தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

10/10 பத்துக்குப் பத்து!

10/10 பத்துக்குப் பத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
10/10 பத்துக்குப் பத்து!

கலைடாஸ்கோப்ப.தினேஷ்குமார்

10/10 பத்துக்குப் பத்து!

வாங்கிய பொருள்

வாணி போஜன், நடிகை

“என் ரொம்ப நாள் ஆசை, கனவு எல்லாமே சொந்தமா ஒரு கார் வாங்கணும் கறதுதான். அந்த ஆசை சமீபத்திலதான் நிறைவேறியது. அக்டோபர் 28 என் பிறந்த நாள்... அன்னிக்கு ‘ஹோண்டா சிட்டி’ மெட்டாலிக் பிளாக் கலர் கார் வாங்கினேன். முதன்முறையா நானே அந்தக் காரை டிரைவ் பண்ணி, ஃபேமிலியோட கோயில் களுக்குப் போயிட்டு வந்தேன். மனசுக்கு ரொம்பத் திருப்தியா இருந்தது.”

10/10 பத்துக்குப் பத்து!

பிடித்த படம்

மிஷா கோஷல், நடிகை

“எப்பவும் எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘Baby’s day out’ ஆங்கிலப் படம்தான். படம் பார்க்கறப்போ நானும் குழந்தைதான். படத்தில் ஒரு குட்டிக் குழந்தையை மூணு பேரு சேர்ந்து கடத்திடுவாங்க. அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் செம காமெடி. இதுவரை பத்து தடவைக்கு மேல அந்தப் படத்தைப் பார்த்திருப்பேன். இன்னிக்குப் பார்த்தாலும்கூட செம ஜாலியா இருக்கும். அவ்ளோ டென்ஷனும் கரைஞ்சு மனசு கூலாகிடும்.”

10/10 பத்துக்குப் பத்து!

ரசித்த இசை

ஹரிணி, பாடகி

“எனக்கு வெஸ்டர்ன் சாங்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதுலயும் செலீனா கோமஸ்  பாடல்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவங்க குரல்ல எந்தப் பாடலையும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். குறிப்பா, `It Ain't Me’ ஆல்பம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்த ஆல்பத்துல பாடல் வரிகள் சூப்பரா இருக்கும். இசையும் கவிதையும் சங்கமிக்கும்போது அதில் மயங்காமல் இருக்க முடியுமா, என்ன?''

10/10 பத்துக்குப் பத்து!

வாங்கிய பரிசு

திவ்யா கிருஷ்ணன், தொகுப்பாளினி


“நாங்க ‘ஸ்ரீஆரோக்கியா டிரஸ்ட்’னு  ஓர் அமைப்பை நடத்திட்டு வர்றோம். அதன்மூலம் நிறைய உதவிகள் செய்றோம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் என் சேவைகளைப் பாராட்டிய முன்னாள் மேயர் சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர் எழுதிய சில புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில்  எனக்குப் பொன்னாடைப் போர்த்தி கௌரவப்படுத்தினாங்க.”

10/10 பத்துக்குப் பத்து!

கடைப்பிடிக்கும் பழக்கம்

ரித்விகா, நடிகை


“தினமும் தவறாம கடைப்பிடிக்கும் பழக்கம்னா... அது உடற்பயிற்சிதான். காலையில் எழுந்ததும் வார்ம் அப் பண்ணுவேன். அடுத்து  யோகா, மூச்சுப் பயிற்சி செய்வேன். கண்களை ஆரோக்கியமா வெச்சுக்கவும் சில பிரத்யேகமான பயிற்சிகளைச் செய்வேன்.

உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சப்போ, சில சிரமங்கள் இருந்தன. ஆனா, நாள் தவறாமல் செய்துவர என் உடலும் மனமும் ஆரோக்கிய மானதை உணர முடிஞ்சது. அதுக்கப்புறம்தான் எனக்கே என் மேல நம்பிக்கை வந்துச்சு. நீங்களும் செஞ்சுப் பாருங்களேன்!”

10/10 பத்துக்குப் பத்து!

பிடித்த புத்தகம்

தமயந்தி, எழுத்தாளர்

“எனக்கு எமிலி டிக்கின்சனின் ஆங்கிலக் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். தமிழ்ல நிறைய புத்தகங்களைப் பிடித்தாலும், என்னைப் பிரமிக்க வெச்சது பிரபஞ்சனோட ‘சந்தியா’ நாவல்தான். சந்தியாவோட வாழ்க்கைப் பயணம் அவ்வளவு சுவாரஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். அவளுடைய நேர்மையான குணம், திருமணம் மீதான பார்வை எல்லாமே நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவை; பேசப்பட வேண்டியவை. நீங்களும் படிச்சுப் பாருங்க... உங்களுக்கும் பிடிக்கும்.”

10/10 பத்துக்குப் பத்து!

சென்ற இடம்

சரண்யா சுந்தர்ராஜ், நடிகை

“நான் சமீபத்தில் லண்டன் போயிட்டு வந்தேன். அப்ப அங்கே வசந்த காலம் ஆரம்பம். லண்டன் சாலைகள், ஆப்பிள் மரங்கள், வானுயர்ந்த கட்டடங்கள்...  இப்படி எல்லாமே ரொம்பப் பிடிச்சிருந்தது. அங்கிருந்த ஆப்பிள் மரங்களிலிருந்து பழங்களைப் பறிச்சு சாப்பிட்ட தெல்லாம் ஆஸம் மொமெண்ட். எனக்கு நடக்குறதுனா ரொம்பப் பிடிக்கும். லண்டன் சாலைகளில் நல்லா ஆசைதீர நடந்தேன். திரும்பி வர்ற மனசே இல்லாமல்தான் இங்கே வந்தேன்.

இங்கே வந்ததும் நான் நடிக்கிற சீரியலுக்காக கொடைக்கானலுக்குப் போக வேண்டியிருந்தது. லண்டனுக்கு இணையா கொடைக்கானல் குளிரும் அவ்வளவு ஜில்லுனு இதமா இருந்தது. கொடைக்கானலில் வழக்கமாக எல்லாரும் போகும் இடங்களுக்குப் போகவே கூடாதுனு முடிவு பண்ணி, மலைவாழ் மக்கள் வாழும் கிராமம், கோயில்னு நேரம் கிடைச்சப்ப எல்லாம் கிளம்பி போய்ட்டு வந்தேன். அங்கே வனபத்ர காளியம்மன்னு ஒரு கோயில் இருக்கு. பழைமை மாறாமல் அவ்ளோ அழகாயிருக்கு. மிஸ் பண்ணக் கூடாத இடம் அது!”

10/10 பத்துக்குப் பத்து!

தீராத ஆசை

ஆதிரா பாண்டிலட்சுமி, திரைப்படக் கலைஞர்

“எனக்குச் சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிடுச்சு. கல்யாணமானதும் துபாய்க்குப் போயிட்டதால என் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணினேன். அங்கே என்னால அம்மாவைப் பிரிஞ்சிருக்கவே முடியலை. அப்படியே காலம் ஓடிடுச்சு. ஒருகட்டத்துல அம்மாவைப் பார்க்கணும்னே அங்கேயிருந்து பறந்து இந்தியாவுக்கு வந்தேன். அதுக்குள்ள அம்மாவுக்கு கேன்சர் வந்துடுச்சு. அம்மா, பால் கொழுக்கட்டை சூப்பரா செய்வாங்க. எனக்கு அதை செஞ்சுத் தரச் சொல்லி கேட்கணும்னு ரொம்ப ஆசையா நினைச்சிட்டிருந்தேன். அவங்களே ‘எனக்கு உடம்பு சரியானதும் உனக்குக் கொழுக்கட்டை செஞ்சி தரேன்மா’னு சொன்னாங்க. சொல்லி இருபது நாள்கள்ல என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க. ஆனா, இப்பவும் அவங்க அன்புக்காக ஏங்கிட்டிருக்கேன். அவங்க செஞ்சு தரும் பால் கொழுக்கட்டை மீது இன்னும் தீராத ஆசை இருக்கு. ஆனா, இதெல்லாம் நிறைவேறாதே...”

10/10 பத்துக்குப் பத்து!

மறக்க முடியாத அனுபவம்

பிரியங்கா, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

“ஒரு நிகழ்ச்சிக்காக எங்க டீமோடு சேர்ந்து பாரீஸ் போயிருந்தேன். அங்கே டிஸ்னிலாண்ட் தீம் பார்க்குக்குப் போனோம். அமேஸிங் ப்ளேஸ். அத்தனை விளையாட்டுகளையும் விளையாடணும்னு கொள்ளை ஆசை. ஆனா, அதுக்கான நேரம் இல்லாததால் முக்கியமான விளையாட்டுகளை மட்டும் விளையாடினோம். ரொம்ப உயரமாக இருந்த ஒரு ரோலர் கோஸ்டரில் ரைடு போகலாம்னு சீட் பெல்ட் போட்டுக்கிட்டு கடவுளை வேண்டிக்கிட்டு உட்கார்ந்துட்டேன். ஸ்டார்ட் ஆனதுதான் தெரியும்... அதுக்கப்புறம் பயத்துல கத்தோ கத்துனு கத்தி செமயா என்ஜாய் பண்ணினேன். அதுவும் தலைகீழா சுத்தும்போது... அம்மாடியோவ், செம அனுபவம்!”

10/10 பத்துக்குப் பத்து!

நெகிழ்ந்த நிமிடம்

பாரதி பாஸ்கர், பேச்சாளர்

“ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக டெல்லி போயிருந்தேன். இரண்டரை மணி நேரம் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நடந்தது. நான் மேடையில் இருந்தவாறே ஒரு விஷயத்தை கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒரு மகன் தன்னுடைய மாற்றுத்திறனாளித் தாயை அந்த நிகழ்ச்சிக்காக அழைத்து வந்திருந்தார். நிகழ்ச்சியின் இடையே அவ்வப்போது அந்த அம்மாவின் அவசரத் தேவைக்காக அவரை அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தப் பையனை அழைத்துப் பேசினேன். அவர் என்னிடம், ‘எங்கம்மா உங்ககிட்ட பேச ஆசைப்படுறாங்க’னு சொன்னார். அந்த அம்மா ரொம்ப வயதானவர். உடல்நிலை சரியில்லாமலும் இருந்தார். ‘உங்கப் பேச்சை ஒருதடவையாவது நேர்ல கேட்கணும்னு ஆசைப்பட்டேன். அதை என் மகன்கிட்ட சொன்னவுடனே கூட்டிட்டு வந்துட்டான். இப்ப என் ஆசை நிறைவேறிடுச்சுமா’னு என் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னார். என் தலைமீது கைவைத்து ‘நீண்ட காலம் நீங்க வாழணும். இதே மாதிரி சந்தோஷமா, நல்லா பேசணும்’னு சொன்னாங்க. ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.''