
மாற வேண்டும் இந்த மனநிலை!
பெண்களைப் பற்றிய நம் சிந்தனைகளையும் பிம்பங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

‘காவல்துறை அதிகாரி, மருத்துவர், வீட்டுவேலை செய்பவர், செவிலியர்’ என நான்கு பணியாளர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, காவல்துறை அதிகாரி, மருத்துவர் என்றால் ஆண்களைப் பற்றிய பிம்பங்களும், வீட்டு வேலை செய்பவர், செவிலியர் என்றால் பெண்களைப் பற்றிய பிம்பங்களும்தான் பொதுவாகத் தோன்றும். ‘இந்த வேலைகளை ஆண்கள்தான் செய்வார்கள்’, ‘இந்த வேலைகளைப் பெண்கள்தான் செய்வார்கள்’ என்று இப்படித் தோன்றும் எண்ணங்கள், காலங்காலமாக உருவான கருத்துகளின் அடிப்படையிலேயே ஏற்படுகின்றன.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பாலினச் சமத்துவம் குறித்து சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். இந்தச் சிந்தனை மாற்றங்களைக் குழந்தைகளிடமிருந்து, குடும்பத்திடமிருந்து தொடங்க வேண்டியது அவசியமான ஒன்று.
பெண்களின் விளையாட்டுகள் என்றால் தாயம், பல்லாங்குழி என்றும், ஆண்களின் விளையாட்டுகள் என்றால் கிரிக்கெட், கால்பந்து என்றும், விளையாட்டுகள், உடைகள், பழக்கவழக்கங்களைப் பிரித்துப்பார்க்கும் சிந்தனைமுறை மாறவேண்டும். பெண்களை, போகப்பொருளாகவும் ஆண்களை ஏமாற்றுபவர்களாகவும் சித்திரிப்பதைத் திரைப்படங்களும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் நிறுத்த வேண்டும். இந்தச் சிந்தனை மாற்றத்தை உருவாக்குவதில் குடும்பம், கல்விக்கூடங்கள், ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் பொறுப்பு இருக்கிறது.
பெண்களை ஒருபடி கீழாக வைத்துப் பார்க்கும் எண்ணத்தின் விளைவுதான், தன் காதலை ஏற்காததால் அழகேசன் என்ற இளைஞர், அஸ்வினி என்ற கல்லூரி மாணவியை, அவரின் கல்லூரிக்கு எதிரிலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம். நிர்பயா, சுவாதி, வினோதினி, அஸ்வினி என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் அளவுக்குப் பெண்கள் மீது ஆசிட் வீச்சு, படுகொலை, பாலியல் வல்லுறவு என்று வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதற்கு இதுவே காரணம்.
தன் விருப்பத்துக்கு மாறாக வேறு சாதி ஆணைக் காதலித்தால், திருமணம் செய்துகொண்டால், பெற்ற மகள் என்றும் பார்க்காமல் ஆணவக்கொலை செய்யும் பெற்றோர்களைப் பார்க்கிறோம். அதேபோல்தான் தன் காதலை ஏற்கவில்லை என்றதும் ‘தனக்குக் கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என்ற முடிவுடன், கொலை செய்கிற இளைஞர்களையும் பார்க்கிறோம். இரண்டு கொலை மனங்களுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை, பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாததுதான்.
அடிப்படையிலேயே மாற்றங்களைக் கொண்டுவருவதுதான் இன்னொரு அஸ்வினியை நாம் இழக்காமலிருப்பதற்கான வழி!