தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

‘பெற்ற தாயையே கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோடிய 23 வயது இளைஞர்!’

- இந்தச் செய்தியைக் கேட்டதுமே பற்றி எரியாத பெற்ற வயிறுகள் இருக்கவே முடியாது.

தஷ்வந்த், தகவல் தொழில்நுட்ப ஊழியர். சென்னையைச் சேர்ந்தவரான இவர், ஏழு வயது சிறுமி ஹாசினியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலைசெய்துவிட்டு, உடலை எரித்த குற்றத்துக்காகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த நிலையில், `பெற்ற தாயையே கொலை செய்துவிட்டார் தஷ்வந்த்’ என்று மும்பை வரை துரத்திச்சென்று கைது செய்துள்ளது தமிழகக் காவல்துறை.

நமக்குள்ளே!


‘சொத்தையெல்லாம் வித்து செலவு பண்ணி ஜாமீன்ல கொண்டுவந்தேனே... பெத்த அம்மாவையே கொலை பண்ணிட்டானே’ என்று இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறார் தஷ்வந்த்தின் அப்பா. சிறுமி ஹாசினியின் பெற்றோரோ, ‘அடுத்து எங்க மகனையும் நாங்க இழக்க விரும்பல’ என்று தஷ்வந்த்தைப் பார்த்துப் பயந்து, ஒதுங்கியே கிடக்கிறார்கள்.

காரணம்... தஷ்வந்த்தின் செயல்பாடுகள், ஆங்கில சைக்கோ த்ரில்லர் படங்களுக்கு இணையான பீதியைக் கிளப்பியிருப்பதுதான். தஷ்வந்த் போதை மருந்து உள்பட பல்வேறு பழக்கங்களுக்கு அடிமையாகியிருக்கிறார் என்கிறது காவல்துறை. 

ஆண் குழந்தைகளை நாம் சரியாகத்தான் வளர்க்கிறோமா என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது தஷ்வந்த் விவகாரம்.

கூகுளில், ‘ஆண் குழந்தைக்கு எப்படி சொல்லித் தருவது?’ (how to teach my son) என்று தட்டச்சு செய்து முடிப்பதற்குள், அது தரும் ஊகங்கள் என்னென்ன தெரியுமா? பைக் ஓட்ட, கார் ஓட்ட, ஷேவ் செய்ய, பேஸ்பால் பிடிக்க, நின்றபடி சிறுநீர் கழிக்க... உலகம் முழுவதும் இணையம் பயன்படுத்துவோர், ஆண் குழந்தைகளுக்குப் புகட்டும் அறிவுத்தேடலை இந்தச் சுருங்கிய வட்டத்துக்குள்தான் அடைத்துவைத்து இருக்கிறார்கள்.

அறுகிவிட்ட குடும்ப உறவுகள், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் எனச் சுருங்கிய குடும்பங்கள், அரவணைப்பு இன்மை, பொருள்தேடும் பெற்றோரின் இடைவிடாத ஓட்டம், விட்டுக்கொடுத்தலைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தராதது என்று வளர்ப்புமுறை சறுக்கல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

‘ஆணோ... பெண்ணோ... குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘நோ’ சொல்லிப் பழக்க வேண்டும். கேட்கும் எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் அள்ளித்தருவது, அவர்களுக்கே நல்லதல்ல. பள்ளிகளின் நீதிபோதனை வகுப்புகள் மட்டுமே போதுமானவை அல்ல. வாழும் உதாரணமாக... நம் குழந்தைகளின் ஹீரோ, ஹீரோயினாக நாமே வாழ்ந்து காட்ட வேண்டும். குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட வேண்டும். பதின்பருவ மகன்/மகளிடம் மாதவிடாய் முதல் குடும்ப பட்ஜெட் வரை ஆரோக்கியமாக விவாதிக்க வேண்டும். தண்ணீர்த் தொட்டியைக் கழுவுவது முதல் சாப்பிட்ட டேபிளைத் துடைப்பது வரை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும்’ என்றெல்லாம்தான் சமூக ஆர்வலர்கள், குழந்தை வளர்ப்பு நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் என்று பலரும் ஓயாமல் நமக்காக ஓதிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆம்... வெறும் புத்தகங்களை மட்டுமே வாசித்துவரும் ஏட்டுக்கல்வியைவிட, அதிக சாதுர்யத்தை, மனிதநேயத்தைத் தரவல்லது, குழந்தைகளுடன் சேர்ந்து நாம் செலவிடும் ‘குவாலிட்டி டைம்’ உள்ளிட்ட மேற்சொன்ன விஷயங்கள்தான். பாசத்தை ‘நோட்’டால் சொல்லாமல், நேரத்தால் சொல்வோம்; நல்ல நட்புகளையும் வாசித்தலையும் பழக்குவோம்; உலகை நேசிக்கக் கற்றுத்தருவோம் தோழிகளே!

உரிமையுடன்,

நமக்குள்ளே!


ஆசிரியர்