தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்

``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி

‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா... பார்க்கறியா’ என்கிற டயலாக் சினிமா சிங்கத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, கீதா டாண்டனுக்கு நிச்சயம் பொருந்தும். இந்தப் பெண் சிங்கம்,  பாலிவுட்டின் பிரபல ஸ்டன்ட் உமன். தமிழிலும் சில படங்களில் ஸ்டன்ட் உமனாகப் பணிபுரிந்திருக்கிறார். வாழ்வில் துரத்தித் துரத்திவந்த துயரங்களை இடக்கையால் புறந்தள்ளியவர், இன்று பாலிவுட்டின் `பவர்ஃபுல்' உமன்!

``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்

‘`நான் நாலாவது படிச்சுட்டிருந்தபோதே அம்மா இறந்துட்டாங்க. அப்பா `ஜாக்ரன்'னு சொல்லக்கூடிய பூஜைகள்ல பாட்டுப் பாடற (பெண் தெய்வங்களுக்காக விடிய விடியப் பாட்டுப் பாடுவது) வேலை செய்துட்டிருந் தார். நிலையில்லாத வருமானம். அதனால ஏழாவதுக்குமேல என்னால படிக்க முடியலை. சின்ன வயசுல ஆம்பளைப் பையன்போலவே தெருக்கள்ல விளையாடிக் கிட்டும் சேட்டை பண்ணிக்கிட்டும் திரிஞ்சுட்டிருப்பேன். ‘இவளுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாதான் அடங்குவா’னு 15 வயசுல 24 வயசுக்காரருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.

கணவன் என்ற பேர்ல ஒரு மிருகத்துக்கு வாழ்க்கைப் பட்டேன்னுதான் சொல்லணும். அவனைப் பொறுத்தவரைக்கும் மனைவிங்கிறவ அவனுக்கு சமைச்சுப்போட்டுக்கிட்டு,  தேவையானபோது உடல்ரீதியான இச்சை களைத் தீர்த்து வெச்சுக்கிட்டு, அவனுக்கோர் அடிமையா இருக்கணும். அப்படி யெல்லாம் செய்தாலும் அடிச்சுத் துவைப்பான். கல்யாணமான அடுத்த வருஷமே கர்ப்பமானேன். வயித்துல குழந்தை இருக் கிறதால இனிமே நம்மை அடிக்க மாட்டான்னு சந்தோஷப்பட்டேன். அதுக்கப்புறம்தான் இன்னும் மோசமா நடந்துகிட்டான். அடுத்தடுத்து ரெண்டு குழந்தைகள்... வாழ்க்கையில எதுவும் சரியா அமையலை.

20 வயசு வரை எல்லா கொடுமைகளையும் பொறுத்துக்கிட்டேன். ஒரு நாள் திடீர்னு ஞானோதயம் பிறந்தது. `இதுவா வாழ்க்கை? இதுக்குத்தானா பிறந்தேன், வாழ்ந்தேன்? ரெண்டு குழந்தைகளைப் பெத்தேன்? இதுலேருந்து விடுபட்டே ஆகணும்'னு முடிவெடுத்தேன்.

``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்

நான் சின்ன வயசுலயே அம்மாவை இழந்தவள். சந்தோஷமா துள்ளித் திரிய வேண்டிய குழந்தைப் பருவத்துல அப்படியொரு வாழ்க்கை வாழறது எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்குத் தெரியும். அதே மாதிரியான வாழ்க்கை என் குழந்தைங்களுக்கும் இருக்கக் கூடாதுன்னு நினைச் சேன். பொண்ணுக்கு மூன்றரை வயசும் பையனுக்கு ஒன்றரை வயசும் இருந்தபோது வீட்டைவிட்டு வெளியேறினேன். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ணப் போறோம்னுகூட தெரியாத நிலை. தெரிஞ்சவங்ககிட்டல்லாம் போய் ‘ஒரு மாசம் மட்டும் தங்கறதுக்கு இடம்கொடுங்க... அதுக்குள்ள ஒரு வேலையைத் தேடிக்கிட்டுக் கிளம்பிடறேன்’னு கெஞ்சியிருக்கேன். யாராவது இரக்கப்பட்டு இடம்கொடுக்கத் தயாரானா, உடனே என் புருஷன் அந்த இடத்துக்கு வந்துடுவான். ‘அவ நடத்தை சரியில்லாதவள். அவளை வீட்டுக்குள்ள வெச்சுக் கிட்டீங்கன்னா சரியா வராது. துரத்துங்க’னு மிரட்டுவான். அவனுக்குப் பயந்து எங்களை யாரும் அவங்க வீடுகள்ல தங்க அனுமதிக்கலை.

கடைசியா என் அக்கா வீட்டுல அடைக்கலம் புகுந்தோம். அங்கேயும் வந்து பிரச்னை பண்ணினான். எங்களுக்கு இடம்கொடுத்ததுக்காக என் அக்காவையும் சேர்த்து அடிச்சான். எவ்வளவு காலத்துக்குதான் இன்னொருத்தரைச்  சார்ந்து வாழறது? நடக்கறது நடக்கட்டும்னு வெறித்தனமா வேலை தேடினேன்.

பார்க்கிறவங்ககிட்டல்லாம்  ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்கன்னு கேட்டுட்டுத்தான் அடுத்த வார்த்தையே பேசுவேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்யத் தயாரா இருந்தேன். ராவும் பகலுமா கையே காய்ச்சுப்போகிற அளவுக்கு நூற்றுக்கணக்குல ரொட்டி போட்டுக் கொடுத்திருக்கேன். `ரெண்டு ரூபா தரேன், இந்த வேலையைச் செய்யறியா'னு யாராவது கேட்டாகூட தயங்காம செய்திருக்கேன். அந்த ரெண்டு ரூபாகூட வாழ்க்கையில எனக்கு அவ்வளவு முக்கியமா இருந்திருக்கு. எல்லார்கிட்டயும் என்னை நடத்தை சரியில்லாதவள்னு சொல்லி அசிங்கப்படுத்தின புருஷனுக்கு முன்னாடி ஊரே என்னை மெச்சற அளவுக்கு ஏதாவது சாதிச்சுக்காட்டணும்கிற வெறி மட்டும் இருந்தது. வேலை கிடைக்குமானு கேட்கறவங்களுக்கு நான் தனியாள்னு தெரிஞ்சா போதும்... உதவி கேட்கற ஆண்களோட பார்வையே மாறிடும். உடனே ‘வர்றியா... நிறைய பணம் கிடைக்கும்’பாங்க. `எனக்குப் பணம் முக்கியம்தான். ஆனா, அது நான் உடலை வருத்தி வேலை செய்யறது மூலமா சம்பாதிக்கணும்னு நினைக்கிறேன்'னு சொல்லி ஒதுங்கிடுவேன்...’’ - தனித்து வாழும் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிற சமூகத் துயரத்தைப் பிரதிபலிக்கிறது கீதாவின் பேச்சு.

``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்

கீதாவின் வாழ்வில் முதல் பகுதி சென்டிமென்ட் கலந்த எமோஷனல் எபிசோடு என்றால் அடுத்த பாதி த்ரில்லான, தில்லான ஆக்‌ஷன் எபிசோடு.

‘`எந்த வேலை கொடுத்தாலும் செய்யத் தயாரா இருந்த எனக்கு ஒருமுறை பாங்கரா டான்ஸ் ஆடற வாய்ப்பு வந்தது. டான்ஸ் ஆடியே பழக்கமில்லை. ஆனாலும், ஆடினேன். அது அப்படியே கல்யாணங்கள்ல டான்ஸ் ஆடற அளவுக்கு வளர்ந்தது. அங்கே என்னைப் பார்த்த ஒருத்தங்க, ‘சினிமாவுல ஸ்டன்ட் பண்ண வர்றியா’னு கேட்டாங்க. எனக்குத் தேவை பணம்... என் குழந்தைங்களுக்குச் சாப்பாடு. அதனால அந்த வேலை எப்படியிருக்கும்னுகூட யோசிக்காம `ஓகே' சொல்லிட்டேன். முதல் படத்தோட பெயர்கூட நினைவில்லை. ஆனா, அந்தப் படத்துல ஒரு ஃபயர் ஸ்டன்ட் பண்ணினபோது என் முகமெல்லாம் தீக்காயம். வாழ்க்கையில எத்தனையோ வலிகளைப் பார்த்துட்ட எனக்கு, அது பெரிசா தெரியலை. காயம் ஆறினதும் மறுபடி ஸ்டன்ட்டுக்குத் தயாரானேன். இந்தமுறை அதுக்கான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு பக்காவா ரெடியானேன். டிரைவிங் கத்துக்கிட்டேன். இந்தியன் சினிமா இண்டஸ்ட்ரியில கார் க்ராஷ் சீன்ல ஸ்டன்ட் பண்ண அதுவரை எந்தப் பெண்ணும் வந்ததில்லை. நான் அதையும் செய்தேன். பொண்ணுங்கிறதை மறந்து, ஆண்கள் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். மணிக்கணக்கா வெயில்ல நிற்கறது, மணல்லயும் சேறு சகதியிலயும் விழுந்து ஃபைட் பண்றதுனு எதுக்கும் தயங்கினதில்லை...’’ - போல்டு ஸ்டேட்மென்ட் விடுப்பவர், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஷாருக் கான் உள்பட பல பிரபலங்களுடன் பணிபுரிந்தவர். ஐஸ்வர்யா ராயின் ஆஸ்தான `பாடி டபுள்' இவர்தான். ‘ஜஸ்பா’ படம் வரை இந்தக் கூட்டணி தொடர்ந்திருக்கிறது.

விபத்துகளும் வலிகளும் கீதாவுக்கு அன்றாட நிகழ்வுகள். ``கொடுமைப்படுத்தி என் வாழ்க்கையைச் சீரழிச்ச கணவனுக்கு முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும்கிற எண்ணத்துக்கு முன்னாடி வலியோ, வேதனையோ ஒண்ணுமே இல்லை. ஒருமுறை, முதுகெலும்புல ஃப்ராக்சராகி ஆஸ்பத்திரியில இருந்தேன். நான் மீண்டு வருவேன்னு யாரும் எதிர்பார்க்கலை. அந்த நிலைமையிலயும் ஆஸ்பத்திரிக்கே என்னைத் தேடிவந்தார் ஹவுஸ் ஓனர். ‘உன்னால இனிமே சம்பாதிக்க முடியாது. அதனால வீட்டைக் காலி பண்ணிடு’ன்னார்.  உடம்பு சரியாகிறவரைக்கும் என் குழந்தைங்களையும் என்கூடவே ஆஸ்பத்திரியில வெச்சிருந்தேன்.  அடிபடறதும் ரத்தம் சொட்ட நிற்கறதும் தினசரி வாடிக்கையான விஷயங்கள். அதைப் பார்த்தெல்லாம் ஒருநாளும் பயந்து ஒதுங்கினதில்லை. உண்மையான பயம் வாழ்க்கையை எதிர்கொள்வதுதான்...’’ -  எதிர்கொண்டு வெற்றியும் கண்டிருப்பவர், இப்போது படங்களுக்கான நேரம் போக மீதி நேரத்தில் ‘சந்திரகாந்தா’, ‘சந்திர நந்தினி’ மாதிரியான புராண, இதிகாச டி.வி தொடர்களில் பிஸி.

``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க!'' - கீதா டாண்டன்

‘`என் மகள் ஹர்ஷாவுக்கு 17 வயசும்  மகன் பிரதாப்புக்கு 15 வயசும் ஆகுது. அவங்களுக்கும் சினிமாவுக்கு வரணும்னு ஆசை. எனக்கு ஆட்சேபனை இல்லை. அதேநேரம் இங்கே உள்ளே வர்ற எல்லாரும் ஜெயிக்கிறதில்லைங்கிறதையும் அவங்களுக்குப் புரியவெச்சிருக்கேன். அதனால படிப்பும் வாழ்க்கையில முக்கியம்னு சொல்லியிருக்கேன். என் அண்ணன் போதைக்கு அடிமையாகி இறந்துட்டாரு. தம்பிக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. அதைக் கண்டுபிடிச்சு `டீஅடிக்‌ஷன் சென்டர்'ல சேர்த்து இப்போ நார்மலாகிட்டான். அக்கா வுக்குக் கல்யாணமாகி நல்லாயிருக்கா.

என் சபதம் நிறைவேறிடுச்சு. குழந்தைப் பருவத்துல தொடங்கி 22 வயசு வரை வாழ்க்கையில வசதின்னா என்னன்னே பார்க்காத எனக்கு, இன்னிக்கு வசதியும் சந்தோஷமும் நிரந்தரமாகியிருக்குன்னா கடவுளின் கருணைதான் காரணம். பாலிவுட்ல,  ‘கீதாவா... நல்ல பெண்ணாச்சே... திறமையானவளாச்சே’னு பாராட்டறாங்க.

இன்னும் அஞ்சு வருஷங்கள் வரை ஸ்டன்ட் பண்ணிட்டு, அப்புறம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சென்டர் ஆரம்பிக்கணும். நான்பட்ட கொடுமைகளை வேற எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது. சிங்கிள் உமன்னா அவ தன்னம்பிக்கை இழந்தவள், பலவீனமானவள்னு இனி இந்தச் சமூகம் பார்க்கக் கூடாது. உடலளவுலயும் மனசளவுலயும் பலசாலிகள்னு நிரூபிக்கிற அளவுக்கு அவங்களுக்காக ஓர் அமைப்பைத் தொடங்கணும். எனக்கு எல்லாம் கொடுத்த கடவுள் அவங்களுக்கும் கண்டிப்பா கொடுப் பார். உங்க வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சுக்கோங்க. அந்த சந்தோஷத்துக்குப் பணம் ரொம்பவே முக்கியம். அதேநேரம் உங்களுக்கு உடன்பாடில்லாத வேலைகளைச் செய்யத் தயாரானீங்கன்னா, அதனால கிடைக்கக்கூடிய பணத்தின் மூலமா வரும் சந்தோஷத்தை இழந்துடுவீங்க. இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை உங்களுக்காக வாழுங்க...’’ - மெசேஜ் சொல்கிற கீதாவுக்குத் தன் வாழ்க்கை பயோபிக்காக எடுக்கப்பட வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது.

வாழ்க்கை வரலாறாகட்டும்!