தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

"அந்தக் குடிசைக்குள்ள இருந்த 44 பேரும்..."

"அந்தக் குடிசைக்குள்ள  இருந்த 44 பேரும்..."
பிரீமியம் ஸ்டோரி
News
"அந்தக் குடிசைக்குள்ள இருந்த 44 பேரும்..."

அந்த நாள்வி.எஸ்.சரவணன் - படங்கள் : கே.ராஜசேகரன், க.சதீஷ்குமார்

1968 டிசம்பர் 25... நாகப்பட்டினம் மாவட்டம் (அப்போது தஞ்சாவூர் மாவட்டம்) கீழ்வெண்மணி எனும் கிராமத்தில் நடந்த சம்பவம், இந்தியாவையே அதிர்ச்சியில் உறையவைத்தது.

ஊருக்கெல்லாம் உணவளிக்கும் காவிரி டெல்டா பகுதியில், வயலில் உழைக்கும் மக்கள்மீது நிலப் பண்ணையாளர்களின் கொடுமையான ஆதிக்கம் நிலவிய காலகட்டம் அது. அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது வயலில் இறங்குபவர்கள் சூரியன் மறைந்த பின்பே வேலையை முடிக்க வேண்டும். அதற்குப் பிறகு, நிலத்துக்குச் சொந்தமானவர்கள் தரும் கூலியிலிருந்து சோறு சமைத்துச் சாப்பிட்டு உறங்க வேண்டும். ஆண்கள் கோவணம்தான் கட்டிக்கொள்ள வேண்டும். தோளில் துண்டு போட்டுக்கொள்ளக் கூடாது. பெண்களின் மீது பாலியல் அத்துமீறல்களும் அதிகளவில் நடக்கும். தங்குவதற்குப் பாதுகாப்பான இடமோ, சாப்பிட நல்ல உணவோ இன்றி, வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையான வாழ்க்கை அது. அவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள்.

"அந்தக் குடிசைக்குள்ள  இருந்த 44 பேரும்..."

இடதுசாரி கட்சிகள் அங்கே கால் பதித்ததும், குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் வேலை, சரியான கூலி, உழைப்பவர்கள் மரியாதை யுடன் நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்தனர். இதனைப் பொறுக்கமுடியாத பண்ணையாளர்கள், அந்தப் பகுதி விவசாயக் கூலிகளை இன்னும் ஒடுக்கினர். அவர்களை இடதுசாரி கட்சியிலிருந்து விலகி, தங்களுடைய நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் சேரச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைச் சில கிராம மக்கள் கேட்டுப் பணிந்தனர். அவர்களின் அதிகாரத்துக்குக் கீழ்ப் படியாமல் துணிவோடு எதிர்த்தவர்களும் உண்டு. அப்படிப் பணியாத ஒரு கிராமம்தான், கீழ் வெண்மணி.

கீழ்வெண்மணியில் அன்றைய தினம் மாலை யிலிருந்தே பதற்றம் அதிகரித் தது. மாலை 7 மணிக்கு இரிஞ்சூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆள்கள் ஊருக்குள் நுழைந்தனர். பார்ப்பவர்களையெல்லாம் அடித்தனர். நேரில் பார்த்ததை, அன்றைய வன் முறையில் பாதிக்கப்பட்ட பழனிவேலு சொல்கிறார்.

"அந்தக் குடிசைக்குள்ள  இருந்த 44 பேரும்..."

“ஏதாச்சும் பிரச்னை யாகும்னு நினைச்சோம். ஆனா, இத்தனை பேரு வருவாங்கனு எதிர்பார்க்கல. இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவோட வேலைதான் இது. ஊருல இருந்த  எல்லாரும் சிதறி ஓடினாங்க. ஏன்னா, வந்தவங்கள்ல அஞ்சாறு பேருங்ககிட்ட துப்பாக்கி இருந்துச்சு. ஆம்பளைங்க வயல்களிலே ஓடி ஒளிஞ்சிட்டாங்க. வயசானவங்க, குழந்தைங்க, பொம்பளைங்க எல்லாம் பக்கத்துலயிருந்த ராமய்யாவோட குடிசைக்குள்ள ஓடிட்டோம். நானும் போயிட்டேன். கொஞ்ச நேரம் சத்தம் போட்டுட்டுப் போயிடுவாங்கனு நினைச் சோம். ஆனா, அவங்க வாசக் கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு பெட்ரோலைக் கூரை மேல ஊத்திக் கொளுத்திட்டாங்க. நான் கூரையை ஓர் ஓரமாகப் பிய்ச்சுக் கிட்டு வெளியே தாவினேன். அங்கே இருந்த ஒருத்தன் என் தொடையில் வெட்டிட்டான் (அதைக் காட்டுகிறார்). அதை விடுங்க... என் கண்ணு முன்னாலேயே அந்தக் குடிசைக்குள்ள இருந்த 44 பேரும் எரிஞ்சு சாம்பலாயிட்டாங்களே!” - தவிப்புடன் கண்களைத் துடைத்துக்கொண்டே சொல்கிறார் பழனிவேலு.

அந்தக் கொடுமையான சம்பவத்தில் எரித்துக் கொல்லப்பட்டவர்கள் 27 பெண்கள் உள்பட 44 பேர். அதில் 16 வயதுக்குக் கீழிருந்த குழந்தைகள் 21 பேர். முனியன் என்பவரின் அக்கா, அக்கா மகள், அண்ணி, அண்ணி மகள் என நால்வரும் மடிந்தனர். பழனிவேலுவின் மனைவி பாக்கியம், தன் மூன்று வயதுப் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி, அதிலிருந்து தப்பித்து உயிர்பிழைத்த நினைவுகளைச் சொல்லும் வார்த்தைகள், ரணம்.

“திருவாரூர் பக்கத்துல இருக்கிற கல்யாணமாதேவிதான் நான் பொறந்த ஊரு. எனக்கு ரெண்டு தம்பிங்க. வெண்மணிக்கு கல்யாணமாகி வந்தப்ப, இங்கே நடக்கிற போராட்டம் எல்லாம் எனக்குப் புதுசா இருந்துச்சு.  இவங்க (கணவர்) அடிக்கடி கட்சிக் கூட்டத்துக்குப் போயிடுவாங்க. அன்னிக்கு வயல்ல களையெடுக்கிற வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். இருட்டின பெறவு திபுதிபுன்னு ஆளுங்க ஓடிவந்தாங்க. அவங்க கையில அருவா, கடப்பாரை, துப்பாக்கினு ஆயுதங்களா இருந்துச்சு. ஒரே சத்தம். இவங்க வீட்டுல இல்ல, வெளிய எங்கேயோ போயிருந் தாங்க. எம்பொண்ணு மங்களாம்பிகா வெளியில விளையாடிட்டு அப்பதான் வீட்டுக்குள்ள வந்தா. ஊருக்குள்ள கலவரத்தைப் பார்த்துட்டு, நம்மளை ஏதாச்சும் பண்ணிடப் போறாங்களோன்னு பயந்துகிட்டு, பொண்ணைத் தூக்கிட்டு ஓடினேன்.

"அந்தக் குடிசைக்குள்ள  இருந்த 44 பேரும்..."

ஊரு முழுக்க அந்த ஆளுங்க வந்துட் டாங்க. எங்கே போறதுன்னு தெரியல. வாய்க்காலைத் தாண்டினா, வயல்ல பயறு விளைஞ்சு நின்னுச்சு. ஓடிப்போயி மறைஞ்சு நின்னுட்டேன். ஒட்டடைப் பயறு, ஆளு உயரம் வளரும். அதனால நாங்க நின்னது வெளியிலேருந்து பார்த்தா தெரியாது. ஊருக்குள்ளேயிருந்து கூச்சல் பெருசாகிட்டே இருந்துச்சு. என்னாச்சோ ஏதாச்சோன்னு கவலை ஒருபக்கம். போய்ப் பார்க்கலாம்னு நினைச்சா, குழந்தையை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம் வந்து தடுத்துடுச்சு. அவங்க எங்கே இருக்காங்க, என்ன பண்றாங்கனு கவலையா இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல எம்பொண்ணு தூங்கிப்போக, அவளைத் தூக்கிட்டு அங்கேயே நின்னுட்டு இருந்தேன்.

ஊருக்குள்ள திடீர்னு ஒரே வெளிச்சமா தெரிஞ்சுது. வீட்டைக் கொளுத்தி விட்டுட்டாங்கனு நினைச்சேன். ஏன்னா, அந்தப் பாவிங்க இப்படியெல்லாம்தான் செய்வாங்க. எவ்வளவு நேரம் நின்னேன்னு தெரியல, கால் ரெண்டும் கடுகடுன்னு ஒரே வலி. ராத்திரி ரெண்டு மணியாகி யிருக்கும். சத்தம் கொஞ்சம் குறைஞ் சிருந்துச்சு. அவங்க எல்லாம் போயிட்டாங்கனு பொண்ணைத் தூக்கிட்டு, வயலைவிட்டு வெளியே வந்தேன். பார்த்தா, ஊருல உள்ள எல்லா வீடுகளையும் கொளுத்தி விட்டுட்டுப் போயிருந்தாங்க. எங்க வீட்டுல கதவைக் கழட்டி எடுத்துட்டு, கூரையைக் கொளுத்தி விட்டிருந்தாங்க. பக்கத்துல கிடந்த கயித்துக் கட்டில சிலர் தூக்கிட்டுப் போனாங்க. என்ன, ஏது, எதுக்குனு விசாரிச்சிட்டு இருக்கும்போதே, பாப்பா (ராமய்யாவின் மனைவி) வூட்டுப் பக்கம் கூச்சலா கேட்டுச்சு. ஓடிப்போய் பார்த்தா, வீடே எரிஞ்சு, உள்ளேயிருந்தவங்க எரிஞ்சு ஒரே நாத்தம். எம் பொண்ணோட விளையாடிட்டிருந்த குழந்தைங்க கரிக்கட்டையா கெடந்துச்சுங்க” - உடைந்து அழுகிறார் பாக்கியம்.

“எரிஞ்ச வீட்டுக்குப் பக்கத்துல இருந்த மரத்துல இவங்கள (கணவரை) சாய்ச்சு வெச்சுட்டி ருந்தாங்க. தொடையிலேருந்து ரத்தம் வந்துட்டே இருந்துச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அதுக்குள்ள போலீஸ் வந்துச்சு. காலையில, நாகப்பட் டினம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயி, ஆறு மாசமாச்சு இவங்க குணமாக. சோறு, தண்ணி, கட்டிக்க துணிமணிங்கனு எதுவும்  கிடையாது. அப்புறம் கோர்ட்டு கேஸுன்னு போதும் போதும்னு ஆயிடுச்சு” எனச் சோர்வோடு முடிக்கிறார் பாக்கியம். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், நான்கு மகன்கள். மற்றவர்கள் வெளியூருக் குச் சென்றுவிட, ஒரு மகன் அந்த ஊரிலேயே டீக்கடை வைத்து இவர்களைக் கவனித்துக்கொள்கிறார்.

"அந்தக் குடிசைக்குள்ள  இருந்த 44 பேரும்..."

கீழ்வெண்மணி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கோபாலகிருஷ்ண நாயுடு விடுதலை செய்யப்பட்டார். 12 ஆண்டுகள் கழித்துச் சிலரால் அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

44 பேரும் எரித்துக்கொல்லப்பட்ட ராமய்யாவின் குடிசை, இப்போது அந்தத் துயரச் சம்பவத்தின் நினைவிடமாகிவிட்டது. அருகிலேயே நினைவுத் தூணும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு எதிரே வெண்மணி நினைவுக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதைச் சுற்றி, மடிந்த 44 பேரின் கைகளின் சிலைகள் ஏந்திய தூண்கள் எழுப்பப்படுகின்றன. அந்தக் கட்டடத்தின் காவலாளி சேதுபதி, ‘இது பாப்பா, இது சந்திரா, இது ஆசைத்தம்பி’ என ஒவ்வொரு கையையும் அறிமுகப்படுத்தும்போது, துக்கம் கனக்கிறது.

கீழ்வெண்மணியில் கொல்லப்பட்டவர்களுக்கு அந்தப் பகுதி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் கண்ணீர்மல்க தங்கள் அஞ்சலியைச் செலுத்திவருகின்றனர்.

டிசம்பர் 25 அன்று, கீழ்வெண்மணியில் சாரிசாரி யாக மக்கள் கூட்டம், குடும்பத்துடன் செல்வதைப் பார்க்க முடியும். அந்த துயர வரலாறு அடுத்து வரும் தலை முறையினருக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதோ இன்னும் ஒரு சில நாள்கள்தான் இருக்கின்றன, அந்தக் கொடூரம் நடந்ததன் 50-வது ஆண்டு தொடங்க.

முடியட்டும் சமூகக் கொடுமைகள்!