
சட்டம் பெண் கையில்வழக்கறிஞர் வைதேகி பாலாஜிதொகுப்பு: யாழ் ஸ்ரீதேவி - ஓவியம்: கோ.ராமமூர்த்தி
நித்யா மிகப்பெரிய மனப்போராட் டத்துக்குப் பின்னரே அந்த முடிவை எடுத்திருந்தாள். அவளது முடிவைக் கேட்ட நித்யாவின் அம்மா அதிர்ச்சியில் மௌனமானார். “நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்மா. கூட வேலை பார்க்குற குமார் தொல்லை தாங்கலை. என்னைக் கடந்து போறப்ப வெல்லாம் ரெட்டை அர்த்தத்துல ஏதாச்சும் சொல்லிட்டுப் போறான். பின்பக்கமா நின்னுட்டு உடம்பு கூசுற மாதிரி பார்க்குறான். யாரும் கவனிக்காதப்போ ஆபாச சைகை செய்றான். இதையெல்லாம் ஆதாரபூர்வமா யார்கிட்டேயும் நிரூபிக்க முடியாது. அதனாலதான் வேலையை விட முடிவு பண்ணிட்டேன்” என்று குமுறினாள்.

நித்யாவின் அம்மா, “மெதுவா பேசு, மாப்பிள்ளை காதுல விழுந்திடப்போவுது. உன் சம்பளத்தையும் நம்பித்தான் இந்த வீட்டை லோன்ல வாங்கியிருக்கோம். மாசம் 22 ஆயிரம் ரூபாய் லோன் கட்டணும் மனசில வெச்சுக்கோ. இந்தப் பிரச்னையை போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் எடுத்துட்டுப்போனா நம்ம மானம், நிம்மதி போயிடும். அவனைக் கண்டுக்காம அமைதியா போயிடும்மா’’ என்றார். நித்யா ஒருத்தி அல்ல; நித்யாக்கள் ஒவ்வோர் அலுவலகத்திலும் இருக்கிறார்கள். தனக்கு நேரும் பாலியல் தொல்லைகளைச் சகித்து, விழுங்கிவிட்டு வாழ்க்கையை நகர்த்த தங்களைப் பழக்கிக்கொண்டவர்கள். ஆனால், நீங்கள் பின்பற்றவேண்டியது நித்யாவை அல்ல; கிருத்திகாவை.
என்ன செய்தார் கிருத்திகா? தனக்கு அலுவலகத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர் ஓர் உயரதிகாரி, தன் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் என்றாலும், அவருக்குத் தண்டனை பெற்றுக்கொடுத்தார். எப்படி?!
தெரிந்துகொள்வதற்கு முன்னர், பணியிடத்தில் பாலியல் தொல்லைத் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் - 2013 உருவான கதை பற்றி அறிந்துகொள்வோம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட விஷாகா என்ற பெண்ணின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அதன் தீர்ப்பில், வேலைக்குச் செல்லும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதைத் தவிர்க்கச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. அதுவரை, அந்தக் குறிப்பிட்ட தீர்ப்பில் கூறப்படும் விதி முறைகளை அலுவலகங்கள் பின்பற்றவும் வலியுறுத்தியது. பின்னர், ‘விஷாகா வழிமுறைகள்’ ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, பத்துக்கு மேற்பட்ட பெண்களைப் பணியில் அமர்த்தி வேலைவாங்கும் அனைத்து அலுவலகங்களும், அங்கு அவர்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’ என்ற குழுவை அமைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அந்தக் குழுவில், நிறுவனத்தைச் சேராத ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். இந்தச் சட்ட வரையறைப்படி கிருத்திகாவின் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட குழு, அவருக்கு உதவியதா? பார்ப்போம்.
சமையல் மசாலா தயாரிக்கும் நிறுவனம் அது. கிருத்திகா, அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை மேலாளர். உயர் பொறுப்பில் இருக்கும் பெண்களும், பாலியல் தொல்லைக்கு விதிவிலக்கல்லவே! கிருத்திகாவின் அப்பா வயது, அந்த உயரதிகாரிக்கு. அந்நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். கைகுலுக்குவது, தட்டிக்கொடுப்பதுபோல கிருத்திகாவை வக்கிரத்துடன் தொடுவது, தன் ஸீட்டிலிருந்து கிருத்திகாவை வைத்த கண் வாங்காமல் வெறிப்பது, வேலை என்ற சாக்கில் அவரை அடிக்கடி தன் ஸீட்டுக்கு வரவழைத்து, கோப்புகளைப் பார்ப்பதுபோல உரசுவது, இரவில் போன் செய்து வேலை விஷயமாகப் பேசிவிட்டு, இணைப்பைத் துண்டிப்பதற்கு முன்னர் ஆபாச வார்த்தைகள் சொல்வது என்று கிருத்திகாவுக்குத் தொந்தரவுகள் தந்தார். இவையெல்லாம் கிருத்திகாவின் பணிச்சூழலை நரகமாக்கி, அவர் நிம்மதியைப் பறித்து, அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தன. சம்பந்தப்பட்டவரை கடும் வார்த்தைகளால் திட்டி எச்சரித்தார். ஆனாலும், தனக்கு நேரும் அநியாயத்தை வெளியே யாரிடமும் அவர் வாய் திறக்காமலிருந்தார்.
தங்களது ஆபாச நடவடிக்கைகளைப் பெண்கள் வெளியே சொல்லாவிட்டால், ஆண்கள் தைரியமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்தானே? அந்த உயரதிகாரியும் அதைச் செய்தார். ஒரு புது எண்ணில் இருந்து கிருத்திகாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பினார். கிருத்திகாவை உல்லாச விடுதிக்கு வரச்சொல்லி அழைத்த அந்தக் குறுஞ்செய்தியை அவர் அனுப்பியபோது, கிருத்திகா முன் இரண்டு முடிவுகள் ஊசலாடின. வேலையை விடுவது அல்லது அவரைப் பற்றி அலுவலகத்தில் புகார் கொடுப்பது.
அனைவரையும்போல, வேலையை விடுவது என்ற முடிவை கிருத்திகா எடுக்கவில்லை. இன்னோர் அலுவலகத்துக்குச் சென்றாலும், அங்கும் இப்படி ஒரு கறுப்பு ஆடு இருக்கும். ‘தவறு செய்தது அவன், சட்டம் இருக்கிறது நமக்கு உதவுவதற்கு’ என்று நம்பினார். தன் அலுவலகத்தின் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யில் புகார் அளித்தார். கமிட்டியின் விதிமுறைப்படி... காவலர்கள், வழக்கறிஞர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் இவர்கள் முன்னிலையில் புகார் கொடுத்த பெண் விசாரிக்கப்பட மாட்டார். எனவே, கிருத்திகாவும் அக்குழு உறுப்பினர்களால் ரகசியமாக விசாரிக்கப்பட்டார். என்றாலும், குற்றம் சுமத்தப்பட்டவர் பங்குதாரர்களில் ஒருவர் என்பதால், குழு எடுத்த முடிவு குற்றம் சுமத்தப்பட்டவருக்கே சாதகமாக இருந்தது.
இங்கு எழும்பும் கேள்வி முக்கியமானது. ‘என் அலுவலகத்தில் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் புகார் அளித்தும், குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், நான் என்ன செய்வது?’
கிருத்திகாவின் செயலே, நமக்கான பதில்.
‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’க்கு அடுத்த நிலை, ‘உள்ளூர் புகார் குழு (Local Compliant Committee)’. இக்குழு, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேக அலுவலர்கள் உள்ளனர். பெரும்பாலான லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்குகின்றன. கிருத்திகா, அடுத்த கட்டமாக இந்தக் குழுவில் புகார் அளித்தார். மீண்டும் ரகசிய விசாரணை நடந்தது. குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராகச் சாட்சி சொல்ல, கிருத்திகாவின் தோழி முன்வந்தார். கிருத்திகாவின் மொபைலுக்கு ஆபாசச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பப்பட்ட எண், அந்த உயரஅதிகாரி போலி ஆவணங்கள் கொண்டு வாங்கியது என்பது நிரூபிக்கப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாக நின்ற அவரைக் காப்பாற்ற முடியாமல் நிறுவனத்தின் மேலாண்மைக் குழு திண்டாடியது. நிறுவனத்தில் அவர் தொடர்ந்து நீடித்தால், நிறுவனம் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகள், நஷ்டங்களை ஆலோசித்து, அவரைப் ‘பங்குதாரர்’ என்ற பொறுப்பிலிருந்து நீக்கியது. நம்புங்கள்... இப்போது கிருத்திகா நிம்மதியாக அதே அலுவலகத்துக்குச் சென்றுவருகிறார். அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற பெண்கள், ‘கமிட்டி இருக்கிறது’ என்ற தெம்பில் இருக்கிறார்கள். அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஆண்கள், ‘கமிட்டி இருக்கிறது’ என்ற எச்சரிக்கை உணர்வில் இருக்கிறார்கள்.
ஜென்டில் ரிமைண்டர் தோழிகளே... உங்கள் அலுவலகத்திலும் கமிட்டி இருக்கிறது!
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
பெண் தொழிலாளர்களுக்கு...
பத்துக்கும் குறைவான பெண் பணியாளர்கள் வேலைசெய்யும் இடங்களில், சட்டப்படி கமிட்டி அமைக்கத் தேவையில்லை. எனவே, அவர்களும் மற்றும் கட்டுமானத் தொழிலில் சித்தாளாகப் பணிபுரியும் பெண்கள், துணிக்கடைகளில் விற்பனையாளர் வேலைபார்க்கும் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என இவர்களெல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளானால் மாவட்டம்தோறும் இயங்கும் ‘லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’யில் நேரடியாகப் புகார் அளிக்கலாம். அல்லது, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மூலமாகவும் புகார் மனு கொடுக்கலாம். அது ஏழு நாள்களுக்குள் ‘லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’க்குச் சென்றடையும். புகார்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றம்சாட்டப்பட்டவருக்குத் தற்காலிகத் தண்டனையாகப் பணி நீக்கம், பதவி உயர்வு ஒத்திவைப்பு, பணியிட மாற்றம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். காழ்ப்பு உணர்ச்சியால் பெண் ஊழியர் பொய்ப்புகார்கள் கொடுத்தது உண்மையென்று நிரூபணமானால் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும்.
பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் வழிகாட்டல்கள்
*அலுவலகத்தில் தனக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்த ஆதாரங்களைப் பெண்கள் சேகரிக்க வேண்டும்.
*பாதிக்கப்பட்ட பெண் உடல்ரீதியாக பலவீனமாக இருக்கும் சூழ்நிலையில், அவரின் உறவினர், அவர் சார்பாக கமிட்டியில் புகார் அளிக்கலாம்.
*குற்றம் சுமத்தப்பட்டவர் உயரதிகாரி என்றால் அந்தப் பெண் மிரட்டப்பட வாய்ப்பிருப்பதால், இன்டர்னல் கமிட்டி/லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டியின் விசாரணைக் காலத்தில் அப்பெண்ணுக்கு மூன்று மாதங்கள் விடுப்பு வழங்கப்படும்.
*‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’ இல்லாதபோது அல்லது அங்கு நியாயம் கிடைக்காதபட்சத்தில் அணுகப்படும் ‘லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’க்கு, மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்ட்ரேட், துணை மாஜிஸ்ட்ரேட் தலைமை வகிப்பார்கள்.
*புகார்களை விசாரிக்கும் குழுவில் பெண் உறுப்பினர் கட்டாயம் இருப்பார்.