தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``சிறந்து நிற்பாள்... சிவசங்கரி!’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்

``சிறந்து நிற்பாள்... சிவசங்கரி!’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
``சிறந்து நிற்பாள்... சிவசங்கரி!’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்

அவளும் நானும்... நானும் அவளும்ஆர்.வைதேகி - படங்கள் : சு.குமரேசன்

யிரக்கணக்கான மனிதர்களையும் நூற்றுக்கணக்கான சம்பவங்களையும் கடந்து செல்வது ஊடகவியலாளர்களின் உலகம். ஆனாலும், சில மனிதர்களும் சம்பவங்களும் காலத்துக்கும் காணாமல் போவதில்லை. ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வனின் ஞாபக அடுக்கிலும் அப்படியோர் `அவள்’ இருக்கிறாள். அவளைப் பற்றிய அவரின் பகிர்தலில் அவள் எல்லோருக்குமான செல்லமாகிறாள்.

``சிறந்து நிற்பாள்... சிவசங்கரி!’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்

அவளும் நானும்

`` `அவர்களும் நானும்’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு என் வாழ்க்கை நெடுகிலும் அன்பான பெண்கள். கல்லூரி வாழ்க் கையில் என்னை வழிநடத்திய கன்னியாஸ்திரி, பத்திரிகைத் துறையில் வழிநடத்திய கவிதா முரளிதரன் மற்றும் ஜெயா மேனன், என் குடும்பத்துப் பெண்கள்... இப்படி என் வாழ்க்கையிலும் வளர்ச்சியிலும் பெண்களே நீக்கமற நிறைந்திருக் கிறார்கள். அத்தனை பேரையும் முந்திக்கொண்டு கடந்த சில வருடங்களில் என்னை முழுவதுமாக ஆக்கிர மித்திருப்பவள் சிவசங்கரி...’’  - கார்த்திகைச் செல்வனின் சிறிய சஸ்பென்ஸ் `சிவசங்கரி யார்?’ என்கிற ஆர்வத்தைக் கூட்டுகிறது.

‘`என் 20 வருடப் பத்திரிகை அனுபவத்தில் ஏராளமான நபர்கள், நல்லதும் அல்லது மாக எக்கச்சக்கமான அனுபவங்கள். அவர்களில் ஒருத்தியாகவோ, அத்தகைய அனு பவங்களில்   ஒன்றாகவோ சிவசங்கரியையும் அவளின் சந்திப்பையும் என்னால் கடந்து செல்ல முடியவில்லை.
தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிலான வறட்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நேரம் அது... அதுவரை விதர்பா போன்ற சில இடங்களில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த விவசாயி களின் மரணங்கள்  போலவே தமிழ்நாட்டிலும் நிகழும் கொடுமையான செய்திகள் வரத் தொடங்கின.

ஜனவரி 3, 2016... நாகப்பட்டினத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகள், பாதிக்கப்பட்டவர்கள் என நூறு  பேர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு பாட்டி பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார். அந்தக் குழந்தைதான் சிவசங்கரி.

ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்த அவள் அண்ணன் பிரபுவும் வந்திருந்தான். அந்தப் பாட்டி ரஞ்சிதம், சிவசங்கரியின் அப்பாவின் சித்தி. இறந்தது சிவசங்கரியின் அப்பா கண்ணன் என்பது பிறகுதான் தெரிந்தது. கண்ணன் இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்துவந்திருக்கிறார். ஐந்து நாள்களுக்கு முன்புதான் இறந்திருக்கிறார். அதற்கு ஆறு மாதங்கள் முன்பு அவரின் மனைவி (சிவசங்கரியின் அம்மா) இதயநோயால் இறந்திருக்கிறார். அவரின் சிகிச்சைகளுக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார் கண்ணன். தவிர, விவசாயக் கடன் ஒன்றரை லட்சம் ரூபாய் எனக் கடன் சுமை பெரிதாக அழுத்தியதில், காலையில் நிலத்துக்குச் சென்றவர் அங்கேயே இறந்திருக்கிறார்.

40 வயதைக்கூடத் தொடாதவர். சிவசங்கரி பார்த்த கணத்திலேயே என்னுடன் ஒட்டிக் கொண்டாள். இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கான புத்திசாலித்தனத்துடன் இருந்தாள். தனக்கு நிகழ்ந்த எந்தச் சோகமும் அவளுக்குத் தெரியவில்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் சோகம் விளங்காமல் கல்லாங்காய் விளையாடிக்கொண்டும் சக குழந்தை களுடன் சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தாள் சிவசங்கரி. ‘மாமா... மாமா...’ என என்மீது அவ்வளவு அன்பு அவளுக்கு. என் மகள்களின் போட்டோக்களைக் காட்டினேன். அவர்களைப் பற்றி அக்கறையாக விசாரித்தாள்.

அவளின் பாட்டியிடம், ‘அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?’ எனப் பேசினேன். ‘`தெரியலை தம்பி... திடீர்னு எல்லாம் நடந்துபோச்சு. பத்தாம்நாள் காரியத்துலதான் முடிவு பண்ணுவோம். எனக்கு ரெண்டு மருமகள்கள் இருக்காங்க. நானே இன்னொருத்தரைச் சார்ந்துதான் இருக்கேன். இவளை யார் பார்த்துக்கப் போறாங்கனு தெரியலை...’’ என்றார்.

``சிறந்து நிற்பாள்... சிவசங்கரி!’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்

இரண்டு பெண் குழந்தைகளின் அப்பாவாக அந்த வார்த்தைகள் என்னை யோசிக்க வைத்தன. அங்குள்ள அத்தனை குடும்பங்களின் இழப்புகளுமே ஈடுசெய்ய முடியாதவைதாம். ஆனால், சிவசங்கரியின் இழப்பு அவற்றையெல்லாம் தாண்டியதாக இருந்தது. அவளின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது.

ஒரு பெண் குழந்தையாக இந்த உலகத்தை எதிர்கொள்ள அவளுக்குக் கல்வி அவசியம். அது மட்டும்தான் அவளுக்குத் தனித்து வாழ்கிற தன்னம்பிக்கையைத் தரும். உடனடியாக என் மேலதிகாரியிடம் பேசி, அந்தக் குடும்பத்தைத் தத்தெடுத்துக் கொண்டோம். எங்கள் சேனல் சார்பாக சிவசங்கரிக்கும் அவளின் அண்ணனுக்கும் கல்விச் செலவை ஏற்பதாகவும் அங்கேயே அறிவித்தேன். அதுமட்டும் போதாது... அதைத் தாண்டி, அவளுக்கு எல்லாமுமாக இருப்பது என்றும் முடிவுசெய்தேன். இன்றுவரை அந்தப் பந்தம் தொடர்கிறது. திருப்புகழூர் என்கிற ஊரில் இருக்கிறது அவளின் குடும்பம். நினைத்தபோதெல்லாம் அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன். சிவசங்கரி, ரஞ்சிதம் பாட்டியுடன் தங்கியிருக்கிறாள். இன்னும்கூட அவளுக்கு எந்த இழப்பும் புரியவில்லை. நான் பார்க்கிறபோதும் பேசும்போதும் அவளிடம் அதே `பளிச்’ சிரிப்பும் அழகான பேச்சும் அப்படியே இருக்கின்றன.

எனக்கு இரண்டு மகள்கள். கவின்மொழி, மூன்றாம் வகுப்பும் ஆதிரா, யு.கே.ஜி-யும் படிக்கிறார்கள். மனைவி சுகந்தி, ஐ.ஐ.டி-யில் வேலை பார்க்கிறார். அம்மா தமயந்தி. என் தங்கை கனிமொழிக்குத் திருமணமாகிவிட்டது. இவர்களைத் தாண்டி ஸ்ரீலேகா என்றொரு பெண் என் வாழ்க்கையில் 20 வருடங்களாக இருப்பவள். கல்லூரியில் மாணவர் இயக்கத்தில் இருந்தபோது அறிமுகமானவள். பிறகு, எனக்கு உடன்பிறவா தங்கையாகவே மாறி விட்டாள். கல்யாணத்துக்குப் பிறகு அவளின் பெண் குழந்தைக்குத் தாய்மாமனாக என் மடியில் வைத்துதான் காது குத்தினார்கள். அப்படியான ஓர் உறவு அது.

என் வாழ்வின் எல்லா கஷ்டமான தருணங்களிலும் தைரியமான பெண்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள். அப்பா இறந்தபோது எனக்கு 24 வயது. `இதுவரை என்னைத் தாங்கிப்பிடித்தவர் இனி இல்லையே' என உடைந்துபோயிருந்தேன். அதிலிருந்து என்னை மீட்டவர் என் அம்மா. என் இரண்டு மகள்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்குப் போனபோது துடித்துப்போன என்னை, என் மனைவியின் தைரியம்தான் தேற்றியது. வீட்டைத்தாண்டி, வேலையிடத்திலும் பெண் களின் அன்புதான் என்னை இயக்குகிறது. என்னைச் சுற்றியுள்ள பெண்களால்தான் என் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது.

இன்று என் பெண்ணுலகில் புது வரவாகியிருக்கிறாள் சிவசங்கரி. கொஞ்சம் செயற்கையாகத் தோன்றினாலும் அவளை என் மூன்றாவது மகள் எனச் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அவளிடம் அசாத்தியமான தன்னம்பிக்கையைப் பார்க்கிறேன். சுயமாக நிற்கும் அளவுக்கு அவளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் என் லட்சியம். அவளைப் பார்த்துக்கொள்கிற ரஞ்சிதம் பாட்டியால் எத்தனை நாள்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று சொல்வதற்கில்லை. சிவசங்கரியின் வாழ்க்கையை நெருக்கத்தில் கவனித்துக்கொண்டிருக்கிறேன். நான் எதிர்பார்ப்பதை விடவும் உயர்ந்த இடத்தில் வந்து நிற்பாள்...’’ - கார்த்திகைச் செல்வனின் விவரிப்பில் நமக்கும் கண்கள் கசிகின்றன. ஆனால், அது ஆனந்தக் கண்ணீர்.

``சிறந்து நிற்பாள்... சிவசங்கரி!’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்

நானும் அவளும்

சிந்தனையில் இளமையை விதைப்பவள்!

‘`வெறும் கோலப் போட்டியும் சமையல் போட்டியும் மட்டுமே பெண்களுக்கானவை என்பதை மாற்றி, தன்னம்பிக்கைப் பெண்களை அடையாளப்படுத்துவது, அவர்களின் தலைமைப் பண்புகளை அடையாளப்படுத்துவது போன்றவற்றுக்கான முன்னோடி அவள் விகடன்.

என் அம்மா, மாமியார் போன்ற சென்ற தலைமுறைப் பெண்களையும் கவர்ந்த பத்திரிகை அவள் விகடன். என் மாமியார் 20 வருட அவள் விகடன் பிரதிகளையும் பத்திரமாக வைத்திருக்கிறார். இந்தத் தலைமுறைக்கேற்ப அவர்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ள அவள் விகடன்தான் வாய்ப்பளிக்கிறாள். 

என் உடன்பிறவா தங்கை ஸ்ரீலேகா அமெரிக்காவில் இருக்கிறாள். அவளின் வேலை, சூழல் என எல்லாம் அந்த நாட்டுக்கேற்ப மாறிவிட்டபோதிலும் தமிழ்நாட்டுடன் தன்னை இணைத்துக்கொள்கிற விஷயமாக ஸ்ரீலேகா, அவள் விகட னையே பார்க்கிறாள். 2012-ல் அவளைப் பார்க்க அமெரிக்கா போயிருந்தேன். அவள் விகடனை ஆன்லைனில் படித்தாலும், அச்சுப் பிரதிகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.

அவள் விகடனில் வெளியாகிற நிறைய கட்டுரைகள் பிரமிக்க வைக்கின்றன. 20-ம் ஆண்டு சிறப்பிதழில் வந்திருந்த ரமணியம்மாள் பேட்டியைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். சின்னத்திரைப் பிரபலமாக அவரை இன்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதற்குப் பின்னால் அவர் அனுபவித்த வலிகளையும் வேதனைகளையும் பற்றிய பகிர்வு மனதைத் தொட்டது. ‘கணவர் குடிகாரர், அடித்துக் கொடுமைப்படுத்துவார், வாழ்க்கைத் தேவைகளுக்குக்கூடப் பணம் தந்ததில்லை என்கிற சூழலிலும் அவரை வெறுத்து ஒதுக்க நினைத்ததில்லை’ என்று சொல்லியிருந்தது ஆச்சர்யம்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் ரமணியம்மாளைப் போல இருக்கிறார்கள்.  இப்படி  சாமானியர்களின் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்துவதில் ‘அவளுக்கு’ நிகர் `அவள்’ மட்டுமே.

பெண்களுக்கான தன்னம்பிக்கையையும் உலகை எதிர்கொள்கிற தைரியத்தையும் தருகிற அவள் விகடன், வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகை இல்லை. எந்த வயதினருக்கும் சிந்தனையில் இளமையை விதைக்கிறவள் அவள். சுருக்கமாகச் சொன்னால், `அவள்’ தலைமுறைகளை இணைக்கிற பாலம்!''