
விழிப்பு உணர்வு

பணம் சம்பாதிப்பதை முன்வைத்து ஆரோக்கியத்துக்கு சவால்விடும் நிறைய பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. அவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க அந்நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம்... விளம்பரம்! விளம்பரம் மட்டும் செய்துவிட்டால் போதும்... ஒரு பொருளின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால், அந்த விளம்பரத்தின் உண்மைத்தன்மையை யாரும் இங்கு ஆராய்வதில்லை.
அந்த வகையிலான ஆபத்து புதைந்த விளம்பரங்களில் ஒன்றுதான்... ‘சானிடைசர்’ விளம்பரம்.
பள்ளி, வீடு, மற்ற இடங்கள் என்று விளையாடிவிட்டு வரும் குழந்தைகள், கைகழுவ சோப்பையோ... ஏன், தண்ணீரையோகூட பயன்படுத்த வேண்டாம். சானிடைசரை கைகளில் பூசிக்கொண்டால் போதும்... அப்படியே சாப்பிடச் செல்லலாம் என்ற அளவுக்கு விளம்பரம் செய்கிறார்கள்.
இந்த சானிடைசர் என்பது என்ன? மருத்துவமனைகளில் நோயாளிகளைத் தொட்டுப் பரிசோதனை செய்தபின்னர் மருத்துவர் கைகளில் ஒரு மருந்தைத் தடவிக் கொள்வாரே... அதுதான் சானிடைசர்.
சரி, கைகளில் இதைப் பூசிக்கொண்டால் கிருமிகள் சாகும். ஆனால், கையைக் கழுவாவிட்டால், குழந்தைகள் கைகளில் உள்ள அழுக்கு எங்கே போகும்? பதில் இல்லை.
இன்னொரு கேள்வி. இந்த சானிடைசரில் என்ன உட்பொருட்கள் அடங்கியுள்ளன?
95% ஈதைல் ஆல்கஹால். அதாவது, ஒருவகை சாராயம்.
‘இது கிருமிகளைக் கொல்லத்தானே செய்கிறது, இதில் என்ன தவறு?’ என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம்.
அந்த பாட்டில்களின் பின்புறம் பார்த்தால், ஓர் உண்மை விளங்கும். ‘வெளிப்பூச்சுக்கு மட்டும், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். உட்கொண்டுவிட்டால் மருத்துவரை அணுகவும்.’

குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவேண்டிய, உட்கொண்டால் மருத்துவரை அணுகவேண்டிய ஒரு பொருளை, குழந்தைகள் கைகளில் பூசிக்கொண்டு கையைக் கழுவாமல் சாப்பிடலாம் என்கிறது இந்த விளம்பரம். பொதுவாக, வெளிநாடுகளில் விற்கப்படும் பாட்டில்களில் 70% ஆல்கஹால் இருந்தாலே ‘விஷ முறிவு மருத்துவரை அணுகவும்’ என்று அச்சிடுகிறார்கள். இந்தியாவில்தான் தடைசெய்யப்பட்ட மருந்துகளையே விற்க முடியும்போது, இதெல்லாம் எம்மாத்திரம்?
வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சில ஆராய்ச்சிகள் சோப்பும் தண்ணீரும் கொண்டு கைகளைக் கழுவுவதே சிறந்தது என்கிறது. மேலும், தொடர்ந்து சானிடைசர் பயன்படுத்தும்போது, கொசுக்கள் எப்படி கொசு
விரட்டிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக்கொள் கின்றனவோ, அப்படி கிருமிகள் மேலும் மேலும் வலுவடைகின்றன என்கிறது. இது சிந்திக்க வேண்டிய விஷயம்.
சானிடைசரை உபயோகிக்கும்போது ஏற்படும் அபாயம் குறித்து சென்னை, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரி யர் மற்றும் காஸ்மடாலஜி துறைத்தலைவர் டாக்டர்.ஜி.ஆர்.ரத்னவேல் பேசும் போது, ‘‘பெரும்பாலான சானிடைசர்கள் வேதிப் பொருட்கள் கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அவை நிச்சயம் கெடு தலையே ஏற்படுத்தும். மேலும் பெரியவர்களைவிட மூன்று மடங்கு அதிக பாதிப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சானிடைசரில் 95% ஆல்கஹால் எனும் சாராயம்தான் உள்ளது. சானிட்டைசரின் தியரிபடி பார்த்தால், அந்த ஆல்கஹால் எளிதில் ஆவியாகக் கூடியது என்கிறார்கள். ஒருவேளை விரல்களுக்கு இடையில் சரியாக ஆவியாகாமால் சிறிது ஆல்கஹால் இருந்தாலும், சாப்பிடும்போது உணவுடன் சேர்ந்து உள்ளே சென்றால் உடலுக்கு அது விஷம்தான்.
ஆல்கஹால் மற்றும் ஆன்டிசெப்டிக் போன்றவை உடலுக்கு நிச்சயம் கெடுதல்கள் தரக்கூடியவையே. மேலும் சானிடைசரை கைகளில் பூசிக்கொள்ளும்போது வெளிப்படும் அதன் புகையின் வாசனை, நுகர இனிமையாக இருக்கும். ஆனால், அது சுவாச

மண்டலத்தை (respiratory system) கடுமையாகப் பாதிக்கக்கூடியது. அடுத்ததாக, சானிடைசர் குழந்தைகளுக்கு சரும அலர்ஜியையும் ஏற்படுத்தக்கூடும். பெரியவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, குழந்தைகளின் சருமத்தில் தண்டு தண்டாக வீங்கக்கூடிய அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி உணவு வழியாக, சுவாசம் வழியாக, சருமம் வழியாக என உட்சென்று இது ஏற்படுத்தும் பாதிப்புகள் நிறைய!’’ என்று எச்சரித்தார் டாக்டர்.
குழந்தைகள்... பெரியவர்களைவிட எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள். அவர்களை கைகளை சோப்பைக்கொண்டு, தண்ணீரால் நன்கு கழுவச் செய்யுங்கள். இது போதும்தானே!
ப.பிரதீபா, படங்கள்: க.சத்தியமூர்த்தி
அதுவும் தீங்குதான்!
ஒருவேளை `ஆல்கஹால் அற்ற' என்று கூறப்படும் சானிடைசர்களை பயன் படுத்தலாம் என்றால், அவற்றி லும் ட்ரைகோல் அல்லது ட்ரைகோகுளோரான் என்று சொல்லக்கூடிய உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவை பொதுவாக ‘ஆன்டிபாக்டீரியா’ என பாட்டில்களில் எழுதப் பட்டிருக்கும்.