தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

மாற்றத்தை ஏற்படுத்துவதே மகத்தான வாழ்க்கை! - ஜனனி

மாற்றத்தை ஏற்படுத்துவதே மகத்தான வாழ்க்கை! - ஜனனி
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றத்தை ஏற்படுத்துவதே மகத்தான வாழ்க்கை! - ஜனனி

விழித்திருநிவேதிதா லூயிஸ்

மெரிக்காவின் கலிஃபோர்னியா வில் உயிரியல் ஆய்வாளராகப் பணிபுரிந்து கொண்டே, சென்னைப் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த முடியுமா? `முடியும்' என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ஜனனி, `அவேர்' என்ற அமைப்பில் இணைந்து.

ஐந்தாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கொடும் துயரமான நிர்பயாவின் மரணம் நம் மனதை விட்டு அத்தனை விரைவாக மறைந்து விடவில்லை. நிர்பயாவின் தாக்கம் என்ன செய்தது ஜனனியை?

``சென்னைதான் நான் பிறந்த ஊர். பள்ளிப் படிப்பு மயிலாப்பூரில். மேல்படிப்பு ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியில். அப்பா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அம்மா ஹோம் மேக்கர். கணவர் ராகவ்வும் நானும் இப்போது கலிஃபோர்னியா வில் பணிபுரிந்து வருகிறோம். இந்தச் சமூகப் பணிகளில் நான் ஈடுபட முக்கியக் காரணம் என் கணவர் தரும் ஊக்கம்தான். வீட்டில் பணிகளைப் பகிர்ந்துகொள்கிறோம்.  அதனால் தினம் காலை நான்கரை மணிக்கு எழுந்து, சென்னையிலிருந்துவரும் அழைப்புகளைப் பேசி விட்டுதான் அலுவலகம் செல்கிறேன்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிர்பயா கொலைதான் `அவேர்' என்ற அமைப்பு உருவாகக் காரணம். நம்மைச் சுற்றி எக்கச்சக்கமான எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்து, சமுதாயத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போயிருந்த அந்த நேரத்தில், `இன்னும் இந்த நாடு அத்தனை மோசமாக மாற வில்லை, நம்பிக்கை எங்கோ கொஞ்சமாக இருக்கிறது, அதை மீட்டெடுப்போம்' என்றுதான் இந்த அமைப் பைத் தொடங்கினார் சந்தியன் என்ற இளைஞர்.

மாற்றத்தை ஏற்படுத்துவதே மகத்தான வாழ்க்கை! - ஜனனி

2015-ல் நடைபெற்ற எனது திருமணத்தின்போது வந்த பரிசுப் பொருள்களை `மிலாப்' அமைப்பு மூலமாக சென்னையின் சில பள்ளி களுக்குக் கல்வி உதவிக்கென நானும் கணவரும் தந்தோம். அதை அறிந்துகொண்ட சந்தியன் எங்களைத் தொடர்புகொண்டார். எங்கள் எண்ணங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்ததை உணர்ந்தபின், 2015 முதல் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதுவரை நாங்கள் நேரில் சந்தித்துக் கொண்டது இல்லை!

நிர்பயா கொடுமை நாட்டை உலுக்கிக் கொண் டிருந்த நேரம், ஒரு சாதாரண முகநூல் பக்கமாக ஆரம் பித்ததுதான் அவேர். மகளிர் பாதுகாப்பு குறித்த போஸ் டர்களை வடிவமைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தோம். அதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பு, எங்களை நேரடியாகக் களத்தில் பணிபுரியும் துணிவைத் தந்தது.

அவேரில் இப்போது நான் புராஜக்ட் கோ-ஆர்டினேட்டர். கடந்த ஓராண்டாக  பெண் களுக்குப் பணியிடங்கள் மற்றும் பொதுவெளிப் பாதுகாப்பை உறுதி செய்யும் `நோ மோர் நிர்பயா’ என்ற திட்டத்தை நிர்வகிக்கிறேன்.''

அவேர் என்ன செய்கிறது?

``அவேர் என்றாலே விழிப்பு உணர்வுதானே? `எம்பவர்' என்ற பெண்களுக்கான சுய பாதுகாப்பு வகுப்புகள், `சேவ் தி ஸ்மைல்ஸ்' - சிறார் பாலியல் கொடுமைத் தடுப்புப் பயிற்சிப் பட்டறைகள், பாலியல் விழிப்பு உணர்வு பயிற்சிகள் என அவேரின் பணிகள் விரிந்திருக்கின்றன. இவை தவிர, செம்மஞ் சேரி முழுமை சமூக முன்னேற்றம் (சிஹெச்சிடி) என்கிற பணியையும் முன்னெடுத்துச் செய்து வருகிறோம்.

சந்தியன், டி.சி.எஸ் குழுமத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் துறையில் (சி.எஸ்.ஆர்) பணியாற்றிய போது அதிகம் சந்தித்தது, செம்மஞ்சேரி பகுதி மக்களை. அவர்கள்பால் ஈர்க்கப்பட்டு, 2020-ம் ஆண்டுக்குள் ஒரு பாதுகாப்பான பகுதியாக செம்மஞ்சேரியை மாற்ற ஐந்தாண்டு திட்டம் தீட்டி, பணிபுரிந்து வருகிறோம்.

நாற்பது தன்னார்வலர்களைக் கொண்டு நாங்கள் நடத்திய `பாதுகாப்பு ஆய்வு' ஒன்றில், சென்னையைச் சார்ந்த 1,800 பெண்களிடம் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்களைத் திரட்டினோம். 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தனர்.

இந்தக் கணக்கெடுப்பு முடிவுகள், எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தன. அதனால், சென்னை மெட்ரோபாலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனின் (எம்.டி.சி) பாதுகாப்பு அதிகாரியிடம் பாலியல் விழிப்பு உணர்வு பட்டறை ஒன்றை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு நடத்தலாம் என்று எங்கள் எண்ணத்தைத் தெரிவித்தோம். பேருந்து களில் பெண்களின் பாதுகாப்புக்கு உற்ற துணை இவர்கள்தானே? விழிப்பு உணர்வு முகாமில் ஒரு சிலர் தங்கள் அலைபேசியில் அவர்கள் பயணிக்கும் பாதையின் அத்தனை காவல் நிலையங்களின் எண்களையும் சேமித்து வைத்திருந்தது எங்களுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இந்தச் சமூக அக்கறையும் பொறுப்பும் போதுமே!

இவை தவிர, ‘எம்பவர்’ என்ற மகளிர் சுய பாதுகாப்பு வகுப்புகளை வார இறுதி நாள்களில் அண்ணாநகர், குரோம்பேட்டை, ராயபுரம், அடையாறு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் நடத்தி வருகிறோம். மக்களும் பள்ளி நிர்வாகிகளும் மனமுவந்து இடவசதி செய்து தருகிறார்கள்.''

அடுத்து அவேர் செல்ல வேண்டிய பாதை குறித்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

``நவம்பர் 25 அன்று (சர்வதேசப் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம்) தொடங்கி, டிசம்பர் 10ஆம் தேதி வரை (மனித உரிமைகள் தினம்) பதினாறு நாள்கள் பல்வேறு விழிப்பு உணர்வு வகுப்புகளும், பயிற்சிப் பட்டறைகளும் நடத்தினோம். உங்கள் பள்ளிகளிலோ, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலோ இதுபோன்ற இலவச வகுப்புகள் நடத்தவோ, எங்களோடு இணைந்து பணியாற்றவோ, எங்களது முகநூல் பக்கம் அல்லது nomorenirbhaya@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது 81222 41688 என்கிற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்'' என்று தன்னார்வலர்களை அழைக்கிறார் ஜனனி.

பிறர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்வதுதானே கொண்டாட்டமான வாழ்க்கை? கொண்டாட்டமாக வாழ்க ஜனனி... இன்னும் உயரங்கள் தொடட்டும் அவேர்!