
கற்பது கற்கண்டுஞா.சக்திவேல் முருகன் - படங்கள் : ப.பிரியங்கா

ஆடை வடிவமைப்பு என்றால் டெய்லரிங் என்று இருந்த நிலை மாறி, இப்போது புதுப்புது தொழில்நுட்பங்கள், மேலாண்மை எனப் பல்வேறு பிரிவுகளாக விரிவடைந்து அனைவரையும் ஈர்க்கிறது இத்துறை.
மத்திய அரசின் `தேசிய ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனம்’ (National Institute of Fashion Technology - NIFT) சென்னை, பெங்களூரு, கன்னூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என இந்தியா முழுவதும் 16 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

``NIFT-ல் படிக்க நாடு முழுவதும் உள்ள 3,000 இடங்களுக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கிறார்கள். கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகும் மாணவர்கள் ஆண்டுக்கு நான்கு லட்சம் முதல் பன்னிரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள்” என்று ஆர்வம் தூண்டுகிறார் சென்னை NIFT இயக்குநர் அனிதா மனோகர்.
``இங்கு டிசைன் சார்ந்த இளநிலை பட்டப் படிப்பாக ஆக்ஸசரீஸ் டிசைன், ஃபேஷன் கம்யூனிகேஷன், ஃபேஷன் டிசைன், பின்னலாடை டிசைன், லெதர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் படிப்புகளும், டெக்னாலஜி சார்ந்த படிப்பாக அப்பேரல் புரொடெக்ஷன் படிப்பும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. முதுநிலை பட்டப்படிப்பாக, ஃபேஷன் மேனேஜ்மென்ட், ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகள் இருக்கின்றன” என்கிறவர், ``இளநிலை டிசைன் பட்டப்படிப்பில் சேர ப்ளஸ் டூவில் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். மதிப்பெண் முக்கியமல்ல; படைப்பாற்றல் திறனும் ஆர்வமும்தான் அவசியம். அப்பேரல் புரொடெக்ஷன் படிப்பில் சேர ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்களும் டிப்ளோமா படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 23-க்குள் இருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்பில் அப்பேரல் டெக்னாலஜி படிப்பில் சேர பி.இ அல்லது பி.டெக் படித்தவர்களும், ஃபேஷன் மேனேஜ்மென்ட் சார்ந்து ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இளநிலைப் பட்டப் படிப்புக்காக விண்ணப்பிக் கிறவர்களுக்கு க்ரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட் மற்றும் ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் ஆகிய தேர்வுகள் நடை பெறும். இதில் க்ரியேட்டிவ் எபிலிட்டி டெஸ்ட்டில் வரைதிறனையும் வண்ணத்திறனையும் சோதிக்கும் கேள்விகள் இடம்பெறும். ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்டில் குவான்டிடேட்டிவ், குவாலிடேட்டிவ், ரீசனிங் வகை கேள்விகளுடன் ஆங்கில அறிவைப் பரிசோதிக்கும் கேள்விகளும் கேட்கப்படும். இந்தத் தேர்வு கடினமானதாக இருக்காது என்பதால், பெரிய அளவில் தயாரிப்புப் பணிகள் தேவையில்லை” என்று விளக்குகிறார் பேராசிரியர் அனிதா மனோகர்.
நுழைவுத் தேர்வுமுறை
நிஃப்ட் ரிசோர்ஸ் சென்டரின் தலைவர் கோபால கிருஷ்ணன், ``நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களின் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இறுதியாக `சூழ்நிலைத் தேர்வு’ (situation test) நடத்தப்படும். இந்தத் தேர்வில் மாணவர்கள் படைப்பாற்றல் திறனைக் காண்பிக்கும் வகையில் முப்பரிமாண வடிவத்திலும் இதர வடிவங்களிலும் பொருள்களை வடிவமைத்துக் காண்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் 16 கல்லூரிகளிலுள்ள இடங்களைத் தேர்வு செய்யலாம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
வேலைவாய்ப்பு
``மாணவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று ஒரு செமஸ்டர் படிக்க வாய்ப்பு வழங்குகிறோம். நான்காமாண்டு படிக்கும் போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களுக்கு வேலை கிடைத்துவிடும்” என்கிறார் உதவிப் பேராசிரியர் ஸ்ரீதர்.
