தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தீபக்கோலத் திருவிழா!

தீபக்கோலத் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
News
தீபக்கோலத் திருவிழா!

கொண்டாட்டம்ச.மோகனப்பிரியா, விநாயக் ராம் - படங்கள் : வீ.நாகமணி, இ.ஜே.நந்தகுமார், வீ.சதீஷ்குமார், விக்னேஸ்வரன், அகிலன்

கோலம் நம் பாரம்பர்ய அடை யாளம். அதோடு, தீபமும் சேர்ந்தால் தெய்விகம்தான். மார்கழி மாதம் என்றால் கோலங்கள் மூலம் ஊருக்கே ஒரு புதுவண்ணம் கிடைத்துவிடும். பதற்றமும் பரபரப்புமாக மாறிப்போன வாழ்க்கையில் கோலம் மெல்ல மெல்ல நம்மைவிட்டு விலகிப்போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், கோலத்தையும் தீபத்தையும் கொண்டாட்டமாகக் கருதும் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.  அப்படியான வாசகிகளுக்காக `அவள் விகடன்’ இதழும் , `தீபம்’ விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும்  இணைந்து நடத்திய தீபக் கோலத் திருவிழா கொண்டாட்டம் மதுரை, கோவை, சென்னை ஆகிய மூன்று நகரங்களிலும் களைகட்டின. இந்த விழாவில் பங்கேற்க, தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களி லிருந்தும் வாசகிகள் வந்திருந்தார்கள்.

`வாசகிகள் தீபக்கோலங்களை இட்டு முடிக்க எப்படியும் இரண்டு மணி நேரமாகும்' என்கிற எதிர்பார்ப்போடு காத்திருந்தோம். நம் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி அடுத்த 40-வது நிமிடத்தில் கம்பிக் கோலம், ரங்கோலி, வாட்டர் கோலம், வட்டக் கோலம், மனைக் கோலம், புள்ளிக் கோலம், பாம்புக் கோலம் என்று விதம் விதமாக கோலமிட்டு, தீபமேற்றி அசத்தியிருந்தார்கள்.

தீபக்கோலத் திருவிழா!

கோலத்தில் லயித்திருந்த 62 வயது ஹேமலேகாவிடம் பேச்சுக் கொடுத்தோம். “காலைல சூரியன் உதிக்கிறதுக்கு முன் னாடியே நாம எழுந்திருச்சு குனிஞ்சு, நிமிர்ந்து கோலம் போட்டா எந்த நோயும் நம்மை அண்டாதுன்னு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்வாங்க. கோலம் ஒருவகை யோகா, ஒரு வகை தியானம். கால்களை நேரா வெச்சி, இடுப்பை வளைச்சி, தலையைக் குனிஞ்சி கோலம் போடுறதால ரத்த ஓட்டம் சீராகும்.

உள்ளுறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். சிந்தனை ஒருநிலைப்படும். கோலத்தின் ஒவ்வொரு புள்ளியும் சிந்தனையைச் சிதறவிடாம நாம் செய்ற செயல்ல நிலைநிறுத்தும். இப்படி இது மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி. தினமும் இந்தப் பயிற்சியைச் செய்றதால தெளிவான சிந்தனையைப் பெறமுடியும். கண்ணுக்கும் நல்ல பயிற்சி. புள்ளிகளைக் கூர்ந்து கவனிக்கிறதால பார்வைத்திறன் அதிகரிக்கும்.

மார்கழி மாசத்துல அதிகாலையில கோலம் போடுறதுக்குக் காரணம் மங்கலத்துக்கு மட்டுமில்லே... சூரியனோட ஓட்டம் டிசம்பரிலிருந்து மே வரை தெற்கிலிருந்து வடக்குக்கும், ஜூனிலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்குக்கும் மாறும். இந்த மாற்றத்தின்போது பூமத்திய ரேகைல மாற்றம் ஏற்படும். இதனால அறிவு, ஞானம், சக்தி கிடைக்கும்” என்று பேசிக்கொண்டே கோலத்தை நிறைவுசெய்கிறார் ஹேமலேகா. 

தீபக்கோலத் திருவிழா!

தீபக்கோலப் போட்டிக்கு  சுதா பாலாஜி (சென்னை), மகாலக்ஷ்மி மணிகண்டன் (கோவை), ஆஷா (மதுரை) ஆகியோர் நடுவராக இருந்தார்கள். மூவரும் வெவ்வேறு இடங்களிலிருந்தாலும், அவர்களிடமிருந்து  ஒருமித்து வந்த கமென்ட் இதுதான்: “தேர்வாளராக வரவில்லை என்றால், இவங்களோட சேர்ந்து  நாங்களும் ரொம்ப என்ஜாய் பண்ணியிருப்போம்!”

கிரியேட்டிவிட்டி, பிரசன்டேஷன், கலர் காம்பினேஷன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் மேல்மருவத்தூர் பி.தேன் மொழி, திருவேற்காடு எம்.தமிழ்ச்செல்வி, கோடம்பாக்கம் லட்சுமி சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவையில் பவானி பூங்கொடி, கோவை தேன்மொழி, புவனேஸ்வரி ஆகியோரும் மதுரையில் சிவகாசி எஸ்.முருகேஸ்வரி, விருதுநகர் பி.கீதா, தூத்துக்குடி எஸ்.பாகம்பிரியாள் ஆகியோரும் வெற்றியாளர்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.

தீபக்கோலத் திருவிழா!

முதல் மூன்று பரிசுகளோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஏழு பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்துகொண்ட அனைத்து வாசகிகளுக்கும் `தீபம்’ விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்துகொண்ட வாசகிகளின்  பகிர்வுகள் சில...

பெங்களூரு காமாட்சி நாராயணன்: 

“இன்னொரு மாநிலத்துல இருந்தாலும் அவள் விகடனின் நீண்ட கால ரசிகை நான். இதழ் தவறாமல் படிச்சிடுவேன். பெங்களூர்லேருந்து 20 கிலோ கோலப்பொடியோட காலைலதான் சென்னை வந்தேன். எந்த வேலைல இருந்தாலும் அவள் விகடன் ஈவென்ட்ஸ்ல கலந்துக்க மறந்ததில்லை!”

கோவை தேன்மொழி:

“குடும்பமும் வீடும்தான் எங்களைப்போன்ற பெண்களுக்கு தினசரி உலகமா இருக்கு. எப்போதும் ஒரே வட்டத்துக்குள்ள இருக்கிற பெண்களுக்கு இது ரெஃப்ரெஷ்ஷிங் டே!”

தீபக் கோலங்களை இந்த இதழின் கூடுதல் இணைப்யில் காணலாம்.