மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 386

என் டைரி - 386
பிரீமியம் ஸ்டோரி
News
என் டைரி - 386

வாழ்க்கை இலக்கு... வழிமறிக்கும் காலம்!

என் டைரி - 386

ன்பான பெற்றோர், அண்ணன், நான் என மகிழ்ச்சியான குடும்பம் எங்களுடையது. இளவரசிபோல என்னை வளர்த்தார்கள். நான் கேட்பது எல்லாமே கிடைக்கும். என் விருப்பம்போல இன்ஜினீயரிங் படிக்கவைத்தார்கள் என் பெற்றோர். ஆனால், இப்போது வாழ்வின் முக்கியமான என் ஆசைக்கு, இலக்குக்கு, கனவுக்கு முட்டைக்கட்டை போட்டு பாடாய்ப்படுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டு எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் மகள், பெற்றோர் சம்மதமின்றி காதல் திருமணம் செய்து கொண்டாள். இருவீட்டாரும் அவர்களை ஏற்றுக்கொள்ளாத தால், தற்போது அவள் தன் கணவனுடன் வேறு ஊரில் வசித்துவருகிறாள். இந்தச் சம்பவம் நடந்ததில் இருந்தே, என்னை நினைத்து அச்சப்பட ஆரம்பித்துவிட்டனர் என் பெற்றோர். இறுதியாண்டு படிக்கும்போதிலிருந்தே, ‘காதல் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதும்மா... அது நம்மளோட மொத்த நிம்மதியையும் பறிச்சிடும்’ என்று போதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனக்கு எந்தக் காதலும் இல்லை. நல்ல மதிப்பெண்கள் பெற்று, மரியாதையான வேலைக்குச் செல்ல வேண்டும். இதுவே என் இலக்காக இருந்தது. அதேபோல, கேம்பஸ் இன்டர்வியூவிலும் தேர்வான எனக்கு, நல்ல சம்பளத்தில் பெங்களூரில் வேலை கிடைத்தது. ஆனால் என் வீட்டில், நான் வேலைக்குச் செல்லக்கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். வெளியூர் அல்ல, உள்ளூர் வேலைகூட வேண்டாம் என்று சொல்லி, எனக்கு அவசரமாக மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

‘வேலைக்குப் போய் சுயமா சம்பாதிக்கிறதுதான் என் ஆசை. நான் யாரையும் காதலிக்க மாட்டேன். நிச்சயம் நீங்க பார்க்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நம்புங்க’ என்று பக்குவமாகப் பேசிப் பார்த்துவிட்டேன்; கெஞ்சிப் பார்த்துவிட்டேன்; அழுதும் பார்த்துவிட்டேன். பலன் இல்லை. ‘காலத்தை யாராலயும் கணிக்க முடியாது. ஒருவேளை வேலைபார்க்குற இடத்துல யாரை யாவது உனக்குப் பிடிச்சுப்போய், ‘இவனைத்தான் கல்யாணம்

பண்ணிக்குவேன்’னு நீ வந்து நின்னா, எங்களால தாங்க முடியாது. ஒருவேளை நீ சம்மதிக்கலைன்னாலும், உன்னை ஒருதலையா யாராச்சும் காதலிச்சு, அவனால உனக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னைன்னா, நாங்க எல்லோரும் செத்தே போயிடுவோம். ஊரு உலகம் ரொம்ப கெட்டுப்போய் கிடக்கு’ என்று பதிலுக்கு அவர்களும் அழுகிறார்கள்.

சமீபத்தில் அநியாயமாகப் பறிக்கப்பட்ட சுவாதியின் உயிரும், வினுப்பிரியாவின் உயிரும் என்னைப்போலவே இன்னும் பல பெண்களின் எதிர்காலத்தை முடக்கிப் போட்டுள்ளது. என் பெற்றோரின் அக்கறையை, கவலையை நான் உதாசீனப்படுத்தவில்லை. ஆனால், பட்டப் படிப்பு முடித்த நான் என் சுயமரியாதைக்காக வேலைக்குச் செல்ல நினைப்பது தவறா? நான் விரும்பிய எதிர்காலம் எனக்குக் கிடைக்க ஒரு வழி சொல்லுங்கள் சகோதரிகளே!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

என் டைரி 385-ன் சுருக்கம்

என் டைரி - 386

``ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று சீட்டு பிடித்துவந்தார் என் கணவர். அவருக்கு நன் உதவியாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, 10 லட்ச ரூபாய் சீட்டுப்போட்ட ஒருவர் சீட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். எங்களிடம் இருந்த நகை, பணம் எல்லாமுமாகச் சேர்த்து 3 லட்சம் வரை திரட்டினோம்.  மீதிப் பணத்தை என் கணவரின் தம்பியும், தங்கைகளும் கொடுத்து உதவினர். அதைக்கொண்டு சீட்டுப் போட்டவர்களுக்கு கடனை அடைத்தோம். ஆனால், அந்தக் உதவிக்குக் கைம்மாறாக என் கணவரை அடிமையாக்கிக்கொண்டது அவரது குடும்பம்.

கடந்த இரண்டு வருடங்களாக  என் கணவருக்குத் தொழில், வருமானம் என்று எதுவும் இல்லை. தன் தம்பி, தங்கைகள் வீடுகளுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கித் தருவது முதல் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொடுக்கிறார். அண்ணனாக இல்லாமல், ஒரு வேலையாளாகவே அவரை நடத்துகிறார்கள்.

‘சீட்டுப்போட்டவங்க சட்டையைப் பிடிச்சப்போ, என் தம்பி, தங்கச்சிங்கதான் உதவினாங்க. அதுக்காக ஆயுளுக்கும் நான் அடிமையா இருக்கலாம்’ என்கிறார். என் பிறந்த வீட்டிலும் எங்களுக்கு உதவும் அளவுக்கு வசதி இல்லை. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு, நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வழி சொல்லுங்கள்!’’

வாசகிகள் ரியாக்‌ஷன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 100

கணவர் சொல்வது சரிதான்!

உங்களுக்கு கஷ்டம் வந்தபோது உன் கணவரின் குடும்பத்தார் உதவியதையும், அதனால் அவர்களுக்கு ஏவலாளியாய் உன் கணவர் வேலை செய்வதாகவும் கூறும் நீ, தலைநிமிர்ந்து வாழ வழி கேட்கிறாய். உன் கணவர் சொல்வது சரிதான். நீயும் அன்புள்ளத்தோடு அவர் வீட்டாருடன் நடந்துகொள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மனதில் இடம்பிடித்து உதவி பெற்று, நீ நினைத்ததுபோல வாழ வழி கிடைக்கும்.

- செ.கலைப்பிரியா, திருவம்பநல்லூர்

மாற்றம் வரும்... காத்திரு!

இந்த உலகில் பணம் படுத்தும் பாட்டை சொல்லி மாளாது. உன் கணவர் வீட்டார் தக்க சமயத்தில் செய்த உதவிக்காக உனது கணவர் அவர்களிடம் கைகட்டிக்கொண்டு நிற்கிறார். அதை அவர் நியாயப்படுத்துவதால் அவரை வற்புறுத்தாதீர்கள். நீங்கள் சுயமாக வருவாய் ஈட்டிக் காண்பியுங்கள். அதற்கு உன் கணவனிடம் நல்ல வரவேற்பும், மாற்றமும் வரும். அதுவரை காத்திருக்கவும்.

- கவிதா ராஜன், மதுரை

கைத்தொழில் கரைசேர்க்கும்!

உங்கள் கணவர் சொல்வது ஓரளவு நியாயமே என்றாலும் நன்றியை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு உதவுவதில் தவறில்லைதான். அதற்காக காலம் முழுவதும் அவர்களை சார்ந்திருக்க வேண்டியதில்லை. சுயமாக தொழில் செய்து பிழைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. கைத்தொழில் மூலம் வருமானம் ஈட்ட வழிசெய்யுங்கள்.

- ராஜி குருசாமி, சென்னை-88