மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ. 200 / ராமமூர்த்தி

அனுபவங்கள் பேசுகின்றன!

ரிங்டோன் அவஸ்தை!

என் தோழியின் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். வேறு பல தோழிகளும் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் அமர்ந்து சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. அனைவரும் பதற்றத்துடன் சுற்றும்முற்றும் பார்க்க, அங்கே அமர்ந்திருந்த ஒரு பெண் செல்போனை எடுத்து `ஆன்’ செய்து பேசினாள். அனைவரையும் திடுக்கிடச் செய்த அந்த ஆம்புலன்ஸ் அலறல், அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்த ரிங்டோன் என்று புரிந்தது.

மனதுக்கினிய நல்ல பாடல்களும், வாத்திய இசையமைப்புகளும் எவ்வளவோ இருக்க... இப்படி அனைவரையும் பதறவைக்கும் ரிங்டோன் தேவையா?!

- பி.லதா, சேலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

காத்திருந்து... காத்திருந்து..!

தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொலைபேசியின் மூலம் பொருட்களை ஆர்டர் பெற்று விற்பனை செய்யும் விளம்பரத்தைப் பார்த்து நான் உடல் எடை குறைப்பு இயந்திரம் (Weight loss machine) பெற  தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விற்பனையாளர், `பன்னிரண்டாயிரம் விலையுள்ள இயந்திரத்துடன் இரண்டு இலவச பொருட்களையும் வழங்குகிறோம். வீட்டுக்கு எடுத்து வந்து பொருத்தி இயந்திரத்தை இயங்கவைத்துவிட்டே முழுப் பணத்தையும் பெற்றுக்கொள்வோம். ஓராண்டுக்கு இலவச சர்வீஸ். மூன்று மாதத்துக்கு ஒருமுறை எங்கள் பணியாளர் வந்து இயந்திரத்தை சரிபார்ப்பார்’ என்று பலவாறு உறுதிமொழி தந்தார். நான் ஆர்டர் செய்து உடல் எடை குறைப்பு இயந்திரத்தைப் பெற்றேன். உபயோகித்த ஒரே நாளில் ஃபிட்டிங் செய்த சில நட்டுகளும் போல்ட்டுகளும் கழன்று இயந்திரத்தின் பாகங்கள் ஆட்டம் கண்டன. நான் அதிர்ச்சியோடு விற்பனையாளருக்கு போன் செய்தேன். அவர், `இயந்திரத்தை சரிசெய்ய உடனே ஆளை அனுப்புகிறேன்’ என்றார். ஆனால், யாரும் வரவில்லை. தொடர்ந்து போன் செய்தபோது தொடர்பைத் துண்டித்தனர். சலித்துப்போன நான், நகரில் இந்த இயந்திரம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்தவரை தேடிப் பிடித்து அழைத்து வந்து சரிசெய்தேன்.

நம்பகமான கடைக்குச் சென்று வாங்காமல், கைபேசியில் ஆர்டர் செய்து நான் பெற்ற அனுபவம், மற்ற தோழியருக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காக இதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

- ரா.திரிபுரசுந்தரி, திருவண்ணாமலை

அனுபவங்கள் பேசுகின்றன!

பெற்றோர்கள் கவனிக்கவும்!

தோழியின் மூன்று வயது பேத்தியை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்காக அருகில் இருக்கும் பள்ளிகளில் விசாரிக்கச் சென்றனர். அங்கே கண்ட சில காட்சிகள் அதிர்ச்சி அளித்தன. ஒரு பள்ளியில் ஒரு குழந்தைக்கு வேண்டா வெறுப்பாகவும், மிரட்டியும் உணவை வாயில் திணித்தனராம். குழந்தைகளிடம் `கண்களை மூடி தூங்கலைன்னா அடி விழும்!’ என ஒரு ஆசிரியை குச்சியை காட்டி மிரட்டினாராம்.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், `குழந்தையை அருகிலிருக்கும் ப்ளே ஸ்கூலில் சேர்த்தால் போதும்’ என்று அலட்சியமாக நினைக்காமல், பள்ளியில் குழந்தையை நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்களா? என்று விசாரித்த பின்னரே சேருங்கள்.

- எம்.வசந்தா, சென்னை

அனுபவங்கள் பேசுகின்றன!

நம் வீட்டில் தொடங்குவோம்!

தன் மகளுக்கு வரன் பார்க்க தரகர் ஒருவருடன் பேசுவதற்காக என்னையும் உடன் அழைத்துச் சென்றார் என் உறவுக்கார பெண்மணி. ‘`மகளை செல்லமாக வளர்த்துவிட்டேன் எனவே, பெரிய குடும்பம் எல்லாம் சரிப்பட்டுவராது. ஒரே பிள்ளையாக இருக்கும் மாப்பிள்ளையாக பாருங்கள்; இல்லை என்றால், தனிக்குடித்தனம் செல்ல தயாராக இருந்தாலும் சரி. இப்படி ஏதாவது ஒரு வரன் வேண்டும்’’, என்று என் உறவுக்காரர் கூறியபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், இதே பெண்மணி தன் மகனுக்கு வரன் பார்க்கும்போது `பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். ஆனால், வேலைக்கு அனுப்ப மாட்டோம். தனிக்குடித்தனம் வைக்க மாட்டோம்’ என்று கண்டிஷன் பேசி, திருமணம் செய்துவைத்தவர்.

`தன் மகளுக்கு ஒரு நியாயம்;  மருமகளுக்கு ஒரு நியாயம்’ என்று பெண்களே இப்படி பேதம் பார்த்தால், பெண் சமஉரிமை எப்படிக் கிடைக்கும்? ஊருக்கு உபதேசம் சொல்லாமல் முதலில் நம் வீட்டில் நியாயத்தைக் கடைப்பிடிப்போம்... சரிதானே தோழிகளே?!

- பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்