
ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்
எறும்புக் கூட்டத்தைப் போல நீண்டிருந்த அந்த வரிசையில் ஒரு பெண் மட்டும் தனித்துத் தெரிந்தார். இரண்டு குழந்தைகள் அந்தப் பெண்ணின் காலைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு குழந்தையை அவர் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். மற்ற ஆப்பிரிக்கப் பெண்களைப் போலதான் இருந்தார் என்றாலும், அவர்கள் அனைவரிடமிருந்தும் அவர் மாறுபட்டிருந்தார். அவர் யாருடனும் கதை பேசிக் கொண்டிருக்கவில்லை. எப்போது என் முறை வரும் என்று தொலைவிலிருந்த தண்ணீர்த் தொட்டியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கவும் இல்லை. அவ்வளவு ஏன், `மா' என்று பிடித்து இழுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளைக்கூட அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.
தலையைக் குனிந்து தன் கையிலிருந்த புத்தகத்தை அவர் வாசித்துக்கொண்டிருந்தார். ஜிம்பாப்வேயில் இருந்த அந்தக் குக்கிராமத்துக்கு நிச்சயம் இது ஓர் அபூர்வமான காட்சிதான். அதைவிட ஆச்சர்யம் அவர் படித்துக்கொண்டிருந்தது ஏதோ ஒரு புத்தகமல்ல, லியோ டால்ஸ்டாய் எழுதிய `அன்னா கரீனினா'. ஆச்சர்யம் இத்துடன் முடிவடையவில்லை. அவரிடம் இருந்தது, அந்தப் பெரிய நாவலில் இருந்து கிழிக்கப்பட்ட ஒரு சிறிய பகுதி மட்டும்தான். அதைத்தான் அவர் ஓயாமல் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருந்தார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு, இலக்கியத்துக்கான நோபல் விருது பெற்ற டோரிஸ் லெஸ்ஸிங், தனது நோபல் ஏற்புரையின்போது பகிர்ந்துகொண்ட சம்பவம் இது. நோபல் விருதுகள் அளிக்க ஆரம்பித்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட பிறகும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் பதினோராவது பெண் எழுத்தாளராகத்தான் லெஸ்ஸிங் இருக்கிறார். இந்தப் பரிசைப் பெறும் மூத்த எழுத்தாளரும் இவரே. அப்போது அவர் வயது 88. லெஸ்ஸிங் பிரிட்டனைச் சேர்ந்தவர். ஆனால், அவர் அதிகம் பயணம் செய்தது ஜிம்பாப்வேயில். இறக்கும்வரை அவருடைய உயிரோடும் உணர்வோடும் ஒட்டியிருந்த ஒரே நாடும் அதுவேதான்.
இரானில் பிறந்த லெஸ்ஸிங் இளம் வயதிலேயே ஜிம்பாப்வேவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்து விட்டார். அங்கேதான் 13 வயது வரை படித்தார். 15 வயதில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலையை எடுத்துக்கொண்டார். இருமுறை திருமணம் செய்துகொண்டு இருவரையும் பிரிந்தார். ஒரு மகனை மட்டும் அழைத்துக்கொண்டு ஜிம்பாப்வேயில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார்.
அந்த ஜிம்பாப்வே பெண் ஏன் கிழிக்கப்பட்ட புத்தகத்தைப் படிக்க வேண்டும்? லெஸ்ஸிங் விவரிக்கிறார்.
`ஒருநாள் ஐ.நா-வில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் விமானத்தில் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார். நீண்ட பயணம் என்பதால் அவர் தன்னுடன் டால்ஸ்டாயின் புத்தகத்தைக் கொண்டுவந்திருந்தார். புதிய வழவழப்பான அட்டையைக்கொண்ட பெரிய புத்தகம். கையில் எடுத்த அடுத்த கணமே அதன் அட்டையை அகற்றிவிட்டு, புத்தகத்தைக் கிழித்து நான்கைந்து சிறிய பகுதிகளாக ஆக்கிக்கொண்டார். சாவகாசமாக ஒரு பகுதியைப் படிப்பார். படித்து முடித்ததும் விமானப் பணிப்பெண்ணை அழைப்பார். அதை அவர் வாங்கிக்கொண்டு அதே விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவந்த அவருடைய உதவியாளரிடம் ஒப்படைப்பார். அவர் படித்து முடித்ததும் புத்தகம் வீசியெறியப்பட்டது. அதில் ஒரு துண்டு எப்படியோ ஜிம்பாப்வே பெண்ணுக்குக் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கு லியோ டால்ஸ்டாயை மட்டுமல்ல... தான் படித்துக்கொண்டிருப்பது `அன்னா கரீனினா' என்றுகூடத் தெரியாது. ரஷ்யா என்றொரு நாடு இருப்பதைக்கூட அவர் அறிந்துவைத்திருந்தாரா என்று தெரியாது. இருந்தும் அவரால் அன்னாவுடன் ஒன்றமுடிந்திருக்கிறது. தன்னிடமுள்ளது முடிவில்லாத கதை என்பது அவருக்குத் தெரியும். முழுக் கதையைப் படிக்க முடியும் என்னும் நம்பிக்கையும் அவருக்கு இல்லை.'
பணவீக்கம் அதிகரிக்கும் நேரங்களில் ஜிம்பாப்வே யில் ஒருவர் புத்தகம் வாங்க வேண்டுமானால், ஓராண்டு அல்லது பல்லாண்டு சம்பளத்தை மொத்தமாகத் தர வேண்டியிருக்கும். அங்குள்ள பள்ளிகள் பலவற்றில் புத்தகம் இருக்காது. தரையில் அழுக்கில் கோடு போட்டு, இரண்டும் இரண்டும் நாலு என்று ஆசிரியர் வகுப்பெடுப்பார். ஜாம் பாட்டிலின் மூடியைப் படித்து ஆங்கிலம் கற்றுக்கொண்ட சிலரை லெஸ்ஸிங் தனது பயணத்தில் சந்தித்திருக்கிறார். சிறு செய்தித்தாள் நறுக்குகளைப் புதையல்போல பத்திரப் படுத்தி வைத்திருந்தவர்களையும் அவர் சந்தித்திருக்கிறார்.

`ஒருமுறை அட்டைப் பெட்டி நிறைய புத்தகங்களைக் கொண்டுசென்று ஒரு கிராமத்தில் இறக்கினேன். அதைப் பார்த்த பலர் மகிழ்ச்சியில் வாய்விட்டு அழ ஆரம் பித்து விட்டார்கள்' என்கிறார் லெஸ்ஸிங்.
பிறகு, லண்டன் திரும்பியபோது ஒரு பள்ளிக்கு அவர் செல்ல நேர்ந்தது. அதி நவீனமான, பளபளப்பான கட்டடம். கணிப் பொறிகள் மூலைக்கு மூலை தென்பட்டன. ஆசிரியர்கள் அழகாக உடுத்தியிருந்தனர். அறிவியல்கூடம் மின்னிக்கொண்டிருந்தது. மாணவர்களுக்கு வசதியான இருக்கைகளும் மேஜைகளும் அமைக்கப்பட்டிருந்தன. கட்டடத்தைச் சுற்றி அழகான மரங்கள். கத்தரிக்கப்பட்ட பூச்செடிகள். விசாலமான விளையாட்டு மைதானம். சிறிய சாக்பீஸ் துண்டுகளைக்கூடக் கவனமாக பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொள்ளும் ஜிம்பாப்வே ஆசிரியர்களையும், `அச்சிட்ட காகிதம் ஏதேனும் கிடைக்குமா' என்று குப்பைக்கூளங்களைக் கிளறும் மாணவர்களையும் நினைத்துப் பார்த்துக் கொண்டார் லெஸ்ஸிங்.
ஜிம்பாப்வேயின் வறுமையையும் லண்ட னின் வளமும் அருகருகே நின்றுகொண்டு அவரைத் துளைத்தெடுத்தன. இரண்டும் இரு வேறு உலகங்கள். இந்த இரண்டையும் லெஸ்ஸிங் தனது நோபல் பரிசு ஏற்புரையில் கொண்டுவந்து நிறுத்திய தற்கு ஒரு காரணம் இருந்தது. நோபல் பரிசு யாருக்கெல்லாம் கிடைக்கப்போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்த விரும்பினார். ஜிம்பாப்வேயில் இருந்து எழுத்தாளர்கள் தோன்றுவதே அபூர்வம் என்னும் நிலையில் நோபல் எங்கே அவர்களுக்குக் கிடைக்கப்போகிறது? ஜிம்பாப்வே மூச்சுத்திணறச் செய்யும் இருளில் உறைந்துகிடக்கிறது. மாறாக, லண்டன் ஒளிமிகுந்ததாக இருக்கிறது.
இங்கே எழுத்தாளர்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். நோபல் வெல் பவர்களும் இவர்களாகவே இருக்கிறார்கள்.
தண்ணீருக்காகக் காத்திருந்த அந்த ஜிம்பாப்வே பெண்ணுக்குத் தன் வாழ்நாளில் `அன்னா கரீனினா' முழுமையாக வாசிக்கக் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால், அவருடைய குழந்தைகளுக்காவது அது கிடைக்க வேண்டும் அல்லவா? லண்டன் பள்ளியிலிருந்து விடைபெறுவதற்கு முன்பு திடீரென்று லெஸ்ஸிங்குக்கு நினைவுக்கு வந்தது. அங்கிருந்த ஓர் ஆசிரியரைக் கேட்டார். `இங்குள்ள மாணவர்கள் நூலகத்தை நன்றாகப் பயன்படுத்துகிறார்களா?' அந்த ஆசிரியர் புன்னகைத்தபடியே சொன்னார்...
`உங்களுக்குத் தெரியாததா லெஸ்ஸிங், இப்போதெல்லாம் யார் புத்தகம் படிக்கிறார்கள்?'