்துகிடக்கும் கூந்தலை திடீரென க்ளிப் செய்துவிட்டு, ‘அழகுடீ நீ’ என்பார்; என்னைச் சுற்றி சுற்றிவந்து ஏதாவது சினிமா பாடல்களை பாடுவார். அந்நாட்களில் அம்மாவின் அர்ச்சனை என்னால் தாங்கமுடியாத அளவுக்கு இருக்கும். 

‘நீயும் உன் வீட்டுக்காரரும் நாகரிகமாவா நடந்துக்கிறீங்க?’, ‘எப்பப் பார்த்தாலும் வீட்டையே சுத்தி வர்றாரே... ஆம்பளையா லட்சணமா வெளிய போகமாட்டாரா அவர்?’ என்று அம்மா உதிர்க்கும் வார்த்தைகளில், கலாசாரம் என்பதைத் தாண்டி, அவரின் பொறாமையை நான் நன்கு உணர்கிறேன். பல சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டாலும், சில சமயங்களில் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாலும், எல்லா சமயங்களிலும் அப்படி இருப்பேன் என்று இப்போது நம்பிக்கையில்லை. எப்போது வெடித்துவிடுவேனோ என்று எனக்கே அச்சமாக இருக்கிறது. எனவே, இப்போதெல்லாம் அம்மா என் வீட்டுக்கு வருகிறார் என்றாலே பதறுகிறது எனக்கு.

இந்த விநோதமான பிரச்னையை எப்படி சமாளிப்பது?!

- உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் வாசகி

என் டைரி 381-ன் சுருக்கம்

என் டைரி - 382

``53 வயதான நான், என் குடிகாரக் கணவரின் கொடுமையால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டேன். என் வேதனைகளை என் மகன், மகளை வளர்ப்பதில் மறந்திருந்தேன். மகள் வயதுக்கு வந்த பின்னர் என் கணவர் குடியை நிறுத்திவிட்டு, என்னை அன்போடு கவனித்துக்கொள்கிறார். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனைக்குப் போன எனக்கு புற்றுநோய் தாக்கி இருப்பதாக அதிர்ச்சி கொடுத்தார்கள். வாழ்வில் கடைசி நிலையில் இருப்பதாக நினைத்தாரோ என்னவோ... என்னை அன்போடு பார்த்துக்கொள்கிறார் கணவர். மருந்துகளும் கணவரின் அன்பும் என்னை நோயில் இருந்து மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த வேளையில், என் மகள் எனக்கு வந்துள்ள இந்த நோயைக்கண்டு மிகவும் பயந்துபோய் என்னிடம் நெருங்குவதைத் தவிர்க்கிறாள். குமுறல் தாங்காமல் மகளிடம் அழ... அவள் என்னை முற்றிலும் ஒதுக்கிவிட்டு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாள். கணவரும், மகனும் அவள் செய்கையைக் கண்டிக்க முடியாமல் என்னை தேற்றிக்கொண்டிருக்கிறார்கள். நோயின் வலியைவிட மகள் காட்டும் அந்நியம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறது. மகளின் அன்பும் ஆதரவும் கிடைக்க நான் என்ன செய்வது?’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

பூரண குணம் பெறலாம்!

`நோயின் பிடியில் சிக்கியவுடன் மகள் கண்டுகொள்ளவில்லை. ஒதுக்கித் தள்ளிவிட்டாள்’ என்று புலம்பி இருந்தாய். இதுதான் உலக நியதி. இப்போதைக்கு உன் கணவர் பேராதரவாய் இருப்பது உனக்கு யானை பலம்; நீ ஏன் கலங்க வேண்டும்? கணவரின் அரவணைப்பில் உரிய சிகிச்சை மேற்கொள். மருந்து, மாத்திரைகளை தவறாமல் உண்டு வா; பூரண குணம் பெறுவாய்.

- உமாராணி இந்திரஜித், மேலவளவு

மகளின் போக்கை மாற்ற முடியும்!

இது எளிதாக தீர்ந்துவிடக்கூடிய பிரச்னை. உங்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் மூலம் உங்கள் மகளிடம் `புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல’ என்பதை எடுத்துச்சொல்லுங்கள். அத்துடன் `வலியால் கஷ்டப்படுபவர்களுக்கு மனவலியை கொடுக்கக்கூடாது’ என்று பக்குவமாக உணர்த்துங்கள். உங்கள் மகள் நிச்சயம் மாறுவாள்.

- நா.செண்பகா, பாளையங்கோட்டை

ஆண்டவனை வேண்டுங்கள்!

அம்மா... உடலில் ஏற்பட்டுள்ள புற்றுநோயைவிட மனதில் இருக்கும் வலிதான் உங்களுக்கு அதிகமாக உள்ளது. உங்கள் பெண்ணின் நெருங்கிய தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களிடம் உங்கள் மன ஏக்கத்தை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்கள் பெண்ணிடம் தக்கமுறையில் பேசி அவள் மனதிலுள்ள நோயைப்பற்றிய பயத்தைப்போக்கி உங்கள் இருவரையும் சேர்த்து வைப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் வீணாக மனதைப்போட்டு குழப்பிக்கொள்ளாமல் ஆண்டவனை நினைத்து தியானம் செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் நலம் பெறுவதோடு, உள்ளம் தெளிவடையும்.

- உஷா விட்டல், சென்னை