தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

"நான் இப்போ பவர்ஃபுல் பொண்ணு!" - ரம்யா

"நான் இப்போ  பவர்ஃபுல் பொண்ணு!" - ரம்யா
பிரீமியம் ஸ்டோரி
News
"நான் இப்போ பவர்ஃபுல் பொண்ணு!" - ரம்யா

நேற்று இல்லாத மாற்றம்ஆர்.வைதேகி - படம் : ப.சரவணகுமார்

செம க்யூட்டாக சூப்பர் ஃபிட் டாக இருக்கிறார் ரம்யா. ஸ்டார் ஷோக் களின் தொகுப்பாளினி. விஜய் டி.வி செலிப்ரிட்டிக்களின் செல்லமான ரம்யா, இப்போது ஹீரோயின் அவதாரம் எடுக்கிறார்.

‘`  ‘ஓகே கண்மணி’தான் என் முதல் படம். நான் நடிச்சதைப் பார்த்துட்டு, ‘உனக்கு கிளிசரின் போடாமலே கண்ணீர் வருது... சிச்சுவேஷன் சொன்னாலே எமோஷனலா நடிக்கிறே... நீ ஏன் இவ்வளவு நாள் நடிக்கலை’னு மணி சார் கேட்டார். அதுதான் ஆரம்பம். அதுக்கப்புறம் எல்லாமே நல்லா வொர்க் அவுட் ஆக ஆரம்பிச்சது. மணி சார் கொடுத்த நம்பிக்கைதான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்திருக்கு.  இப்போ வெற்றிமாறன் சார் தயாரிப்புல சமுத்திரக்கனி சாருக்கு ஜோடியா நடிக்கிறேன். வெற்றிமாறன் சார் எனக்குச் சொன்ன ஒரே அட்வைஸ்... ‘கூலா இருங்க... ஃப்ரெஷரை ஏத்திக்காம நீங்களா இருங்க’ன்றது மட்டும்தான். அது நல்லாருக்கு...’’ - `ஃபீல் குட்'டாக ஆரம்பிக்கிற ரம்யாவுக்கு ஆரம்ப காலக் கனவுகள் வேறு.

"நான் இப்போ  பவர்ஃபுல் பொண்ணு!" - ரம்யா

``ஸ்கூல் படிக்கும்போது எனக்கு ஃபேஷன் டிசைனராகணும்கிறதுதான் ஆசை. என் ஆர்வத்தைப் பார்த்துட்டு அப்பா, அப்பவே வெளி நாடுகளுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவார். ஃபேஷன் டிசைனிங்ல நிறைய வரையணும். எனக்கு வரையத் தெரியாது. அப்பதான் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புப் பத்தித் தெரியவந்து அதை செலக்ட் பண்ணினேன். படிச்சிட்டிருக்கும்போது விஜய் டி.வி-யில இன்டர்ன் ஷிப்புக்காக வந்தேன். அந்த வருஷம் நான் `மிஸ் சென்னை' டைட்டில் `வின்' பண்ணியிருந்தேன். அப்படியே விஜய் டி.வி-யில ‘கிங் குயின் ஜாக்’, ‘கலக்கப்போவது யாரு’னு ரெண்டு ஷோஸ்ல வாய்ப்பு கொடுத்தாங்க. அப்படி ஆரம்பிச்ச பயணம், சினிமா வரை வந்திருக்கு...’’ - அளவாகப் பேசுகிற ரம்யா வின் லேட்டஸ்ட் அவதாரம் பவர் லிஃப்டர்.

‘`கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலும் வெயிட் போடற உடல்வாகு எனக்கு. கன்னாபின்னானு டயட் பண்ணியிருக்கேன். ட்ரெட் மில்லுல ரெண்டு மணி நேரம் ஓடியிருக்கேன். ஏரோபிக்ஸ், ஜும்பானு எதுவுமே எனக்கு செட் ஆகலை.

ஃபிட்னஸ்ல என் ஆர்வத் தைப் பார்த்துட்டு என் கோச் ஜோத்ஸ்னா `பவர் லிஃப்டிங்' பண்ணச் சொல்லி என்கரேஜ் பண்ணினார். எல்லாப் பெண்களுக்கும் இருக்கிற சந்தேகங்களும் பயங்களும் எனக்கு இருந்தன. பவர் லிஃப்டிங்னா வெயிட் தூக்கணும், வெயிட் தூக்கினா இடுப்பு பிடிச்சுக்கும். முதுகுல பிரச்னை வரும். தாயாக முடியாது. தோற்றமே ஆண் மாதிரி மாறிடும். இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள். அப்ப என் கோச்தான் `அப்படி எதுவும் நடக்காது'னு தைரியம் சொன்னார். பவர் லிஃப்டிங் பண்ண ஆரம்பிச்ச பிறகு என் உடம்பு டோன் ஆச்சு. இதுதான் எனக்கான வொர்க் அவுட்டுனு என் உடம்பே எனக்கு உணர்த்தினது.

ஆரம்பத்துல அவங்க  60 கிலோ வெயிட்டைத் தூக்கச் சொல்லும்போது, ‘அதெப்படி என்னால முடியும்... என் வெயிட்டே 60 கிலோ இருக்காதே’னு தயங்கியிருக்கேன். ஒருகட்டத்துல அதையெல்லாம் தாண்டி, பவர் லிஃப்டிங் மாநிலப் போட்டிகள்ல கலந்துக்கிற அளவுக்கு முன்னேறினேன். அந்தச் சூழல், அங்கே எனக்குக் கிடைக்கிற வரவேற்பு, கூச்சல், எனக்குள்ள இருக்கிற வெறி எல்லாம் சேர்ந்து நான் எக்ஸ்ட்ரா வெயிட்டே தூக்கியிருக்கேன். கோல்டு மெடல்ஸ் வாங்கியிருக்கேன்.

"நான் இப்போ  பவர்ஃபுல் பொண்ணு!" - ரம்யா

மீடியா வேலையில எனக்கொரு விதமான தோற்றம் வேணும். ஆனா, பவர் லிஃப்டிங் பண்ணும்போது பயங்கரமா பசிக்கும். நிறைய சாப்பிடணும். அப்படிச் சாப்பிட்டா உடல்வாகு மாறும். ரெண்டையும் பேலன்ஸ் பண்றது பெரிய சவால். அதான் அப்பப்போ கொஞ்சம் பிரேக் விட்டுப் பண்ணிட்டிருக்கேன்...’’ - பவர்ஃபுல் ரம்யா, அத்தனை பிரபலங்களின் கவனஈர்ப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர்.

‘`மீடியா வாழ்க்கையில மறக்க முடியாத சந்தோஷத் தருணங்கள் நிறைய இருக்கு. அமீர் கான், அமிதாப் பச்சன், ஷாருக் கான்-னு பெரிய பிரபலங்களைப் பேட்டி எடுத்திருக்கேன். சமீபத்துல பண்ணின ‘மெர்சல்’ லாஞ்ச் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. கடைசியா மேடையேறின விஜய், ‘ரம்யா நல்லா ஹோஸ்ட் பண்ணீங்க’னு மேடையிலயே பாராட்டினார்...’’ - மெர்சலாக ஃபீல் பண்ணுகிறவரின் மெமரியில் எவர்க்ரீன் பாராட்டும் உண்டு.

‘` `குசேலன்’ பட ஷோவுக்கு நான்தான் ஆங்க்கரிங்.  ஸ்டேஜ்ல பேசிட்டுக் கிளம்பின ரஜினி சார், திரும்ப ரெண்டடி பின்னாடி வந்து என் ஆங்க்கரிங்கைக் குறிப்பிட்டுப் பாராட்டிட்டுப் போனார். காலத்துக்கும் அந்த இன்ப அதிர்ச்சியிலேருந்தே மீள முடியாதுனு நினைச்சிட்டிருந்த எனக்கு அடுத்த சர்ப்ரைஸும் வந்தது. ரஜினி சார்கூட போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டு ‘லிங்கா’ செட்டுக்குப் போயிருந்தேன். ‘ரம்யா யு ஆர் லுக்கிங் வெரி நைஸ்... என் ஃபேவரைட் ஆங்க்கர் நீங்க... நிறைய பார்த்திருக்கேன்’னு சொன்னபோது எனக்கு வார்த்தைகளே வரலை. எவ்வளவு பெரிய மனிதர், என்  பேரை நினைவு வெச்சுக்கிட்டு என்னைப் பாராட்டிப் பேசறார்னா...’’ - வார்த்தைகள் சிக்குகின்றன ரம்யாவுக்கு.

‘`நேரம் போதலைங்கிறதெல்லாம் வெறும் நினைப்புதான். நான் அதிகாலையில எழுந்திருக்கிற பழக்கம் உள்ளவள். வொர்க் அவுட் பண்ணிட்டுத்தான் மற்ற வேலைகளை ஆரம்பிப்பேன். பகல் வேளை முழுவதும் நான் ரொம்ப ஆக்டிவா இருப்பேன்.  சாயந்திரமானா நான் கற்கால மனுஷி மாதிரி. இருட்டானா எனக்குத் தூக்கம் வந்துடும். என் ஃப்ரெண்ட்ஸ் யாராவது நைட் 8 மணிக்கு டின்னர் போகலாம்னு கூப்பிட்டாங்கன்னாலே, ‘ஐயோ 8 மணியாச்சே’னு கேட்பேன். நைட் ஷோ படத்துக்குப் போக மாட்டேன். இப்படியே பழகிட்டதாலயோ என்னவோ எனக்கு டைம் பத்தலைங்கிற ஃபீலிங்கே வந்ததில்லை. சரியான ப்ளானிங் மட்டும்தான் முக்கியம்...’’

பேட்டியையும் ஃபிட்டாக முடித்தார் ரம்யா.