மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வரவேற்பறை வரவேற்கும் விதத்தில் இருக்க வேண்டுமா?

வரவேற்பறை வரவேற்கும் விதத்தில் இருக்க வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
வரவேற்பறை வரவேற்கும் விதத்தில் இருக்க வேண்டுமா?

ஆர்க்கிடெக்ட் சரோஜினி திருடீகிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா - ஓவியங்கள் : ரமணன்

ரவேற்பறை... பெயரே பொருள் சொல்லும். யார் வீட்டுக்குள் நுழைந்தாலும் முதலில் கவனம் ஈர்ப்பது வரவேற்பறை. அந்த அறையை வைத்தே அவர்களைப் பற்றிய ஓர் அபிப்ராயம் நமக்கு வந்துவிடும். டிராயிங் ரூம், லிவிங் ரூம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற இந்த அறை, ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தப்படும்.   

வரவேற்பறை வரவேற்கும் விதத்தில் இருக்க வேண்டுமா?

வரவேற்பறை என்றாலும் பல வீடுகளில் அங்கேதான் தேவையற்ற பல பொருள்களையும் வைக்கிற பழக்கம் இருக்கிறது. அலுவலக ஃபைலை அங்கே வைத்தால்தான் கிளம்பும்போது கண்களில்படும் என வைப்போம். ஹேண்ட்பேக், ஸ்கூல் பேக் என எல்லாவற்றையும் அங்கேயே அடைத்துவைக்கிறவர்கள் பலர். பல வீடுகளில் வரவேற்பறையில் முதலில் வரவேற்பது செருப்புகளையும் ஷூக்களையும் வைக்கிற அலமாரி.

சுகாதாரம் என்று பார்த்தால் காலணிகளை வீட்டுக்கு வெளியே வைப்பதுதான் சிறந்தது. ஆனால், வெளியே வைக்க முடியாதபட்சத்தில், தினமும் உபயோகிக்கிற செருப்புகள் மற்றும் ஷூக்களை மட்டும் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். எப்போதாவது அணிபவை, விசேஷங்களுக்கு அணிபவை போன்றவற்றை பால்கனியில் வைக்கலாம். கதவுகள் பொருத்திய கபோர்டுகளுக்குள் காலணிகளை வைத்தால் கண்களை உறுத்தாது. வீட்டுக்கு வெளியே இடமிருந்தால் ஷூ ஸ்டாண்டு வாங்கி, அதில் அடுக்கி வைக்கலாம். ஷூ ஸ்டாண்டு பயன்படுத்துவோர், அதிலேயே சாக்ஸ் வைக்க இடம் ஒதுக்கினால், காலை பரபரப்பில் சாக்ஸ் தேடும் டென்ஷன் குறையும்.

எப்போதோ ஏதோ ஓர் உடைக்கு மேட்ச்சிங்காக இருப்பதென வாங்கியது பிறகு பயனே இல்லாமல் இருக்கும். இப்படிப் பலவும் பிறகு அணிந்து பார்க்கும்போது கால்களுக்குப் பொருத்தமின்றி இருக்கும். கால்களுக்கு உதவாத, கால்களைக் கடிக்கக்கூடிய காலணிகளை அப்புறப்படுத்துவதில் தயக்கமே வேண்டாம்.

பல வீடுகளில் அலங்காரப் பொருள்களைத் திறந்த அலமாரிகளில் வைத்திருப்பார்கள். அவற்றைச் சுத்தம் செய்து பல காலமாகியிருக்கும். முடிந்தவரை இவற்றைக் கண்ணாடிக் கதவுகள் போட்ட அலமாரிகளுக்குள் வைப்பதே சிறந்தது. இப்படி அலங்காரப் பொருள்கள் சேகரிக்கும் பழக்கமுள்ளவர் என்றால் சில விஷயங்களை நினைவில்கொள்ளுங்கள். குறிப்பிட்ட ஒரு பொருளைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏதோ சந்தோஷ நினைவு தூண்டப்படுகிறது, அன்புக்குரியவரின் அன்பளிப்பு என்றால் வைத்துக்கொள்ளலாம். யார் கொடுத்தது என்றே தெரியாத நிலையில் பத்திரப்படுத்துவதில் அர்த்தம் இல்லை. புசுபுசு பொம்மைகளை அலமாரிகளில் அலங்காரமாக வைக்கிற வீடுகளும் உண்டு. அவற்றில் எக்கச்சக்க தூசு படிந்திருக்கும். வீட்டுக்கு வருகிற குழந்தைக்கு எடுத்து விளையாடக் கொடுக்கக்கூடத் தகுதியில்லாத நிலையில் இருக்கும். அவை தேவைதானா? யோசியுங்கள். 

வரவேற்பறை வரவேற்கும் விதத்தில் இருக்க வேண்டுமா?

வரவேற்பறையில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை மாட்டி வைப்பது பலருக்கும் பிடிக்கிறது. சிலர் ஓவியங்களையும் மாட்டி வைத்திருப்பார்கள்.  தவறில்லை. ஆனால், இவற்றின் பின் பகுதிதான் பல்லிகளின் பெருக்கத்துக்கான இடம். அதை நினைவில்கொண்டு கூடியவரையில் குறைந்த அளவிலான படங்களை மாட்டுவது சிறப்பு.

ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் அவசியம் இருக்க வேண்டியது புத்தக அலமாரி. புத்தகங்களைப் பார்ப்பதே பாசிட்டிவிட்டியைத் தரும். கண்ணாடிக் கதவுகள் வைத்த அலமாரிகளில் புத்தகங்களை அடுக்கி வைத்தால் பார்வைக்கும் அழகு. தேடிப் படிக்கவும் சுலபம். தூசும் படியாது. நீங்கள் படித்த ஒரு புத்தகம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது, மீண்டும் மீண்டும் படிக்கப் போகிறீர்கள் அல்லது நண்பர்களுக்குப் படிக்கக் கொடுக்கப் போகிறீர்கள் என்றால் அவற்றைப் பத்திரப்படுத்தலாம். படிக்கும்போதே அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை எனத் தோன்றினால் வைத்துக்கொள்ள வேண்டாம். புத்தக அலமாரியில் புத்தங்களை அடைத்து வைப்பதற்குப் பதில், இடைவெளிவிட்டு, குழந்தைகள் வாங்கிய பரிசுக் கோப்பைகளை இடையிடையே அடுக்கி வைத்தால் அழகாக இருக்கும். தினமும் இரவில் அன்றைய செய்தித்தாள்களை அலமாரியில் வைக்க வேண்டும். வார இதழ்களைத் தனியே வைக்கவும். படித்துமுடித்ததும் அவற்றையும் செய்தித் தாள்களுடன் சேர்த்து, அந்த அலமாரி நிறைந்ததும் பழைய பேப்பர் எடுத்துச் செல்கிறவர்களிடம் போட்டு விடலாம்.

எந்நேரமும் டி.வி முன்னே அமர்ந்து மணிக் கணக்கில் ரசிக்கிறோம். ஒருநாளாவது அதன் பின்பக்கத்தை எட்டிப் பார்த்திருப்போமா? ஏகப்பட்ட வயர்கள் தொங்கிக்கொண்டிருக்கும். எலெக்ட்ரீஷியனைக் கூப்பிட்டு அவற்றில் தேவையற்றவற்றை அகற் றவும், தேவையானவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கட்டவும் சொல்லலாம்.

ரிமோட்டைக் கண்டுபிடிப்பதென்பது பல வீடுகளிலும் டெய்லி டாஸ்க். ஏ.சி, டி.வி என அனைத்துக்குமான ரிமோட்டுகளை ஒரு ட்ரேயில் வைப்பதை வழக்கமாக்கிக்கொள்வதன் மூலம் இந்தச் சிக்கலைத் தவிர்க்கலாம். கேசட் பிளேயர், வி.ஹெச்.எஸ் பிளேயர் போன்றவற்றை நாம் இனி பயன்படுத்தப் போவதில்லை. எனவே, அவற்றைத் தேவையில்லா தவை எனத் தைரியமாகத் தூக்கிப் போடலாம்.

இவற்றை எல்லாம் பின் பற்றினால் நிச்சயம் உங்கள் வீட்டின் வரவேற்பறை எல்லோரையும் வரவேற்கும்.

- குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!