மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பதின்வயதில் இனக்கவர்ச்சி இயல்பானதுதான்!

பதின்வயதில் இனக்கவர்ச்சி இயல்பானதுதான்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதின்வயதில் இனக்கவர்ச்சி இயல்பானதுதான்!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

ண் குழந்தை பருவமடைதல் பற்றிச் சென்ற இதழில் விளக்கிய மனநல மருத்துவர் ஷாலினி, அதுபற்றி இன்னும் பேசவேண்டிய, விழிப்பு உணர்வு தேவைப்படுகிற விஷயங்களைத் தொடர்ந்து பகிர்கிறார்...  

பதின்வயதில் இனக்கவர்ச்சி இயல்பானதுதான்!

பருவமடைந்த ஆண் குழந்தை தன்னை எப்படிப் புரிந்துகொள்கிறான்?

பருவமடைந்த பின்னர், அந்த ஆண் குழந்தையின் விந்துப்பையில் விந்தணு கோடிக் கணக்கில் உற்பத்தியாகும். ஒரு பெண் குழந்தைக்கு முதல் மாதவிடாய் நேரும்போது, உடனடியாக அதை தன் அம்மாவிடம் தெரிவிக்கும்படி சொல்லி வளர்க்கிறோம். இதுவே ஆண் குழந்தைக்கு விந்து வெளியேறினால், ‘அம்மா/அப்பா எனக்கு விந்து வெளியேறிடுச்சு’ என்று அவனால் சொல்ல முடிவதில்லை. ‘ஏன் எனக்கு இப்படி ஆகிடுச்சு?’ என்று யாரிடமும் கேட்க முடிவதில்லை.

பெரும்பாலும், விந்து வெளியேற்றம் என்பது விடியற்காலை 4 - 5 மணி அளவில், தூக்கக் கலக்கத்தில்தான் நிகழும். அந்த நேரத்தில்தான் விந்துப்பைகள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்யும். சிறுவர்களுக்கு அது என்னவென்று முதலில் புரியாது. இரண்டு, மூன்று முறை இப்படி ஆன பிறகு, தனக்குள் ஏதோ மாற்றம் நடக்கிறது என்பதை உணர்வார்கள். ‘நம் உள்ளாடையில் ஏன் இப்படியிருக்கு?’ என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள். முன்கூட்டியே இதுபற்றி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தால், ‘ஓ... நாம வயசுக்கு வந்துட்டோம்’ என்று அதைப் புரிந்துகொண்டிருப்பார்கள். அப்படி எதுவும் சொல்லப்படாததால், ‘நமக்கு ஏதோ ஆபத்துபோல; நமக்கு ஏதோ சரியில்லபோல’ என்று பயப்படக்கூடும்.

ஆண்களுக்கான திருமண வயது

விந்தணு உற்பத்தி ஆரம்பித்தவுடன், அந்த ஆண் தகப்பனாவதற்கான தகுதியைப் பெற்றிருப்பான். பெண்களுக்கு மட்டுமன்றி, அந்தக் காலத்தில் ஆண்களுக்கும் பதின்பருவ வயதிலேயே திருமணம் முடித்து வைக்கப்படும். அவன் அப்பா செய்யும் குலத்தொழிலை இவனும் கற்றுக்கொண்டு, குடும்பத்தைக் கவனிக்க ஆரம்பித்துவிடுவான். உதாரணமாக, அவன் அப்பா பானைத் தொழில் செய்தால், இவனும் அதைச் செய்து, நான்கு பானைகளை விற்றால் போதும் இவன் குடும்பம் நடத்துவதற்கு.

பின்வந்த காலங்களில் ஓர் ஆண் தன் சொந்தக்காலில் நின்ற பின்னரே அவனுக்குத் திருமணம் முடித்துவைக்கப்பட்டது. இன்று அவன் மாப்பிள்ளையாகும் தகுதிபெற வாகனம், வீடு என அவன் வருமானம் உயர வேண்டியுள்ளது. இதனால் திருமண வயது தள்ளிப்போயுள்ளது.  இன்றைய சூழலில், ஓர் ஆண் பருவமடைந்த பின்னர் கிட்டத்தட்ட 15 வருடங்கள்வரை திருமணத்துக்குக் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தப் பொருளாதாரக் கணக்கெல்லாம் இயற்கைக்குப் புரியாதே!

பதின்வயதுச் சிறுவர்களின் இனக்கவர்ச்சி இயல்பானதுதானா?

விந்தணு வெளியேற ஆரம்பிப்பதற்கு நான்கைந்து மாதங்கள் முன்பிருந்தே, அந்தச் சிறுவனுக்கு இனக்கவர்ச்சி ஏற்பட ஆரம்பித்துவிடும். பெண்களைப் பார்க்க வேண்டும் என்றும், அவர்களிடம் பேச வேண்டும் என்றும் தோன்றும். செக்ஸ் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். அதைப் பற்றிய பகல் கனவு, வேட்கை அதிகமாக ஆரம்பிக்கும். கலாசார ரீதியாக அதை நாம் தவறு என்போம். ஆனால், அது இயற்கை. குழந்தைப் பருவத்தில் உடல் வளர்ச்சி அவசியம் என்பதால், இயற்கையின் உந்துதலின்படி, சாப்பாட்டின் மேல் ஓர் ஆர்வம் இருக்கும். அதுவே பருவமடைந்த பின்னர், துணை தேடுதலும், பாலியல் வேட்கையுமே முதன்மை என்பதால் இயற்கையின் உந்துதல் அவற்றைச் சார்ந்து இருக்கும். இந்த எண்ணங்களை எப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதைப் பற்றிதான், ஆண் குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் பயிற்சி தரப்பட வேண்டும்.

வழிகாட்டுதல்கள் கிடைக்காததால் என்னென்ன பிரச்னைகள்?


பருவமடையும் ஆண் மிருகங்களுக்கு எந்தக் குழப்பமும் நேர்வதில்லை. துணை தேடுதல், எதிர்பாலின விலங்கோடு உறவில் ஈடுபடுதல், தன் இனத்தைப் பெருக்குதல், தன் இனத்தைப் பாதுகாத்தல்... என இப்படி தங்கள் மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொள்கின்றன. மனித ஆணின் குரோமோசோம்களிலும் இந்தப் பதிவுகள் இருந்தாலும், சமூக நடைமுறைகள் அவர்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பருவமடைதலுக்குப் பின் மனித ஆண்களின் மனதில் குழப்பம் ஏற்படுகிறது. முறையான பாலியல் கல்வி வழிகாட்டுதல்களும் கிடைப்பதில்லை.

அறியாமையை வைத்து மோசடி!

பருவமடையும்போது ஒரு பையனின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுமோ, அவற்றையெல்லாம் போலி வைத்தியர்கள்  நோய்போலவே சித்திரிக்கிறார்கள். உடல் இளைப்பது,  முகத்தில் பருக்கள் ஏற்படுவது, முக எலும்புகள் எடுப்பாகத் தெரிவது எல்லாம் உடலினுள் ஆண்தன்மை வளர்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளங்கள். இதுபற்றிச் சரியாகச் சொல்லப்படாதபோது, ‘எனக்கு மட்டும்தான் இது மாதிரியான செக்ஸி கனவெல்லாம் வருது. நான் மட்டும்தான் பேட் பாய். நான் இப்படி நடந்துக்கிறதுனாலதான் கடவுள் என்னைத் தண்டிக்கிறார்போல. அதனாலதான் என் முகம் இப்படி மாறிடுச்சு’ என்றெல்லாம் ஆண் குழந்தைகள் மிகவும் அச்சப்படுவதோடு, பெரும் குற்ற உணர்வுக்கும் உள்ளாகிறார்கள்.

பாலியல் விஷயங்கள் பற்றிய விழிப்பு உணர்வின்மையால், பல ஆண்கள் சுயநம்பிக்கை இல்லாதவர்களாக ஆகிவிடுகிறார்கள். பெண்கள் பூப்பெய்தல் விஷயங்கள்போல, ஆண் பருவமடைதல் குறித்த உடலியல் தகவல்களையும் வெளிப்படையாகப் பேசுவது, பெற்றோர் அல்லது சிங்கிள் பேரன்ட் ஆண் குழந்தைகளிடம் பருவமடைதல் பற்றிப் பேசுவது, பருவமடைந்த ஆண்களின் நட்பு வட்டத்தைக் கண்காணிப்பது, பருவமடைந்த ஆண்களிடம் பருவமடைந்த பெண் உடல் மாற்றங்கள் பற்றிப் பேசுவது என இவற்றைப்பற்றி எல்லாம் தொடர்ந்து ஆலோசிப்போம்...