
பெண் உலகம்நிவேதிதா லூயிஸ்

`மீ டூ’ பெண்களுக்கு உச்சபட்ச கௌரவம்!
புகழ்பெற்ற அமெரிக்கப் பத்திரிகையான `டைம்’ ஒவ்வோர் ஆண்டும் ‘பெர்சன் ஆஃப் தி இயர்’ என்கிற அங்கீகாரத்தை அளித்துவருகிறது. கடந்த ஆண்டு இந்தச் சிறப்புக்கு உரித்தானவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த ஆண்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை எதிர்த்து, #metoo பிரசாரத்தை உலக அளவில் கொண்டுசென்ற ஆறு பெண்களுக்கு மரியாதை செய்திருக்கிறது டைம். ஆஷ்லி ஜட், டைலர் ஸ்விஃப்ட், சூசன் ஃபவுலர், இசபெல் பாஸ்கல், அடாமா இவு ஆகிய ஐந்து பெண்களின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்டிருக்கும் டைம், ஆறாவது பெண்ணான டெக்ஸாஸைச் சேர்ந்த, முகம்காட்ட விரும்பாத மருத்துவமனை பணிப்பெண் ஒருவரது முழங்கையின் படத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறது. உலகம் எங்கும் லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் முகம்காட்டாமல், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளியிட உதவிய ‘மீ டூ’ பிரசாரத்தைக் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய சமுதாய மாற்றமாக விவரித்திருக்கிறது டைம். இந்த அங்கீகாரத்தை இரண்டாவது முறையாக வெல்லக் காத்திருந்த ட்ரம்ப் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
பலே... அதிபரையே முந்திட்டாங்களே இந்தப் பெண்கள்!

இந்தியாவில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்!
கபில்தேவ் பந்து வீச, அதை எதிர் கொள்ளும் சச்சின் டெண்டுல்கர், அவர்களை வேடிக்கை பார்க்கும் ரொனால்டோ... ஷ்ரேயா கோஷல், ஆஷா போஸ்லே என்று மைக்குடன் பாடகிகள் ஒருபுறம். பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப், கரீனா கபூர், பழம்பெரும் நடிகை மதுபாலா மறுபுறம். இரு கரங்களையும் ஆக்ரோஷமாக மடக்கிக் குத்த தயார் நிலையில் மேரி கோம், ‘பறக்கும் சீக்கியர்’ என்று புகழப்படும் மில்கா சிங் என விளையாட்டு வீரர்களின் மெழுகுச் சிலைப் பட்டாளம் புடைசூழ மிளிர்கிறது உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸின் 23-வது அருங்காட்சியகம். டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள ரீகல் சினிமா காம்ப்ளெக்ஸின் இரண்டு தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், விளையாட்டு வீரர்களின் மெழுகுச் சிலைகள். மகாத்மா காந்தி, பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அப்துல் கலாம், நரேந்திர மோடி எனத் தலைவர்கள் சிலைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவர்கள் தவிர, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள், பாடகர்கள் என ஐம்பது மெழுகுச் சிலைகள் இங்கு உள்ளன. டிசம்பர் 1 அன்று திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் மேடம் டுஸாட்ஸ் அருங் காட்சியகத்தின் சிலைகள் அனைத்தும் லண்டனின் மெர்லின் மேஜிக் மேக்கிங் என்ற ஸ்டூடியோவின் படைப்புகள். பெரியவர்களுக்கு ரூ.960, சிறுவர்களுக்கு ரூ.760 என இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு நூறு ரூபாய் தள்ளுபடியும் அறிவித்துள்ளது மேடம் டுசாட்ஸ் (madametussauds.com/delhi).
மனசுக்குப் பிடிச்ச செலிப்ரிட்டி கூடநின்னு செல்ஃபியா சுட்டுத்தள்ள வேண்டியதுதான்!

ஜெஸ்ஸிகாவின் தேன் குரலில் ஹார்வர்டு தமிழ் இருக்கை எழுச்சி கீதம்!
பிரசித்தி பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தெற்காசிய ஆய்வுகள் பிரிவு ஒப்புதல் அளித்ததையடுத்து, அதனுடன் இணைந்து இருக்கையை அமைக்க தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள், தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட அமெரிக்கவாழ் மருத்துவர்கள் வி.ஜானகிராமன் மற்றும் எஸ்.சம்பந்தன். டொரொன்டோவில் சமீபத்தில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பின் விழா ஒன்றில் அரங்கேறியது, ஹார்வர்டு தமிழ் இருக்கையின் எழுச்சி கீதம்.
பாடலை எழுதியிருக்கிறார் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். `உலகத் தமிழருக்கோர் தமிழ் இருக்கை’ என்று தொடங்கும் பாடலைத் தன் தேன் குரலில் தெளிவான உச்சரிப்புடன் பாடியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ஜெஸ்ஸிகா. `சங்கத் தமிழ்மொழிதானே நம் தகமைகள் காக்கும், இன்பத் தாய்த்தமிழ் தரணியிலே பண்பாட்டை ஊக்கும், பொங்கும் அறநெறி அறிவியல் ஆர்க்கும், அன்பே பூரிக்கத் தமிழருக்கே புதுமைகள் சேர்க்கும்' என்று மொழி உணர்வைத் தூண்டுகிறது இந்த அருமையான பாடல் (https://goo.gl/THDScr).
அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம்...எத்தனை பெருமை… எத்தனை மகிழ்ச்சி!

பெண் இனத்துக்குக் குரல்கொடுக்கும் இவாங்கா ட்ரம்ப்!
தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் உச்சி மாநாடு ஹைதராபாத்தில் சமீபத்தில் நிறைவுற்றது. அமெரிக்க குடியரசுத் தலைவரின் மகளும், அவரின் கௌரவ ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இந்தியாவில் தொழிலாளர் பாலின இடைவெளியைப் பாதியாகக் குறைத்தால், அடுத்த மூன்றாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 150 மில்லியன் டாலர் உயரும் என்று குறிப்பிட்ட இவாங்கா, ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டு, சமுதாயத் தடைகளை நீக்கி, பெண்கள் புதுமைகளைப் படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெண்களுக்குப் போதிய அதிகாரம் இருந்தால்தான், நம் குடும்பம், நம் பொருளாதாரம், நம் சமுதாயம் என அனைத்தும் முழுமையான ஆற்றலை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில் அனைவரையும் அசத்தியது இவாங்கா மற்றும் பிரதமர் மோடியை வரவேற்ற ஐந்து அடி உயரம்கொண்ட `மித்ர’ என்கிற ரோபோ. பெங்களூரைச் சேர்ந்த இவென்ட்டோ ரொபாட்டிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ரோபோ, விருந்தினரை வரவேற்க, புகைப்படம் எடுக்க, `டிஜே’யாக செயல்பட என்று திருமணம், வரவேற்பு, பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளில் வரவேற்புப் பணிகளுக்கு விற்பனைக்கோ, வாடகைக்கோ அளிக்கப்படுகிறது (mitrarobot.com).
கல்யாண வீட்டுல `வாங்க'னு கூப்பிட இனி ரோபோவாச்சும் இருக்கும்!

குட்டி இளவரசன் பராக் பராக்!
`பிள்ளைப்பேறு இல்லாமல் தலைமுறைகள் கருகட்டும்' என்றொரு சாபம் 400 ஆண்டுகளாக மைசூரு அரசக் குடும்பத்தை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தி வருவதாகக் கதைகள் பல உண்டு. துரதிர்ஷ்டவசமாக அந்தச் சாபம் பலித்ததுபோல ஆண் வாரிசு இல்லாமல், 2013-ல் இறந்துபோனார் மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்ம உடையார். அவருக்குப் பின், அவரின் தங்கை மகனான யதுவீரைத் தத்து எடுத்துக்கொண்டார், அவர் மனைவி பிரமோதா தேவி. கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மன்னராக முடிசூட்டப்பட்ட யதுவீர், ராஜஸ்தான் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த திரிஷிகா குமாரியைச் சென்ற ஆண்டு மணந்தார். மைசூரு அரண்மனையில் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமணம் இது. இந்த நிலையில் செப்டம்பரில் நடைபெற்ற தசரா விழாவில் கர்ப்பிணியான திரிஷிகா கலந்துகொண்டார். டிசம்பர் மாதம் அழகிய இளவரசன் பிறந்திருக்கிறார்.
1612-ம் ஆண்டு... முதலாம் ராஜ உடையார் விஜய நகரத்தின் கடைசி அரசன் திருமலைராஜாவைத் தோற்கடித்து, அரசி அலமேலம்மாவை அவரது நகைகளைப் பிடுங்கத் தேடுகிறார். நகைகளுடன் தலக்காடு ஓடும் அலமேலம்மாவைப் படையினர் துரத்த, அவர்களைச் சபிக்கிறார் அலமேலம்மா. `தலக்காடு மணல் மூடிப் போகட்டும், மாலங்கி நதி வறண்டு போகட்டும், உடையார் பரம்பரை வாரிசு அற்று போகட்டும்' என்று சபித்துவிட்டு, ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறார். உடையார் மனம் வருந்தி அவருக்கு மைசூரு அரண்மனையிலேயே சிலை வைத்து வழிபாடு செய்கிறார். தலக்காட்டில் கோயிலும் கட்டி வழிபடுகிறார். ஆனால், 400 ஆண்டுகளாக இரு தலைமுறைக்கு ஒருமுறை பிள்ளைப் பேறு இல்லாமல், தத்தளித்து வந்திருக்கிறது மைசூரு அரச குடும்பம். அலமேலம்மாவின் ஆசியுடன் இப்போது பிறந்திருக்கும் குட்டி இளவரசரைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள் மைசூரு மக்கள்.
ச்சோ ஸ்வீட்... குட்டி ராஜா வெல்கம்!

தங்கம் வென்ற இரும்பு மங்கை!
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டியில், மணிப்பூரைச் சேர்ந்த சைக்கோம் மீராபாய் சானு முதலிடம் பிடித்து, தங்கம் வென்றிருக்கிறார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கிடைத்திருக்கும் தங்கம் இது. நொங்க்பொக் காக்சிங் என்ற சிறிய ஊரைச் சேர்ந்த மீராபாய், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில், ஸ்னாட்ச் முறையில் 85 கிலோ எடையும், க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 109 கிலோ எடையும் தூக்கி தேசிய சாதனை யும் படைத்தார். இரும்பு மங்கை என்ற பெயரை அத்தனை எளிதில் சம்பாதித்துவிடவில்லை மீராபாய்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய், 2016 ரியோ ஒலிம்பிக்கில் பரிமளிக்கவில்லை. சோகத்துடன் நாடு திரும்பிய மீராபாய், ஓராண்டு முழுவதும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். பெற்றோரைச் சந்திக்கவில்லை. செல்போன் இல்லை. தோழிகள் யாரையும் பார்க்கவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டுகளை ஆண்டு முழுக்க நினைத்துக்கூட பார்க்கவில்லை. போட்டிக்குச் சில நாள்கள் முன் நடைபெற்ற சொந்த அக்காவின் திருமணத்துக்குச் செல்ல முடியவில்லை. இந்தக் கடும் பயிற்சிக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த பலன், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம். தவறவிட்ட அர்ஜுனா விருது எப்படியும் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மீராபாய், தன் அடுத்த இலக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என்கிறார்.
அர்ப்பணிப்புக்கு ஓர் உதாரணம் மீராபாய்!

ஹாதியா என்கிற அகிலா!
சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த 24 வயது அகிலா அசோகன், திடீரென ஒருநாள் கல்லூரிக்கு புர்கா அணிந்துவந்தார். உடன்பயின்ற இஸ்லாமிய மாணவிகள் சிலரால் ஈர்க்கப்பட்டு, ஹாதியா எனப் பெயர் மாற்றம் செய்து, இஸ்லாமியராக மதம் மாறிவிட்டதாகத் தெரிவித்தார். தகவலறிந்து அவர் தந்தை அசோகன், கேரளா உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மகள் மதம் மாற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவின் `லவ் ஜிகாத்’தான் காரணம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை கல்லூரியின் மகளிர் விடுதியில் தங்கிப் படிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே இஸ்லாமியத் திருமணத் தகவல் வலைதளம்மூலம், 27 வயதான, மஸ்கட்டில் வேலை செய்துவந்த இளைஞர் ஷஃபின் ஜகானைச் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டதாக அறிவிக்கிறார் ஹாதியா.
ஹாதியாவின் தந்தை, ஹாதியாவின் திருமணம் செல்லாது என்று மீண்டும் வழக்கு தொடர, `அவரது திருமணம் செல்லாது' என்று அறிவித்தது உயர் நீதிமன்றம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஹாதியா. இவ்வழக்கில், இடைக்காலத் தீர்ப்பாக, தன் படிப்பை ஹாதியா சேலத்தில் தொடரலாம் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், அதேநேரத்தில், இவருக்கும் கணவர் ஷஃபின் ஜகானுக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க தேசியப் புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, `பிஎஃப்ஐ’ என்ற அமைப்புக்கும் ஷஃபினுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது புலனாய்வு அமைப்பு. வழக்கு விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திடுக் திடுக் திருப்பங்கள், சிந்துபாத் கதைக்கு அப்புறம் ஹாதியா கதையில்தான்!