மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 384

என் டைரி - 384
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 384

கைவிட்டுப் போன பணம்... கைபிசைந்து நிற்கும் மகன்!

என் டைரி - 384

ருமகள் பிரச்னைதான் எனக்கும். ஆனால், நான் வருத்தப்படுவது எனக்காக அல்ல, என் மகனுக்காக.

என் மகன் பல வருடங்கள் வெளிநாட்டில் வேலைசெய்தான். மாதம் ரூபாய் 50 ஆயிரம் சம்பளம். அவன் மனைவிக்குதான் பணம் அனுப்புவான். ஒரு கட்டத்தில், `ஊர், உறவை எல்லாம் விட்டுவந்து உழைத்தது போதும்; சொந்த நாட்டில் மனைவி, அம்மாவுடன் சென்றுசேர்ந்து, ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு தாய்நாடு திரும்பினான்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து வீடு திரும்பிய அவனுக்கு, என் மருமகள் தந்தாள் இடிபோன்ற அதிர்ச்சி. அவன் அனுப்பிய பணம் எதையும் சேர்த்துவைக்காமல், வெறுங்கையோடு இருந்திருக்கிறாள். அதில் அதிர்ச்சி அடைந்த என் மகன், ‘இந்த ஆறு வருஷத்துல 36 லட்சம் அனுப்பியிருக்கேன். என்னதான் செஞ்ச அதையெல்லாம்?’ என்று கேட்க, அவளிடம் பதில் இல்லை. மனம் நொந்துபோனவன், என் வீட்டுக்கு வந்தான். அந்நேரம் பார்த்து அவள் வீட்டைப் பூட்டி சாவியையும் எடுத்துக்கொண்டு தன் அக்கா வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.

இதற்கிடையில், ஐந்து வருடங்களுக்கு முன் எனக்கு போன் செய்த என் மகன், ‘அம்மா... அவளுக்கு ஒரு முக்கிய செலவு இருக்கு. நீங்க கையில இருக்கிற நகையையும், காசையும் கொடுங்க. நான் உங்களுக்கு திருப்பித் தர்றேன்’ என்று சொல்ல, நானும் என் 7 பவுன் நகை மற்றும் கையில் இருந்த 33 ஆயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்து அனுப்பினேன். அதுவும் போனது போனதுதான். இப்போது என் மகனுக்குக் கொடுத்து உதவ என்னிடமும் எந்தப் பொருளும் இல்லாமல் இருக்கிறேன்.

என் மகன் அனுப்பிய அத்தனை லட்சங்களையும் அப்படி என்னதான் செலவுசெய்தாள் என்று அவள் சொன்னாலாவது, மனம் சாந்தியடையும். அதையும் சொல்லாமல், அக்கா வீட்டில் இருந்துகொண்டு, நாங்கள் போன் செய்தாலும் எடுக்காமல் படுத்தியெடுக்கிறாள் மருமகள். மேலும், குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டியவள், ‘அவரு வேலைவெட்டி இல்லாம அவங்க அம்மா வீட்டுல இருக்காரு’ என்று அனைவரிடமும் சொல்லித் திரிவது, ஜென்மத்துக்கும் மன்னிக்க முடியாதது.

என் மகன் இப்போது வெறும் ஆளாக நிற்பதைப் பார்க்க சகிக்கவில்லை. இத்தனை வருடங்களாக உழைத்த அவன் உழைப்பு எல்லாம் வீணாகிப்போனதை நினைக்கும்போது என் பெத்த மனம் பற்றி எரிகிறது. அவன் செய்த தவறெல்லாம், தன் மனைவியை கண்மூடித்தனமாக நம்பியது மட்டுமே.

என் மகனின் வாழ்வு விடிவதற்கு வழி என்ன?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 383-ன் சுருக்கம

என் டைரி - 384

``என் கணவருக்கு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை. இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாருடன் வசித்து வருகிறோம். அடுத்த தெருவில் என் நாத்தனார் குடும்பம் இருக்கிறது. அதனால், தினமும் என் நாத்தனார் எங்கள் வீட்டுக்கு வந்து, தன் அம்மாவிடம் கதை பேசுவது வாடிக்கை. அப்போதெல்லாம் அவர்கள் எனக்குத் தரும் தொந்தரவுகள் நிறைய! பல நேரங்களில் கஷ்டப்பட்டு நான் மாவு அரைத்துவைக்க, அதில் பாதியை என் நாத்தனாருக்குக் கொடுத்துவிடுவார் என் மாமியார். தினமும் மாலை தன் பிள்ளைகளோடு எங்கள் வீட்டுக்கு வரும் நாத்தனாரை, இரவில் அவர் கணவர் அழைக்க வரும்போது, அவர்கள் குடும்பத்துக்கு பலகாரம் செய்ய வைத்துவிடுவார்கள்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வார இறுதியில், எங்கள் குடும்பத்தை நாத்தனார் வீட்டுக்கு அழைப்பார்; அங்கும் நான்தான் சமையல் செய்ய வேண்டும். எங்கள் வீட்டில் என்ன பொருள் வாங்கினாலும் இரண்டாகத்தான் வாங்க வேண்டும். ஒன்று எங்களுக்கு, மற்றொன்று என் நாத்தனாருக்கு. சுற்றுலா சென்றாலும் என் நாத்தனார் குடும்பத்தையும் அழைத்துச் செல்ல வேண்டும். செலவு எல்லாம் என் கணவர்தான் செய்ய வேண்டும். பிள்ளைகளுடன் நாங்கள் வெளியே செல்லும் சுதந்திர சந்தோஷம் அந்நியமாகிவிட்டது. கணவரிடம் முறையிட்டால், ‘இதெல்லாம் ஒரு விஷயமா?’ என்கிறார். ஆனால்... இவையெல்லாம் என்னை மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அம்மாவை மகள் பார்க்க வரக்கூடாது என்று சொல்லும் கல்நெஞ்சக்காரி அல்ல நான்.  அவர்களின் சுயநலத்துக்கு என்னைப் பயன்படுத்திக்கொள்வதில் இருந்து நான் விடுபட வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் தோழிகளே?!

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

காலம் சரிசெய்யும்!

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த மாமியார், நாத்தனாரை யாராலும் மாற்ற முடியாது. ஆனாலும் இது பெரிய விஷயமில்லை. வீட்டுக்கு வீடு வாசப்படிதான். நாத்தனார்தானே... செய்துவிட்டு போயேன். என்ன குறைந்துவிடப்போகிறது..? உபகாரம் செய்; பலனை எதிர்பார்க்காதே என்பதுபோல முடிந்தவரை செய். உன் நல்ல எண்ணம் அவர்கள் மனதை மாற்றும். காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

- எல்.உஷாகுமாரி, சூளைமேடு

உறவுக்கு மதிப்பு கொடுங்கள்!

தோழி, உன் நிலைமை நன்றாகவே புரிகிறது. நீயும், உன் கணவரும்... ஏன், உன் மாமியாருமே போற்றுதற்குரிய தியாகங்களைத்தான் செய்துவருகிறீர்கள். உறவுக்கு நிச்சயம் மதிப்பு கொடுங்கள். உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு உத்வேகத்தை காண்பீர்கள். உன் நாத்தனாருக்கு உன் குடும்பம் செய்யும் உதவிகள் நிச்சயம் தெரியும். போகப்போக உன்னைப் புரிந்துகொள்வார். உறவுகள் வலுப்பட வாழ்க்கையில் சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் போக வேண்டும். பிறருக்கு கொடுத்து வாழும் பழக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி மகிழ்வுடன் இருங்கள். நாளடைவில் எல்லாம் நல்லபடியாக மாறும்.

- புவனா சாமா, ஸ்ரீரங்கம்

பிளான் பண்ணி தப்பிக்கலாம்!

நாத்தனார் வீட்டுக்கு வந்ததும், `அண்ணி, எனக்கு உடம்புக்கு முடியல, அதனால நீங்க என்கூட சேர்ந்து சமையல் செய்ய வாங்க’ என்றும், `துணி மடிக்கணும். நீங்களும் அத்தையும் சேர்ந்து மடிச்சு வைங்க, நான் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்துடறேன்’ என்றும் சொல்லுங்கள். இப்படி அடிக்கடி செய்தாலே போதும்... உங்கள் நாத்தனார் வீட்டுக்கு வருவதைத் தவிர்ப்பார். அதேபோல், `அண்ணி நீங்க சமையல் செஞ்சா உங்க தம்பி எப்பிடி சாப்பிடுறார் தெரியுமா’னு சொன்னால் அசடு வழிவார், அதோடு உங்கள் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக்கொள்வார்.

- மாலா பழனிராஜ், கண்டிகை