தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு
பிரீமியம் ஸ்டோரி
News
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

டீகிளட்டரிங்சாஹா - ஓவியங்கள் : ரமணன்

ரு சில நாள்கள் உங்கள் மனநிலை உற்சாகமாகவும் குழப்பங்கள் இன்றியும் இருக்கிறது. அதன் பின்னணியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த நிகழ்வும் இருக்காது.

வேறொரு நாளில் முற்றிலும் மாறுபட்ட மனநிலையை உணர்வீர்கள். எதைக் கண்டாலும் எரிச்சல், யாரைப் பார்த்தாலும் கோபம் என மோசமான அந்த மனநிலைக்கு எந்தக் காரணமும் இல்லை என்றே நினைப்பீர்கள்.

ஆனால், இரண்டுவிதமான மனநிலை களுக்குமே காரணங்கள் உள்ளன. காலையில் வேலைக்குக் கிளம்பும்போது `சிங்க்' முழுக்க நிரம்பி வழியும் பாத்திரங்கள்... மடிக்காமல் மலைபோலக் குவிந்திருக்கும் துணிமணிகள்... வீடெங்கிலும் இறைந்துகிடக்கும் பொருள்கள்... வேலையிடத்தில் சுத்தம் செய்யப்படாத மேஜை... அகற்றப்படாத குப்பை... அடுக்கப்படாத கோப்புகள்... மோசமான மனநிலைக்கு இவையும் காரணமாக இருக்கலாம்.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

தேய்த்துக் கவிழ்த்த பாத்திரங்கள்... மடிக்கப்பட்டு அதனதன் இடத்தில் அடுக்கப்பட்ட துணிகள்... நேர்த்தியான வீடு... இதே போன்றதொரு சூழல் வேலையிடத்திலும் இருந்தால் உங்கள் மனம் உற்சாகத்தில் துள்ளுவதில் ஆச்சர்யமில்லை.

வாழ்க்கையில் எத்த னையோ பிரச்னைகள் இருக்கும்போது, இதெல்லாம் மனநிலையைப் பாதிக்குமா என்று கேட்கலாம். கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர் களுக்கு வீட்டைச் சுத்தப்படுத்துவதையும் தோட்டத் தைச் சீரமைப்பதையும் பாத்திரங்கள் கழுவுவதையும் வழிகளாகவே வலியுறுத்து கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.

‘கிளட்டர்’ என்கிற ஆங்கில வார்த்தைக்குக் குப்பை என அர்த்தம் சொல்கிறது அகராதி. ‘டீகிளட்டர்’ என்பது குப்பைகளற்ற நிலை. குப்பைகள் அகற்றப்படும்போது உறைவிடத்தோடு சேர்ந்து மனநிலையும் நிச்சயம் மாறும் என்பது உளவியல்.

எங்கே, எதைப் பார்த்தாலும் வாங்கிவிடத் துடிக்கிற மனித மனதுக்கு அது தேவையா என்கிற கேள்வி எழுவதே இல்லை.

பத்தாயிரம் ரூபாய்க்குப் புடவை வாங்கியிருப்பார்கள்.இலவசமாக இரண்டு பிளாஸ்டிக் கவர் கேட்டு மல்லுக்கு நிற்பார்கள். அதைக் கொண்டுவந்து வீட்டில் அடைப்பார்கள்.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

யூஸ் அண்டு த்ரோ டப்பாக்கள், வாட்டர் கேன்கள், அட்டைப் பெட்டிகள், தெர்மாகோல் என எதையுமே தூக்கிப் போட மனது வராது சிலருக்கு. ஒருநாள் வீட்டைக் கறையான் அரித்திருக்கும் அல்லது பத்திரப்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் உருகி ஒன்றோடுஒன்று ஒட்டிக்கொண்டு தம் பயனை இழந்திருக்கும். வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவற்றைத் தூக்கிப்போடுவார்கள். அந்தப் பொருள்கள் ஏற்படுத்தியிருந்த மக்கிய வாசத்தையும் கறைகளையும் சுத்தப்படுத்துவது கூடுதல் சுமையாகச் சேர்ந்திருக்கும்.

உங்களுக்கு உபயோகப்படாத, உங்களால் விரும்பப்படாத எந்தவொரு பொருளும் குப்பையில் சேர்த்தியே. நம் வீடென்பது வாழ்வதற்கான இடமே தவிர, வாங்கிக் குவிக்கிற பொருள்களுக்கான கிடங்கல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வீடெங்கிலும் அலங்காரப் பொருள்களால் நிறைப்பதை அழகென நம்பிய கலாசாரம் மாறி, இன்று குறைவான அலங்காரமே அழகென்கிற நிலை வந்துவிட்டது. வெளிநாடுகளில் பிரபலமான ‘டீகிளட்டரிங்’ கான்செப்ட் நம்மூரிலும் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது.

தேவையற்ற பொருள்களைத் தூக்கி எரிகிறபோது வாழ்க்கை எளிதாவதை உணர்த்துவதுதான் டீகிளட்டரிங். வீட்டின் சுவர் தொடங்கி, சுற்றுப்புறம் வரை சகலத்திலும் டீகிளட்டரிங் கான்செப்ட்டைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கைத் திறன் மேம்படுவதை உணர்வீர்கள்.
அதை எப்படிச் செயல்படுத்துவது என்பதைத்தான் இந்தப் பகுதி மூலம் உங்களுக்கு விளக்கப்போகிறார் ஆர்க்கி டெக்ட்டும் இன்டீரியர் டெகரேட்டருமான சரோஜினி.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

‘`என் கணவர் திரு... தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர். நான் ஆர்க்கிடெக்ட். ஆனாலும், எங்கள் வீடு ஆடம்பரப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்டதாக இருக்காது. வீட்டுக்குள் நுழைந்தால் சுவரில் படங்களைக்கூடப் பார்க்க மாட்டீர்கள். நாம் கண்களுக்கு நிறைய காட்சிகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தால் எண்ணங்களும் அவற்றைச் சுற்றியே வரும். வேறு எதையும் யோசிக்கத் தோன்றாது என்பது என் கணவரின் எண்ணம். வீடு என்பது மியூசியம் இல்லை என்பார். வீடு, சிந்தனைக்குத் தடைபோடாத சூழல் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் சொல்வார்.

எங்களுடைய வீடு ஒருகாலத்தில் ப்ளே ஸ்கூல் மாதிரிதான் இருந்தது. வீடு முழுக்க பொம்மைகள். என் மகள் அந்த வயதிலேயே நிறைய படிப்பாள் என்பதால் புத்தகங்களும் வீட்டில் நிறைந்திருக்கும். மகளின் கதைப் புத்தகங்கள், என்னுடைய காலேஜ் புத்தகங்கள், கணவரின் ஒளிப்பதிவு தொடர்பான புத்தகங்கள் இப்படி ஏகப்பட்ட கலெக் ஷன்ஸ்.

குழந்தைகள் ஓரளவு வளர்ந்ததும் இத்தனை பொம்மைகளும் புத்தகங்களும் தேவைதானா என்கிற கேள்வி வந்தது. சில பொம்மைகளும் புத்தகங்களும் அவர்களுக்கு சென்டிமென்ட்டானவை என்பதால் இன்னும் வைத்திருக்கிறார்கள்.  மற்றவற்றை யாருக்காவது கொடுத்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்தோம். சில புத்தகங்கள் குழந்தைகள் ஓரளவு வளர்ந்ததும் ரசனைக்கு அப்பாற்பட்டவையாக மாறிவிடுகின்றன. அந்தப் புத்தகங்களை தேவையிருக்கும் குழந்தைகளைத் தேடிக்கொடுத்துவிடுவது சரியானதாகத் தோன்றியது.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்! - சரோஜினி திரு

உடைகள் விஷயத்திலும் வருடத்துக்கு இத்தனை துணிகள்தான் வாங்குவது எனப் பேசிக்கொண்டோம். திரு மும்பையில் அதிக நாள்கள் இருப்பார். அவரைப் பார்க்க மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நானும் பிள்ளைகளும் மும்பை போகும்போதெல்லாம் புதுத்துணிகள் வாங்குவோம். 

பிள்ளைகளிடம், ‘நீங்கள் பழைய துணிகளைத் தூக்கிப் போடுவதானால் புதுத் துணிகள் வாங்கித் தருகிறேன்’ என்றேன். தவிர, `முக்கியமான நாள்களுக்கு மட்டும்தான் நாங்கள் புதுத்துணி வாங்கித் தருவோம். மற்ற நாள்களில் உங்களுடைய பாக்கெட் மணியில் நீங்களாகத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்' என்றதும் புதுத்துணிகள் வாங்கும் வழக்கம் குறைந்தது. பழைய துணிகளைத் தேவையிருக்கும் யாருக்காவது கொடுக்கும் பழக்கமும் வந்தது.

எங்கள் வீட்டில் நிரந்தரமாக ஓர் அட்டைப்பெட்டி இருக்கும். யாருக்கு எந்தப் பொருள் தேவையில்லையோ, அந்தப் பெட்டிக்குள் போட்டுவிடுவோம். வீட்டு வேலைக்கு வருபவர், சுத்தப்படுத்த வருபவர் என யார் வேண்டுமானாலும் அதிலிருந்து அவரவருக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்வார்கள். அவை போக எஞ்சியிருக்கும் பொருள்களை `கூன்ஜ்' என்கிற அமைப்புக்குக் கொடுத்துவிடுவோம்.

பொருள்கள் குறைய குறைய வீடே விஸ்தாரமாக மாறியதுபோலத் தோன்றியது. வீட்டிலிருப்போரின் மனது அதையும்விட அதிக விஸ்தாரமாக மாறியதை உணர்ந்தோம்.

`சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள வீடுதான்' என்பதை குப்பைகளற்ற வாழ்விடச் சூழலை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள்.

உங்கள் வீடு சொர்க்கமா, நரகமா?

குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!