
தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படங்கள் : எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார் - ஓவியம் : ஸ்யாம்
அடவி மலையில கொற்ற நம்பியும் வலிய நம்பியும் பெரிய கையி. வம்பு தும்புன்னா முதல்ல நிக்குற ஆளுக. சாதி, சனமுன்னு வலுவான தலைக்கட்டு. வேட்டைதான் பெரும் பிழைப்பு. ஆளுக வெளியில நடமாடும்போதே சூரிக்கத்தி, ஈட்டிக்கம்புன்னு ஆயுதத்தோடதான் நடமாடுவாக.

நம்பிமார் வேட்டைக்குனு காட்டுக்குள்ள இறங்கிட்டா, அடவி மலையே அலறிப்போயிரும். காட்டு மாடு, மானு, கடத்தி, காட்டுப்பன்னின்னு அவங்க அடிச்சுப்போடுற விலங்குகளை கொத்தாளுங்க தலைச்சுமையா ஊருக் காட்டுக்குத் தூக்கிட்டு வருவாங்க. அடிவாரச் சந்தையில நம்பிங்க கொண்டு வர்ற வேட்டைக்கறிக்கு பெரும் விலை கிடைக்கும்.
கொஞ்சகாலமா வேட்டைப் பிழைப்பு சரியில்லை. விலங்குகள்லாம் தெக்கிக்காட்டுப் பக்கம் சிதறி ஓடிப் போச்சுக. பல நாளு, வேட்டைக்குப் போயி வெறுங்கையோட திரும்பி வர்றாக நம்பிமாருக. பெரும் முடையாப் போச்சு.
இனி அடவிக் காட்டுல வேட்டை நடத்திப் பிழைக்க முடியாதுன்னு புரிஞ்சு போச்சு நம்பிமாருக்கு. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறப்ப, கொற்ற நம்பி பொண்டாட்டி காட்டாத்தி தான் அந்த யோசனையைச் சொன்னா. `காட்டைத் திருத்தி விவ சாயம் செய்யலாமே'னு அவ சொன்ன புத்தி நம்பிமாருக்கு நல்லதாப் பட்டுச்சு.
ஆளுப்பேர வெச்சு அடவி மலையில ஒரு பகுதியை நிலமா திருத்தினாங்க. பெரிசு பெரிசா வளந்து நின்ன மரங்களையும், குதிர் குதிரா முளைச்சுக்கிடந்த புதர்களையும் வெட்டிக்குவிச்சு எரிச்சாக. விலங்குகள் உள்ளே வந்து விளையுற பயிர்களை அழிக்காம இருக்க வேகாத கட்டைகளை எடுத்து வேலி கட்டி அடைச்சாக.
ஒருபக்கம் காடைக்கண்ணி, கேவ்ரு, தினை, ஏலம், குதிரைவாலினு தானியம்... இன்னொரு பக்கம் எலுமிச்சை, மா, பலான்னு மரங்க. கரும்புத் தோட்டம் ஒருபக்கம்... வாழைத்தோட்டம் ஒருபக்கம்... வாழைன்னா சாதா வாழை இல்லை. பேயன், மொந்தன், ரசகதலி, பச்சை, கற்பூரவல்லி, மலைவாழை, செவ்வாழைனு இல்லாத வகைகளே இல்லை... தளதளன்னு எல்லாம் தழைச்சு நிக்குது.
நம்பிமாருக்கு ஒரே கவலை. எல்லாம் விளையுற பக்குவத்துக்கு வந்திருச்சு. யானை, எருமை, கடத்தி, காட்டுப்பன்னின்னு ஏதாவது வந்து நாசம் பண்ணிட்டுப் போகாம தடுக்கணுமே..? பாடுபட்டு விளைஞ்சதை திருட்டுப்பயலுக வந்து அறுத்துக்கிட்டு ஓடிடாமே காக்கணுமே.? தோட்டத்துக்கு ஒரு காவக்காரன் போட்டாத்தான் சரியா வரும். அதுவும் சாதாரண ஆளு பத்தாது. நல்லா மந்திரம் கத்தவனாக்கும் வேணும். அவனாலதான் விலங்குகளுக்கு வாய் கட்ட முடியும்.
ஆளுக்கொரு பேரைச் சொல்ல, வலிய நம்பி சொன்னான், `சாக்காச்சி மலையில இருக்கிற இருளி காத்த புலையன் மந்திரத்துல பேருபோன ஆளு. கொம்பா(யானை)வுல இருந்து காட்டு மாடு வரைக்கும் எல்லாத்துக்கும் வாய் கட்டுற மந்திரம் தெரிஞ்சவன். கம்பு விளையாட்டு, கத்தி விளையாட்டுன்னு வீரத்திலயும் பேருபோன ஆளு. அவனையே கேட்டுப்பாக்கலாம்.'
நம்பிமாருக்கு சந்தோஷம். போய் கூப்பிடு வோம்னு சொல்லிட்டு சாக்காச்சி மலைக்குக் கிளம்புனாக.
சாக்காச்சி மலை அடவி மலைக்கித் தெக்கே, நெடுந்தொலைவுல இருக்கு. ரெண்டு நாள் நடை நடந்து, இருளி காத்த புலையன் வீட்டுக்குப் போயிட்டாக. நம்பிமாரைப் பார்த்த இருளி, `கும்புடுறேன் சாமி... நீங்க எந்த மலைநாட்டுக்கார ஆளுக... பழகுன வாசனை இல்லையே... என்னை எதுக்காக நாடி வந்திருக்கீய'ன்னான்.

`நாங்க அடவி மலை நம்பிமாருங்க... பிழைப்பு அத்துப்போய், காட்டைத் திருத்தி விவசாயம் ஆரம்பிச்சுருக்கோம். மா, பலா, வாழையெல்லாம் தழைச்சு நிக்குது. மிருகங்க நடமாட்டம் தெரியுது. திருடனுங்க தொல்லையும் தெரியுது. பகலிரவா எங்களால தோட்டத்தைக் காவல் காக்க முடியலே. நீங்க, மந்திரத்துல பேருபோன ஆளுன்னு எங்க மலையில பேச்சு. கம்படியும் தெரியும். நீங்க வந்து எங்க தோட்டத்தைக் காவக்காக்க முடியுமா?'னு கேட்டாக.
இருளி யோசிச்சான்.
`என்னய்யா யோசிக்கிறீவ... இருக்கிறதுக்கு தோட்டத்துக்குள்ளயே வீடு தாரோம். திங்க மூணு வேளை சோறு தாரோம். விளையுறதுல முதல் விளைச்சல் எங்களுக்கு. அடுத்த காய்ப்பு என்னவோ அதை நீங்க எடுத்துக்குங்க... சம்மதமா?'னு கேட்டாக நம்பிமாருங்க.
`சாமி... தோட்டத்துக்குக் காவல் வர்றதுல எனக்கொண்ணும் சங்கடமில்லை. ஆனா, சின்னதா ஒரு பிரச்னை இருக்கு. எம்பொம்மனாட்டி, காளிகாத்தா முழுகாம இருக்கா... அவளை இங்கே தனியா விட்டுட்டு வரமுடியாது. அவளையும் அழைச்சுக்கிட்டுத் தான் வரமுடியும்'னான் இருளி.
`சரிதாம் போங்க... தாராளமா கூட்டிக்கிட்டு வாங்க. காட்டுக்குக் கூடுதலா ஒரு காவல் ஆச்சு. நல்லவிதமா நாங்க பாத்துக்கிறோம்'னு நம்பிமாருங்க வாக்குக்கொடுத்தாக. இருளியும் காளியும் கௌம்பிட்டாக.
தானியக்காட்டுக்கு தெக்கால, பெரிய வாழைத்தோட்டம். அதையொட்டி ஒரு தென்னங்கூரை வீடு. அதுலதான் இருளியும் காளியும் இருந்தாக. சொன்னமாதிரியே நம்பிமாருங்க சாப்பாட்டுக்கு வேண்டிய பொருளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்தாக.
நல்ல மழை. பயிரெல்லாம் நிறைவா வெளைஞ்சி நிக்குது. இருளி பகலிரவா தோட்டத்துக்குக் காவலா நிக்குறான். தண்ணி பாய்ச்ச, வரப்பு வெட்ட, வாய்க்கா பறிக்கன்னு எல்லா வேலையும் இழுத்துப்போட்டுச் செய்யிறான். காளிகாத்தாவுக்கு இது நெறை மாசம். ஒருநா, காளியும் இருளியும் வாழைத்தோட்டத்துப் பக்கம் காவல்நடைக்குப் போனாக. வாழையெல்லாம் தாரு தாரா குலை தள்ளி நிக்குது. பாதி தாரு பழுத்துக் கெடக்கு. பழங்களோட வாசனை அடவிக் காட்டுக் காத்துல கலந்து, `நீ வா, நீ வா'னு விலங்குகளை எல்லாம் கூப்பிடுது. `இருளி நகரமாட்டானா, உள்ளே புகுந்து சாப்பிட மாட்டமா’னு மந்திக மரங்கள்ல உக்காந்துக்கிட்டு முனங்குதுக.
காளிகாத்தாவுக்கு வாய் ஊருது. வயித்துப்புள்ளக்காரியாச்சே... சாம்பலும் செங்கலும் தின்னு தின்னு செத்துப்போன நாக்கு பழம் திங்கத் தவிக்குது. மெள்ள இருளியைப் பாக்குறா.
`அய்யா எவ்வூட்டு மனுஷா... வாய் ஊருது... ஒரு ரசகதலி குலையை மட்டும் வெட்டித் தாரியளா'னு கேட்டா காளி.
இருளிக்குப் பதற்றமாப் போச்சு.
`என்னடி கழுத... புரியாமக் கேக்குற... நம்பிமாருங்க நம்மக்கிட்ட என்ன சொல்லிருக்காக... முத விளைச்சல் எல்லாமே அவுகளுக்கு... அடுத்ததுதானே நமக்கான கூலி... அந்த வார்த்தையை ஏத்துக்கிட்டுத் தானே நாம காவலுக்கு வந்தோம். முதக்குலை வெட்டி இசக்கிக்குப் படைச்சு வழிபட்ட பிறகுதானே அறுவடை ஆரம்பிக்கணும்? அதுக்கு முன்னாடி நாம வெட்டிச் சாப்பிடுறது திருட்டாப் போகுமேடி. காவலுக்கு அறமா அது...'ன்னு கேக்குறான்.
காளி முகத்தைத் திருப்பிக்கிட்டா... ``இத்தனை மரமிருக்கு... அதுல இவளோ குலையிருக்கு. வாயும் வயிறுமா இருக்கிற பொண்டாட்டி ஒரு வாழைக்குலை கேட்குறா... அதை வெட்டித் தர இவ்வளவு யோசனையா?”
காளி கோபமா கேட்டுட்டு குடிலுக்குத் திரும்பிட்டா... இருளிக்கு சங்கடமாப் போச்சு. `பொண்டாட்டி ஆசைத் தீர்க்குறதா? நம்பிமாருக்கு நம்பிக்கையா இருக்கிறதா? பாவம் காளி... இதுவரை இது வேணும், அது வேணும்னு ஏதாவது நமக்கிட்டக் கேட்டிருக்காளா? நாமதான் வாங்கித்தந்திருக்கோமா? ஒரே ஒரு வாழைக்குலை... அவளுக்காக இல்லேன்னாலும் அவ வயித்துல இருக்கிற பிள்ளைக்காவது ஒரு குலை வெட்டிக் கொடுக்கணும். இவ்வளவு பெரிய தோட்டத்துக்குள்ள, இத்தனை குலைகள்ல ஒத்தைக்குலை வெட்டுனா தெரியவா போகுது?’ - இருளி ஒரு முடிவுக்கு வந்தான்.
தோட்டத்துக்கு நாலாம் வரிசையில பெரிய ரசகதலிக் குலை. ஆளுயரத்துக்கு விளைஞ்சு பழுத்துக் கிடக்கு. அதை வெட்டித் தோள்ல வெச்சுக்கிட்டுக் குடிலுக்குப் போறான் இருளி. அதைப்பார்த்த காளிக்கு சந்தோஷமுன்னா சந்தோஷம். உரிச்சு உரிச்சு திங்குறா... அவ ஆர்வமா சாப்பிடுறதைப் பாக்க இருளிக்கும் சந்தோஷம்.
மறுநாள் விடுஞ்சுச்சு. வயித்துப் புள்ளக்காரிக்கு மறுபடியும் வாழைப்பழத்து மேல ஆசை வந்திடுச்சு. `ஏய் மனுஷா... அதோ அந்த மொந்தன் வாழைக்குலை மேல ஆசையா இருக்குய்யா'னு சொல்ல, இருளிக்கு வேற வழி தெரியலே. அதையும் வெட்டியாந்து குடுத்தான்.
இதுவே பழக்கமாப் போச்சு. தினமும் ஒரு வாழைக்குலை... ஒருபக்கத் தோட்டமே வெளிறிப்போச்சு.
நம்பிமாருங்க தோட்டத்துக்குப் பக்கமே வரலே. இருளி மாதிரி, விலங்குகளோட வாயைக் கட்டத் தெரிஞ்ச ஒரு காவக்காரனை வெச்சபிறகு நமக்கென்ன தோட்டத்துல வேலைன்னு நினைச்சாக.
ஒருநா, வலிய நம்பி சொன்னான்,
``நம்பியரே... தோட்டத்துல எல்லாப் பயிரும் விளைச்சல் அமோகமாயிருக்கு. அடிவார யாவாரிங்கல்லாம் அச்சாரம் போட வந்துக்கிட்டே இருக்காக. வாழை குலை தள்ளி பாதி பழமாகிக் கிடக்குன்னு வாசனை சொல்லுது. ஒருக்கா, தோட்டத்துக்குப் போயி பாத்துட்டு வந்துட்டா, இசக்கிக்குப் படைச்சுட்டு அறுவடைக்கு நாள் குறிக்கலாம்...'
கொற்ற நம்பிக்கும் சரின்னு பட்டுச்சு. கிளம்புனாக.
காடைக்கண்ணி பயிரு முத்தி துருத்தி நிக்குது. சோளம், கேழ்வரகு, குதிரைவாலின்னு எல்லாமே அறுக்கத் தயாரா இருக்கு. அப்படியே நடந்து வாழைத்தோட்டத்துக்குப் பக்கம் வர்றாங்க. முத வரிசையில பூமியைத் தொட்டு நிக்குது வாழைத்தாரு. நாலாம் வரிசை, அஞ்சாம் வரிசை எல்லாம் புருஷனைப் பறிகொடுத்த பொண்ணுக மாதிரி தாரை எழந்துட்டு தனிச்சு நிக்குது.

நம்பிமாருக்கு ஒண்ணும் புரியலே. இருளி காவல்ல இருக்கும்போது யாரு வந்து வெட்டியிருப்பா... `ஏலே... இருளி... யாருய்யா வெட்டுனா இந்தத் தாரெல்லாம்'னு கோபமாக் கூப்பிட்டுக் கேட்டாக. இருளிக்கு பயத்துல உடம்பு நடங்குது.
``நம்பிமாரே... இது யாரு வேலைன்னு தெரியலேயே. இவ்வளவு கட்டுக்காவல் இருக்கும்போது எவன் செஞ்சான் இந்த வேலையை''னு போக்குக் காட்டுனான்.
நம்பிமாருக்குப் புரிஞ்சுபோச்சு. இது இருளி வேலைதான். அவன் மந்திரத்தையும் கட்டுக்காவலையும் தாண்டி சின்ன சுண்டெலிகூட இந்தத் தோட்டத்துக்குள்ள வரமுடியாது. இருளிதான் இந்தத் திருட்டு வேலை பார்த்திருக்கான். வலிய நம்பி, விட்டான் ஓர் அறை இருளிக்கு. தடுமாறி வாய்க்காப் பொலியில விழுந்தான் இருளி.
``ஏலே இருளி... உன்னைக் காவலுக்குக் கூப்பிட்டப்போ என்னவே சொன்னோம்... மொத விளைச்சல் எங்களுக்கு. அடுத்தக் காய்ப்பெல்லாம் உனக்குன்னு சொன்னமா இல்லையா..? அந்தப் பேச்சைப் மீறி இப்படி களவு பண்ணிட்டியே, நீயெல்லாம் மந்திரக்காரனா? ஏலே... வலியா, எடுடா ஈட்டியை...''னு கண்ணு சிவக்க தம்பிக்கிட்ட ஈட்டியை வாங்குனான் கொற்ற நம்பி.
இருளிக்கு விளங் கிருச்சு. இனி நம்மளை உயிரோட விடமாட்டாக. எழுந்து குடிலுப் பக்கமா ஓட ஆரம்பிச்சான். உள்ளே காளி, சோர்ந்து போய் படுத்திருந்தா... லேசா வலியெடுக்குது வயிறு. பிரசவம் இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு.
வேகமா ஓடிவந்த இருளி, ``அடியே காளி, நம்பிமாருங்க குத்த வாரானுங்க... எழுந்திரி''னு அப்படியே கைத்தாங்கலா அள்ளிக்கிட்டு ஓட ஆரம்பிச்சான். நம்பிமாரும் ஆட்களும் அருவா, ஈட்டிக் கம்போட துரத்துறானுக. பொண்டாட்டியைச் சுமந்துக்கிட்டு முள்ளு, கல்லுன்னு எல்லாத்தையும் தாண்டி ஓடிக்கிட்டிருக்கான் இருளி.
ஒரு பெரிய மரம் முறிஞ்சு கிடக்கு. அதைத்தாண்டுனாம் பாருங்க இருளி. காலு தடுக்கி தலைகுப்புற விழுந்தான். விழுந்த எடத்துல, அடி முறிஞ்ச ஒரு மரக்கழு இருந்திருக்கு. அது இருளி வயித்துல பாய்ஞ்சு வெளியில வந்திருச்சு. ரத்தம் கொட்டுது.
``அடியே காளி... இனி நான் பிழைக்க மாட்டேன். நம்பிமார் கையில மாட்டாதே... புள்ளையைக் காப்பாத்து... தப்பிச்சு ஓடிரு''னு சொல்லிட்டு மெள்ள மெள்ள மயங்கி அடங்கிப்போனான் இருளி. இருளியைத் மடியில தாங்கிக்கிட்டு காளி கதறி அழுவுறா... நம்பிமாருங்க நெருங்கி வந்துட்டாங்க...
வயித்துல இருக்கிற புள்ளை முண்டித் துடிக்குது. காளி எழுந்து ஓட ஆரம்பிச்சா... இருளியை உதஞ்சுத் தள்ளிவிட்டு, வெறியோட காளியைத் துரத்துறாக நம்பிமாருங்க. ஆறேழு மலை தாண்டி நீலகிரி மலையில இருக்கிற இசக்கியாத்தா கோயிலுக்குள்ள நுழைச்சுட்டா காளி.
நம்பிமாரும் உள்ளே வந்துட்டாங்க. ``ஆத்தா இசக்கி... நான் அறிஞ்சு இந்தத் தப்பைச் செய்யலே. ஆசையில கொஞ்சம் வாழைக்குலையை வெட்டிச் சாப்பிட்டோம். இந்த நம்பிமாருங்க எம் புருஷனைக் கொன்னுட்டாக. என்னையும் குத்த வாராக. காப்பாத்துத் தாயி... காப்பாத்து''னு மன்றாடுறா காளி.
நம்பிமாருங்க உள்ளே வந்து, காளியைப் புடிச்சுட் டாங்க. ஒருத்தன், ``இந்த வயித்துலதானே எங்க வாழைத்தார் இருக்கு''னு அவ வயித்தைக் கீறி குழந் தையை உருவி வீசுறான். இன்னொருத்தன் அவ நெஞ்சில ஈட்டியை எறக்
குறான். காளி அடங்கிப் போறா... இசக்கி காலடியில ரத்தம் ஆறா ஓடுது. வெறி அடங்கி நம்பிமாருங்க அடவி மலை திரும்பிட்டாக.
கொஞ்ச நாளாச்சு. அதுவரைக்கும் இல்லாத அளவுக்கு கோடை வாட்டுது. மரமெல்லாம் அசைய மறுக்குது. தோட்டத்துல தழைச்சு நின்ன வாழையெல்லாம் வெம்பிப்போச்சு. விளைஞ்சு நின்ன பயிரெல்லாம் உதிர்ந்து போச்சு. நம்பிமாரு புள்ளைக அம்மை பெத்து படுத்த படுக்கையா கிடக்குதுக. ஆடு, மாடெல்லாம் கொத்துக்கொத்தாச் செத்து விழுகுது. நம்பிமாருங்க தேகத்துல ராஜபிளவை வந்து ஊன் வடியுது.
நம்பிமாருக்கு, காளிகாத்தால இசக்கி காலடியில பலி கொடுத்ததுதான் இதுக்கெல் லாம் காரணம்னு புரிஞ்சுபோச்சு. குலை போட்ட ஒரு வாழை மரத்தை நட்டு, அதுக்கு `குலைவாழை இசக்கி'ன்னு பேரு வெச்சு காளிகாத்தாவைக் கும்பிட ஆரம்பிச்சாக.
இன்னிக்கும் நாகர்கோயில் பக்கமிருக்கிற புவியூர், திருநெல்வேலி பக்கமிருக்கிற செட்டிக்குளம் பகுதிக்கெல்லாம் போனா, ஊர் கோயில்கள்ல காளிகாத்தா, வாழைமர வடிவத்துல உக்காந்திருக்கிறதைப் பாக்கலாம். ஒவ்வொரு வருஷமும் பூவிட்ட ஒரு புது வாழை மரத்தைக் கொண்டாந்து அவ பீடத்துக்கு முன்னால நிறுத்தி, கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்புக் கேட்டு சாந்தமாக்குறாக.
அவளுக்கு எதிர்ல, கழுவுல விழுந்து செத்த அவ புருஷன் இருளி, பீட வடிவத்துல அமைதியா அவ முகம் பார்த்து உக்காந்திருக்கான். கழுவுல விழுந்து செத்ததால அவனை `கழுக்காரன்'னு எல்லாரும் அழைக்கிறாக.
வெ.நீலகண்டன் - படங்கள் : எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார் - ஓவியம் : ஸ்யாம்