
ஆர்.வைதேகி
ஜோதி தாவ்லேயை நிஜ ‘அருவி’ என்றே சொல்லலாம். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஜோதி, கண்ணீருக்கெல்லாம் அப்பாற்பட்ட கம்பீர மனுஷி. ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்த விழிப்பு உணர்வுப் பிரசாரங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர். நாக்பூரில் வசிக்கிற ஜோதியிடம் தொலைபேசியிலோ, வாய்ஸ் மெசேஜிலோ பேச முடியாது. ஜோதி கேட்கும் திறனற்றவர். அவரை மின்னஞ்சல் மூலம் அணுகினேன்.
“ஜார்கண்ட்ல பிறந்தேன். திருமணமாகி வரிசையா மூன்று கர்ப்பங்கள். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் தாம்பத்யம் இருந்ததில்லை, மேரிட்டல் ரேப்தான் நடந்தது. கருத்தடை மாத்திரைகளை என் உடம்பு ஏத்துக்கலை. செக்ஸ் இன்பத்துக்குத் தடையா இருக்கும்னு, என் முன்னாள் கணவர் காண்டம் பயன்படுத்த மறுத்துடுவார். அவரது வற்புறுத்தல் காரணமா மூணு அபார்ஷன் பண்ணினேன். அபார்ஷன் பண்றப்ப நடந்த மருத்துவ அலட்சியத்துனால, எனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்தது.” - உணர்வுகளைச் சுமந்த ஜோதியின் எழுத்துகள், நம்மை உலுக்குகின்றன. “அந்தத் தருணத்துல என்கூட இருக்கவேண்டிய கணவர், கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாம என்னை வற்புறுத்திக் கையெழுத்து வாங்கிட்டுப் பிரிஞ்சு போயிட்டார்’’ என்று சொல்லும் ஜோதி அதற்குப்பிறகுதான் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கும் முழுமனுஷியாக மாறியிருக்கிறார்.

“ஹெச்.ஐ.வி தொடர்பான ஆன்லைன் குழுக்கள்ல என்னை இணைச்சுக்கிட்டேன். அமெரிக்காவைச் சேர்ந்த ஹெச்.ஐ.வி ஆக்டிவிஸ்ட் மரியா மெஜியாவின் ‘International place for people with HIV/AIDS, and the people who love us’ என்ற முகநூல் பக்கம் அதுல குறிப்பிடத்தக்கது. ‘www.thewellproject.org’ என்ற இணையதளம் என்னுடைய எல்லா சந்தேகங்களையும் தீர்த்துவெச்சது. கடந்த 12 வருஷங்களா நான் இந்த அமைப்புகளில் என்னைத் தீவிரமா இணைச்சுட்டிருக்கேன்’’ என்று சொல்லும் ஜோதி தாவ்லே, பெங்களூரில் உள்ள ‘Being Positive Foundation’ அமைப்பின் பிராண்ட் அம்பாஸடர். ஹெச்.ஐ.வி, ஹெச்.சி.வி, ஹெச்.பி.வி நோய்களை ஒழிப்பதற்கான விஷயங்கள், கவுன்சலிங், டே கேர், பாலியேட்டிவ் கேர், மருத்துவ ஆலோசனை உள்ளிட்ட பல விஷயங்களைச் செய்துவரும் அமைப்பு இது.

“அரசாங்க மருத்துவமனையில், நான் இருந்த பெட்டுக்கு மேல ‘ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவள்’னு போர்டு வெச்சதோட, என்னுடைய பெட்ஷீட்டை மாத்தவும், பெட் பேனை அகற்ற உதவவும் மறுத்த நர்ஸையும் பார்த்திருக்கேன். எனக்குச் சாப்பாடு கொடுக்கிறவங்க கையில கிளவுஸ் போட்டுக் கிட்ட துயரங்களையும் கடந்திருக்கேன். அதற்குப்பிறகு, என்னைப்போல் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவங்களுக்காகச் செயல்படுவதுன்னு முடிவெடுத்தேன். அவங்களை மன அழுத்தத்துலேருந்தும், தற்கொலை எண்ணத்துலேருந்தும் மீட்டு, ஆதரவா நின்னு, புது நம்பிக்கையைக் கொடுக்கிற இந்த சேவை ரொம்பப் பிடிச்சிருக்கு. காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் மத்தியில செக்ஸ் கல்வி பத்திப் பேசறதும், மருந்துகளை உபயோகிக்கும்போது பாதுகாப்பா இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்றதும், மூடநம்பிக்கைகளை உடைக்கிறதும் முக்கியமான கடமையா தெரியுது. என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கிறதா உணரவைக்கிற விஷயங்கள் இவை. ஹெச்.ஐ.வி இல்லாத இந்தியாவை உருவாக்கிறதுல எனக்கும் பங்கிருக்கிறதா நம்பறேன்’’ என்ற நம்பிக்கை நாயகி, ஒரு மெசேஜ் சொல்லி முடிக்கிறார்...
“உங்க பலத்தை வெளிப்படுத்துவதுதான் ஒரே வழி என்ற சூழலைச் சந்திக்கும்வரை, நீங்க எவ்வளவு பலம் பொருந்தியவர்னு நீங்களே உணர்ந்திருக்கமாட்டீங்க!’’
ஒவ்வோர் எழுத்திலும் உண்மை ஒளிர்கிறது.