மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா? - 02

சட்டம் பெண் கையில்
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

சட்டம் பெண் கையில்வழக்கறிஞர் வைதேகி பாலாஜிஎழுத்து வடிவம்: யாழ் ஸ்ரீதேவி - ஓவியம் : கோ.ராமமூர்த்தி

ரசுப் பணியில் இருக்கும் தந்தை மரணமடைந்தால், அவரின் மகனுக்குத் திருமணமாகியிருந்தாலும் வாரிசு வேலை தரப்படுகிறது. ஆனால், அந்த வேலை திருமணமான அவர் மகளுக்குத் தரப்படுமா?  

வாரிசு வேலை... திருமணமான மகளுக்குச் சாத்தியமா? - 02

ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்கிறோம். இந்திய அரசியலமைப்பு சாசனம் 1949, ஷரத்து 15-ல்... மதம், சாதி, பிறந்த இடம், பாலினம் ஆகிய வேறுபாடுகளைக்கொண்டு பொதுமக்களிடம் பாகுபாடு காணக்கூடாது என்று தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. சக மனிதர்கள் இந்தச் சட்டத்தை மதிக்காமல் போனால், எடுத்துச் சொல்லலாம் அல்லது சட்டப் போராட்டம் மூலமாகப் புரியவைக்கலாம். அரசே இந்தப் பாகுபாட்டுக்கு உடந்தையாக இருந்தால் என்ன செய்வது? அரசு வேலையில் இருக்கும்போது பணிக் காலம் முடிவதற்குள் தந்தை அல்லது தாய் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால், அவரது வேலையைக் கருணை அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் எனத் திருமணமான மகன் அரசிடம் கேட்கும்போது, அது வழங்கப்படுகிறது. அதையே திருமணமான மகள் கேட்டால், அவரது திருமணமே அவர் தன் அப்பா/அம்மாவின் வேலையைப் பெற தடையாக இருந்துள்ளது. ஆனால், இதை எதிர்த்துப் போராடி வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற பெண்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும், ஆண் - பெண் பேதமற்ற புதிய சட்டங்கள் உருவாகக் காரணமாகவும் இருக்கிறது. அப்படி சில உதாரண மனுஷிகளின் வெற்றி வழக்குகள் இங்கே...

யசோதாவின் நீண்ட நெடிய போராட்டம்

`ஆண்பிள்ளைக்குதான் அரசின் கருணை வேலை' என்கிற வரலாற்றைப் புரட்டிப்போடும் வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்தது. யசோதாவின் தந்தை கூட்டுறவு வங்கியில் ஓட்டுநராகப் பணியிலிருந்தபோது, 2008-ம் ஆண்டு இறந்தார். அவர் மறைவையடுத்து வழங்கப்படும் கருணை வேலையைத் தனக்குக் கொடுக்கும்படி கூட்டுறவு வங்கியில் கேட்டார் யசோதா. ஆனால், அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாமலேயே இருந்தது. விடாமுயற்சியைக் கைவிடாமல் ஆறு ஆண்டுகள் போராட்டத்தைத் தொடர்ந்தார். நிர்வாகத்துக்கு மனு கொடுத்தார். எதற்கும் பலனில்லை.

இறுதியாக, தந்தையின் கருணை வேலையைப் பெற நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார் யசோதா. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரிட் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், யசோதாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பிவைத்தது. ஆனால், ‘உனக்குத் திருமணமாகிவிட்டது, 30 வயதாகிவிட்டது’ என்பது போன்ற காரணங்களைச் சொல்லி, யசோதாவுக்கு வேலை தர முடியாது எனக் கூட்டுறவு வங்கி அவரைத் திருப்பியனுப்பியது. இம்முறையும் யசோதா பின்வாங்காமல் போராடினார். நீதிமன்றத்தின் பரிந்துரையை மதிக்காமல் தன்னைத் திருப்பியனுப்பிய கூட்டுறவு வங்கிக்கு எதிராக வலுவாகப் போராட முடிவெடுத்தார். ஆனால், அந்த முயற்சியிலும் யசோதா தோல்வியைத் தழுவினார்.

மதுரைக் கிளையில் யசோதா மீண்டும் மேல் முறையீடு செய்தார். அப்போது நீதியரசர் சுப்பையா, நீதிபதி நிஷா பானு முன்னிலையில்  நடந்த விசாரணையில், கூட்டுறவு வங்கியின் விதியின்படி, 40 வயதாகும்வரை கருணை வேலைக்காக விண்ணப்பிக்கலாம் என்ற உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டது. நான்கே வாரத்தில் யசோதாவுக்கு நியமனக் கடிதம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், இந்த நியமனக் கடிதத்தை வாங்க
2008 முதல் 2017 ஏப்ரல் மாதம் வரை வங்கிக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்துள்ளார் யசோதா. இறுதியில், தன் உரிமையை, வேலையைப் பெற்றும்விட்டார். யசோதாவைப் போன்ற பெண்கள்தான் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களுக்கு நியாயம் கேட்டு புதிய பாதையை உருவாக்குகின்றனர்.

`திருமணமான பெண்கள், தாய் தந்தையின் வாயிலாகக் கிடைக்கும் கருணை வேலையைப் பெறமுடியாது' என்கிற தீர்மானம் அடங்கிய அரசாணை 1977-ம் ஆண்டு வெளியானது. இறந்துபோன அப்பா / அம்மாவின் அரசாங்க வேலையைக் கருணை அடிப்படையில் வாரிசுகள் பெற, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்பாவின் வேலையை அவருடைய மகள் பெற வேண்டும் என்றால் அவர் கணவனால் கைவிடப்பட்டவராகவோ, விவாகரத்தானவராகவோ, கணவரை இழந்தவராகவோ இருக்க வேண்டும். திருமணமானவராக இருந்தாலும் கருணையின் அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும். ஆனால், அவரது திருமணம் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதிக்குப் பின்னர் நிகழ்ந்திருக்க வேண்டும். இந்த விவரங்களை அரசு வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று அரசாணைகள் வழியாக வெளியிட்டுள்ளது.

நீதியரசர் ஹரிபரந்தாமன் வழங்கிய முக்கிய தீர்ப்பு


திருமணமாகிவிட்டது என்பதால், தாய்/தந்தையின் இறப்புக் காரணமாகக் கிடைக்க வேண்டிய கருணை வேலை வேலூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு மறுக்கப்பட்டபோது, 2013-ம் ஆண்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது அந்த வழக்கை நீதியரசர் ஹரிபரந்தாமன் விசாரித்தார். `குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தில் மகனும் மகளும் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்றுள்ளது. மகன் மட்டும் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் தந்தையின் வேலையை மகளுக்கும் வழங்க வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டார். இதே சூழலில் வழக்கு தொடர்ந்த தர்மபுரியைச் சேர்ந்த கோவிந்தம்மாள் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த கவிதா, ரேணுகா ஆகியோருக்கும் இதே நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

டிப்ஸ்... டிப்ஸ்...

லெக்ட்ரிக் ஹீட்டரில் சமைக்கும்போது ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு அல்லது மரப்பலகைமீது நின்று செயல்படுவது பாதுகாப்பானது.

- பகவதி பிரவின், சென்னை-94

கொஞ்சம் பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து வெயிலில் நன்றாகக் காயவைத்து, கோல மாவுடன் சேர்த்துக் கோலம் போட்டால் பளிச்சென்று இருக்கும். பூச்சிகளுக்கும் உணவாகும்.

- சாவித்திரி, சென்னை-116

குளிக்கும் சோப்போ, துணி துவைக்கும் சோப்போ பயன்படுத்திய பின்பு, ஒரு ஸ்பாஞ்ச் மீது வைத்து உபயோகித்தால், உலர்ந்த நிலையில் இருக்கும். சோப்பு வீணாகாது. இந்த ஸ்பாஞ்சை பாத்திரங்கள், டைல்ஸ் போன்றவற்றைக் கழுவப் பயன்படுத்தலாம்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15