தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும் கன்னியாகுமரி பெண்கள்

``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும்  கன்னியாகுமரி பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும் கன்னியாகுமரி பெண்கள்

மீனவர் துயரம்த.ராம் - படங்கள் : ரா.ராம்குமார்

‘`ஒண்ண நம்பித்தானே போனாக
கடலே எங்கள ஏமாத்திட்டியே
உம்பிள்ளைகளுக்குத் தண்டனைய
இப்படியா நீ கொடுக்கணும்
உன்னவிட்டா எங்களுக்கு யாரு இருக்கா
எங்களுக்கு எல்லாவும் நீதானே
சோறு இல்லாட்டியும் மீனத்தின்னு
உசுரு கெடந்தோமே
எப்பவுமே காப்பாத்திட்டு
இப்ப ஏந்தாயி கைவிரிச்ச
போதும்த்தா உங்கோவம்
உம் மடியில மெதக்குற புள்ளைகள
கைநீட்டிக் கேக்குறோம்
கரைக்குக் கொண்டுவந்து கொடுத்துடு தாயி...’’

``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும்  கன்னியாகுமரி பெண்கள்

கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள கிராமங் களில் திரும்பும் திசையெங்கும் அழுகுரல்... அழுகுரல்... அழுகுரல் மட்டுமே.

கடந்த நவம்பர் 30 அன்று கனமழையும் பெருங்காற்றும் கன்னியாகுமரியை நிலைகுலையச் செய்தன. ஒகி புயல் தாக்குவதற்கான அறிகுறிகள் முன்னதாகவே அரசுக்குத் தெரிந்திருந்தாலும், 29-ம் தேதி மாலையில்தான் அந்தந்தக் கிராமங்களிலுள்ள தேவாலயங்களுக்குத் தகவல் கொடுக்கப் பட்டு, பின் அங்கிருந்து மீனவ மக்களுக்கு அது கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், புயல் பற்றிய விவரம் அறியாது மீனவர்கள் அதற்கு முன்னரே கடலுக்குச் சென்றுவிட்டனர். இந்தக் கால தாமதத் தாலும் அலட்சியப்போக்காலும் நூற்றுக் கணக்கான மீனவர்கள் கடலில் மூழ்கி இறந்துபோயிருக்க, ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். போராட்டம், ஆர்ப்பாட்டம் என கன்னியாகுமரியே கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.

``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும்  கன்னியாகுமரி பெண்கள்

“நாங்க அக்கா தங்கச்சிங்க மூணு பேரு. ஒரே அண்ணன் ஆண்டனி. நாங்க நல்லா இருக்கணும்கிறதுக்காக எங்க அண்ணன் 15 வயசுலேயே கடலுக்குப் போக ஆரம்பிச்சிருச்சு. அது கொண்டுவந்து தந்த காசுலதான் எங்க மூணு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் நடந்துச்சு. எங்களுக்கு அம்மாவும் அப்பாவும் எங்க அண்ணன்தான். 27-ம் தேதி கடலுக்குப் போனவனைக் காத்து அள்ளிக்கிட்டுப் போயிடுச்சு” என்றபடியே வெடித்து அழும் செல்வராணியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறலைத் தொடர்கிறார் அவர் தங்கை சகாயராணி... “அண்ணனோட உசுருக்கு இந்த அரசாங்கம் பத்து லட்சம் ரூபாய் விலை பேசியிருக்கு. அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ என்கிற சகாயராணிக்கு ஆறுதல் சொல்ல வழியின்றி தவித்து நின்றோம்.

கடற்கரையில் தலைவிரிகோலமாக அமர்ந்திருந்த ஆக்னஸ் மேரி மண்ணை அள்ளித் தலையில்கொட்டியபடி அழுது புரள்கிறார். “என் வீட்டுக்காரருகூட போன அஞ்சு பேரு திரும்பி வந்துட்டாங்கய்யா. அவர்மட்டும் தண்ணியில விழுந்து செத்துப்போயிட்டாராமே. புயலு வருதுன்னு கரையில இருக்குற எங்ககிட்ட சொல்லி என்னய்யா ஆவப்போவுது? தண்ணியில இருக்குறவங்ககிட்டதானே சொல்லியிருக்கணும்? எம்பையனும் பொண்ணும் அப்பனோட ஒடம்பு கரை ஒதுங்காதான்னு ஓடி ஓடி பார்க்குதுங்க” என்கிறார் கதறித்துடித்து.

``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும்  கன்னியாகுமரி பெண்கள்

நீரோடியிலிருந்து கிளம்பி நீரோடித்துறை வரும் வழி முழுவதும் ஒப்பாரிச் சத்தமும் அழுகுரலும் நம் மனதை வாட்டி எடுக்க, தூரத்தில் ஒரு படகின் மீது அமர்ந்திருந்த ஜான் மேரியின் கதை இன்னும் வதைக்கிறது. “என் புருஷன் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கடலுக்குள்ளதான் இறந்து போனாரு. அவரு போனதுக்கு அப்புறம் என் மூத்த மவனும் இளைய மவனும் கடலுக்குப் போக ஆரம்பிச்சாங்க. மூத்த மவனையும் கடல்தான் எடுத்துக்கிச்சு. அவங்க ரெண்டு பேரும் போன துக்கத்தை இளைய மவன் ரவிதான் ஈடுகட்டினான். இப்போ அவனையும் இந்தக் கடலுக்குப் பறிகொடுத்துட்டு அநாதையா நின்னுக்கிட்டு இருக்கோம். அவன் பொண்டாட்டி பித்துப்புடிச்ச மாதிரி ஆயிட்டா. புள்ளைங்க ரெண்டும் அப்பனோட ஒடம்பு வந்துடாதான்னு கடலையே வெறிக்க வெறிக்க பாத்துக்கிட்டு கெடக்குதுங்க” - அந்தத் தாயின் கண்ணீருக்கு   எப்படி ஆறுதல் சொல்வது?

``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்?’’ - கலங்கும்  கன்னியாகுமரி பெண்கள்

“எங்களுக்கு அஞ்சு புள்ளைங்க. கடலுக்குப் போய் அதில் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் புள்ளைங்கள படிக்கவைக்கறதுக்கே செலவு பண்ணிட்டாரு. சொந்தமா வீடுகூட கெடையாது. 12 வயசுல துடுப்புப்போட ஆரம்பிச்சவருக்கு, இத்தனை வருஷமா அலையைச் சமாளிச்சுதான் வந்தாரு. ஆனா, புயலோட அவரால மல்லுக்கட்ட முடியுமா? இப்போ எல்லாம் முடிஞ்சுபோச்சே.

நாங்க இந்த அரசாங்கத்த நம்பித்தானே வாழுறோம்? அவங்கதானே எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கணும்? ஆனா, இன்னிக்கு இந்த அரசு தூக்க மாத்திரையைப் போட்டுக்கிட்டு தூங்கிடுச்சு. நானும் எம் புள்ளைங்களும் சாப்பிடாம சாவ எதிர்பார்த்துட்டு கெடக்கோம். எங்க வயித்தெரிச்சலும் கண்ணீரும் கடல் தண்ணியோட கரைஞ்சு போயிடுமா?” - கண்கள் சிவக்கக் கொதிக்கிறார் ஜெரோசின் சிலி.

என்ன பதில் சொல்வது?