தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

'சிங்கக்குட்டி’ என்று கொஞ்சலாமா?

'சிங்கக்குட்டி’ என்று கொஞ்சலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
'சிங்கக்குட்டி’ என்று கொஞ்சலாமா?

ஆண் குழந்தையை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி - படம் : சி.சுரேஷ் பாபு

“ஆண் குழந்தை பிறந்த வீடுகளில் மகிழ்ச்சி பெருகி கொண்டாட்டமாகிவிடும். ‘சிங்கக்குட்டி பிறந்திருக்கான்’ என்று அந்தக் குடும்பமே பரவசப்படும். இப்படி அந்தக் குழந்தை பூமியைப் பார்த்த நாளிலிருந்தே அதை ‘ஆண்’ ஆக வளர்த்தெடுக்க ஆரம்பித்துவிடுகிறது நம் சமூக அமைப்பு. அது முதலாவதாகப் பிறந்த ஆண் குழந்தையோ, இரண்டு பெண்களுக்குப் பின் பிறந்த ஆண் குழந்தையோ,‘நீ ரொம்ப ஸ்பெஷல்’ என்கிற எண்ணத்தை உருவாக்குவதுதான் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் முதல் தவறு. பாலினத்தின் அடிப்படையில் ஒரு குழந்தை யைக் கொண்டாடும் மனநிலையைக் கைவிட வேண்டும்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் அபிலாஷா, ஆண் குழந்தை வளர்ப்புக்கான வழிமுறைகளை வழங்குகிறார்.

'சிங்கக்குட்டி’ என்று கொஞ்சலாமா?

பொம்மைகளிலும் வேண்டாம் பாகுபாடு!

மொழி பழகும் முன்னரே குழந்தைகள் பொம்மைகளுடன் மழலையில் உரையாடத் தொடங்கிவிடுவார்கள். அந்தப் பச்சிளம் வயதில்கூட, ‘இந்தா உனக்கு செப்பு சாமான், கிச்சன் செட்’ என பெண் குழந்தைகளுக்கும், ‘இந்தா உனக்குப் பெரிய கார், துப்பாக்கி’ என்று ஆண் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுப்பது தவறு. ‘நீ ஆணாக வளர்’, ‘நீ பெண்ணாக வளர்’ என்ற பாடத்தைப் பொம்மை களிலிருந்தே ஆரம்பித்துவிடாதீர்கள். ஆண் குழந்தைக்கும் கிச்சன் செட் வாங்கித் தரலாம், பெண் குழந்தைக்கும் விமானம் வாங்கித் தரலாம். ‘இந்த வேலை ஆணுக்கானது, இந்த வேலை பெண்ணுக்கானது’ வரையறைகளையும் மனநிலையையும் உடைக்கும் முயற்சியை பொம்மை விளையாட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம்.

'சிங்கக்குட்டி’ என்று கொஞ்சலாமா?

தவறு செய்தால் கண்டியுங்கள்!

செய்யும் தவறுகளிலிருந்து தான் குழந்தைகள் பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அந்தத் தவறுகளிலும் ஆண் குழந்தைகள் கண்டு கொள்ளாமல் விடப்படும்போது, அவர்கள் நல்லவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பெற்றோர் களே தடுக்கிறார்கள். உதாரணமாக, வீட்டில் ஒரு பொருளைப் பெண் குழந்தை உடைத்துவிட்டால், அதைக் கடுமையாகக் கண்டிக்கும் பெற்றோர், அதையே ஓர் ஆண் குழந்தை செய்யும்போது, ‘அவன் அப்படித்தான், முரடன்’ என்று ஏதோ அதை வீரத்தின் குறியீடாகப் பேசுவதைப் பார்த்திருப்போம். எனில், இம்முறை விவரம் தெரியாமல் செய்துவிட்ட அந்தத் தவற்றை, அடுத்த முறை அவன் பெருமையுடனும் உரிமையுடனும் செய்வான்தானே? எனவே, ஆண் குழந்தைகளின் தவறுகளை அணுகும் இந்த மனநிலையைப் பெற்றோர் மாற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்குள் செய்யும்வரைதான் அது நீங்கள் ரசிக்கும் சேட்டை. அதையே வெளியே செய்தால் அது தவறு, குற்றம். உங்கள் மகன் குற்றவாளியாக நீங்களே அடித்தளமிடாதீர்கள்.

வார்த்தைகளில் வெளிப்படட்டும் பொறுப்பு உணர்வு!

குழந்தைகளிடம் நீங்கள் பேசும் வார்த்தைகளிலும், அவர்கள் முன்னிலையில் அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிரும் வார்த்தைகளிலும் ஒரு பெற்றோராகப் பொறுப்பை உணர வேண்டும். ஆண் குழந்தையை ஒருவரிடம் அறிமுகப்படுத்தும்போது, ‘வாரிசுக்கு, வம்சத்துக்கு ஒரு பையன் கிடைச்சுட்டான்’ என்றெல்லாம் பெரிதுவந்து பேசும்போது, அது அவனுக்குள் ஒரு சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸை உருவாக்கும். அதேபோல, ‘என்னிக்கிருந்தாலும் இது இன்னொரு வீட்டுக்குப் போகப்போற புள்ளதானே’ என்பதுபோல பெண் குழந்தைகளைப் பேசும்போது, ‘நம் வீட்டில் நாம் அவ்வளவு முக்கியமில்லை, அண்ணன்/தம்பிதான் அனைவருக்கும் முக்கியம்’ என்று நினைக்க ஆரம்பிப்பாள். அந்த வீட்டிலிருக்கும் ஆண் குழந்தையும் இந்த எண்ணத்தைக் கிரீடம் போல சூட்டிக்கொள்ள ஆரம்பிப்பான். இது, சகோதர - சகோதரி உறவில் பொறாமை, வெறுப்பு போன்ற எதிர்விளைவுகளை உண்டாக்கும். எனவே, பெற்றோர் ஒவ்வொரு வார்த்தையையும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.