``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது!’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்

சனங்களின் கதைமு.பார்த்தசாரதி, படங்கள் : கா.முரளி
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது உள்ளாவூர் கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை புதர் மண்டிக்கிடக்கும் பாலாற்றங்கரை. அதையொட்டிய சுடுகாட்டின் அருகில் 20 குடிசைகள். அங்குதான் பச்சையம்மாளின் குடிசையும் இருக்கிறது. தன்னுடைய ஒன்பதாவது வயதிலிருந்து பல வருடங்கள் கொத்தடிமை வாழ்வு வாழ்ந்தவர் மீட்கப்பட்டு, இன்று தன் இருளர் இன மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் ஏழைப் பெண்மணி. அதற்காக டெல்லி, மும்பை சென்று விருதுகள் பெற்றிருப்பவர்.
மூன்று பேர் மட்டுமே அமரக்கூடிய அளவில் இருக்கும் குடிசையில் பூனை, நாய்க்கெல்லாம் இடம்கொடுத்திருந்தார் பச்சையம்மாள்.
“அப்பா வாங்கியிருந்த கடனுக்காக என் அண்ணன் செய்யாறுல இருக்குற குவாரியில வேலைக்குப் போச்சு. ஓர் ஆளா வேலை பாத்தா கடன் சீக்கிரம் கழியாதுன்னு என்னையும் அம்மாவையும் அங்க கூட்டிட்டு போச்சு. அப்போ எனக்கு ஸ்கூலுக்குப் போற வயசு. குவாரியில கல்லு ஒடைச்சுப் போடுறது, பாறைக்குள்ள வெடிமருந்து வைக்குறது, கழனியில அறுவடை பண்றதுன்னு எல்லா வேலைகளையும் அங்க பாக்க வெச்சாங்க. அந்த குவாரி ஒரு பெரிய குழியாட்டம் இருக்கும். சின்ன வயசுலேயே அதுக்குள்ள போயிட்ட எனக்கு, எந்த வருஷத்துல இருக்கோம், என்ன வயசு ஆகுதுனு, வெளியில என்ன நடக்குதுன்னு எதுவுமே தெரியாம போயிடுச்சு. அப்பா எவ்வளவுதான் கடன் வாங்கியிருந்துச்சு, இப்போ எவ்வளவு ரூவா கழிஞ்சிருக்குன்னுகூடத் தெரியாது. மொதலாளிக்கிட்ட கேட்டா என்னையும் அம்மாவையும் அடிப்பாங்க. அதனால கேக்க மாட்டோம்.

காலையில அஞ்சு மணிக்கு குவாரிக்குள்ள போயிடணும். நைட்டு 11 மணிவரை வேலை பாக்கணும். குவாரிக்குப் பக்கத்துலயே குடிசை போட்டுக்குடுத்து தங்க வெச்சிக்கிட்டாங்க. நெனைச்ச நேரம் தூங்க முடியாது, சாப்புட முடியாது, தண்ணிகூட குடிக்க முடியாதுண்ணே. ராத்திரி தூங்கலாம்னு குடிசைக்கு வந்தா பாறை வெடிச்சு குடிசை மேலயே கல்லுவந்து விழும். தெனம் தெனம் பதறிக்கிட்டேதான் இருப்போம்.
ஒருவாட்டி அம்மாவுக்கு ரொம்ப முடியாம போயிடுச்சு. அந்த நேரம் பாத்து ஊருல அப்பாவும் ஆக்ஸிடென்ட்ல செத்துப்போயிடுச்சுன்னு தங்கச்சிக்கிட்ட இருந்து தகவல் வந்துச்சு. அப்போ அம்மாவோட சேர்ந்து நானும் வெளியில போயிடலாம்னு நெனச்சேன். ஆனா, அம்மாவை மட்டும் என் தங்கச்சிகூட அனுப்பிட்டு என்ன அங்கேயே வெச்சுக்கிட்டாங்க. அப்பா முகத்தைக்கூட பார்க்க முடியலை’’ - நம்மோடு வாழும் சக மனிதர்கள் தண்ணீர் குடிக்கக்கூட மறுக்கப்பட்டு, நாள், கிழமைகூட தெரியாமல் இப்படிக் கொத்தடிமையாக வாழ்ந்திருப்பார்களா என்ற ஆச்சர்யத்துக்குப் பதிலாக, ரத்தமும் சதையுமான சாட்சியாக நம் முன் இருந்தார் பச்சையம்மாள். அவர் கணவர் அருளுக்கு நேர்ந்த கொடுமைகள், இன்னும் அதிர்ச்சி ரகம்.
“பச்சையம்மா வேலபாத்த ஓனருக்கிட்ட தான் என் அப்பா அஞ்சாயிரம் ரூவா கடன் வாங்கியிருக்காரு. கடன கொடுக்க முடியலன்னு சொல்லி என்ன அங்க அனுப்பி வெச்சிட்டாரு. எட்டு வயசுல நான் அந்தக் குவாரிக்குப் போனேன். அதுக்கப்பறம் தை மாசம் பொங்கல் வர்றப்போ மட்டும் ஒரு வருஷம் முடிஞ்சுபோச்சுனு நினைச்சுப்பேன். அஞ்சாயிரம் ரூபாய்க்கு பத்து வருசமா அங்க வேலை பாத்துருக்கேன். ‘ஏன் அண்ணாச்சி, இன்னுமா அந்த அஞ்சாயிரம் கடன் கழியல?’ன்னு கேட்டா, ‘அது எப்பவோ கழிஞ்சிட்டு. ஆனா, அதுக்கு வட்டி யாரு கட்டுவா’ன்னு சொல்லிச் சொல்லி என்ன அங்கேயே வெச்சிக்கிட்டாரு. நான் தப்பிச்சுப்போக முயற்சி செஞ்சேன். அவங்க ஆளுங்க கண்டுபுடிச்சு அடி வெளுத்து வாங்கிட்டாங்க. இப்படி ரொம்பவே பட்டுட்டேன்’’ என்பவருக்கு, குவாரியில் தன்னுடன் வேலைபார்த்த பச்சையம்மாளின் மீது காதல் வந்திருக்கிறது.
‘`ரெண்டு பேருக்கும் புடிச்சுப்போயிடுச்சு. பச்ச, அது அண்ணன்கிட்ட போயி எங்க கல்யாணத்தைப் பத்திக் கேட்டுச்சு. அப்போ எங்க ஓனரு, ‘சரின்னு சொல்லுடே. கல்யாணத்த நான் நடத்தி வைக்குறேன்’னு சொன்னதும் மச்சான் சம்மதிச்சாரு. மாமண்டூர் பக்கத்துல ஒரு எடத்துல 30 பேருக்கு அரசாங்கம் சார்புல கல்யாணம் பண்ணி வெச்சாங்க. அதுல ஒரு ஜோடியா நாங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்போ எனக்கும் பச்சைக்கும் என்ன வயசுனுகூட தெரியாது; அது எந்த வருஷம்னும் தெரியாது’’ என்றவர், வெகுவிரைவில் கடனை முடித்து அங்கிருந்து வெளியேறி வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஆசையுடன் முதலாளியிடம் போய்ப் பேசியிருக்கிறார். அதைச் சொல்லும்போது பச்சையம்மாளின் முகத்தில் வலி மிகுகிறது.
‘` ‘எங்கள எப்போ அனுப்பி வைப் பீங்க?’னு போய்க் கேட்ட எங்ககிட்ட, ‘இப்போதான் ரெண்டு பேரு அப்பனும் வாங்கியிருந்த கடனுக்கான வட்டி கழிஞ்சிருக்கு. ஆனா, இப்போ உங்க கல்யாணத்துக்கு அஞ்சாயிரம் செலவு பண்ணியிருக்கேன். அதை நீங்க ரெண்டு பேரும்தானே அடைக்கணும்?’னு அவர் சொல்ல, அதிர்ந்தேபோயிட்டோம்ணே. அரசாங்கம் நடத்திவெச்ச கல்யாணம்ணே அது. தான் அஞ்சாயிரம் செலவு செஞ்சதா பொய் சொன்னாரு. அதைக் கேட்டதுக்கு ரெண்டு மிதி மதிச்சாரு. ஆயுளுக்கும் இந்த குவாரியிலதான் கிடக்கணும்னு அழுதுகிட்டே வேலயப்பார்க்கப் போயிட்டோம்.
கல்யாணம் ஆன புதுசுலகூட அவருக்கு ராத்திரி முழுக்க வேலகொடுப்பாங்க. காலையில ரெண்டு, மூணு மணிக்கு வந்து படுக்கறப்ப, வரிசையா லாரி வந்து நிக்க ஆரம்பிச்சுடும். கல்லு அள்ளிப்போட பத்து நிமிஷம் லேட்டாபோனாக்கூட ஆளுங்க வந்து எங்க சனங்கள அடிப்பாங்க. ராவும் பகலுமா உழைச்சோம். நமக்கு ஒரு புள்ள பொறந்து அதுவும் இங்க அடிமையா வளர வேண்டாம்னு, புள்ளையே பெத்துக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்’’ என்பவர்களுக்கு, திருமணம் முடிஞ்சு ஐந்து வருடங்கள் கழித்து அந்த விடுதலை கிடைத்திருக்கிறது.
“திடீர்னு ஒருநாள் குவாரிக்குள்ள 10, 20 ஜீப்புங்க வந்துச்சு. குவாரி ஆளுங்க, எங்க ஆட்களை அடிச்சு, ‘ஓடிப்போங்க, எங்கயாச்சும் போய் ஒளிஞ்சுக்கோங்க’ன்னு கத்துனாங்க. ஆனா, நாங்க அங்கேயே நின்னுட்டோம். அப்புறம் ஓர் அம்மா ஜீப்ல இருந்து எறங்கிவந்து எங்க எல்லாரையும் வேன்ல ஏறச் சொன்னாங்க. ‘பயப்படாதீங்க, நாங்க உங்க எல்லாரையும் பத்திரமா அவங்கவங்க ஊருக்கு அனுப்பி வைக்கத்தான் வந்துருக்கோம்’னு சொன்னதும், எங்களுக்கெல்லாம் கண்ணீரு தாரைதாரையா ஓடுச்சு. தட்டுமுட்டு சாமானையெல்லாம் எடுத்துக்கிட்டு சந்தோஷமா வண்டியில ஏறுனோம். அந்த அதிகாரிங்க எங்கள நேரா ஹோட்டலுக்கு கூட்டிப்போயி சாப்பாடு வாங்கிக் கொடுத்தாங்க. அதுக்குப் பேரு பிரியாணினு சொன்னாங்க. நாங்க அப்படியெல்லாம் ருசியான ஒரு சாப்பாட்டை குவாரியில சாப்புட்டதே இல்லேண்ணே’’ என்றபோது, மனதை என்னவோ செய்தது.

பிறகு, ஐ.ஜே.எம் டிரஸ்ட் இவர்களுக்கு அரசு மூலமாக விடுதலைப் பத்திரம் பெற்றுத் தந்து, அவரவரின் ஊருக்கு அனுப்பிவைத்திருக்கிறது. ‘`நான், என் தங்கச்சி, அம்மா, என் வீட்டுக்காரரின் அப்பா, அம்மான்னு எல்லாரும் இங்கேதான் குடியிருக்கோம். இப்போ தெனமும் ரெண்டு வேள சாப்புடுறோம், தவிக்கும்போதெல்லாம் தண்ணி குடிக்கிறோம், கையு கால நல்லா நீட்டி படுக்குறோம், சந்தோஷமா இருக்கோம்ணே” என்று விரிந்த புன்னகையுடன் சொல்லும் பச்சையம்மாள், இப்போது படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா வாங்கிக் கொடுப்பது என தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி தங்கள் பகுதிக்குச் சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். பச்சையம்மாளின் இந்த முயற்சிக்கு மும்பையிலுள்ள ‘மகாராஷ்டிரா ஸ்டேட் கமிஷன் ஃபார் உமன்’ அமைப்பு மனித உரிமைக்கான விருது வழங்கியும் அவர் கணவருக்கு எலெக்ட்ரிக் ஆட்டோ வழங்கியும் சிறப்பித்திருக்கிறது.
“குவாரியில இருக்கும்போது கூண்டுக்குள்ள அடைபட்ட பறவையாட்டம் சிக்கித் தவிச்சுக்கிட்டுக் கெடந்தோம். வெளிய வந்ததுக்கு அப்பறம் பச்சையம்மா எங்க மக்களுக்காக எவ்ளோவோ நல்லது பண்ணிக்கிட்டு இருக்கு. ரேஷன் கார்டே இல்லாத எங்க சனங்க இப்போ ஆதார் கார்டுலாம் வெச்சிருக்காங்க. எல்லாரும் பச்சையப் பாத்துப் பெருமைப்படுறாங்க. அதுகூட சேந்து நானும் டெல்லிக்கும் மும்பைக்கும் ஏரோபிளேன்ல போனேன். அங்க பச்ச மேடையில நின்னப்போ ஏகப்பட்ட சனங்க கைத்தட்டுனதப் பாத்து அழுதுட்டேன்’’ என்று அருள் பேசிக்கொண்டிருக்கும்போதே பச்சையம்மாள், “சீக்கிரமா எங்க சனங்களுக்கு அரசாங்கத்துக்கிட்ட சொல்லி இலவசக் கழிப்பறை கட்டிக் கொடுக்கணும்ணே. ஆத்தங்கரையில வெளியில போறது கஷ்டமா இருக்கு’’ என்கிறார்.
கொத்தடிமை வாழ்விலிருந்து மறுபிறவு எடுத்திருக்கும் அந்த மனுஷியின் எழுச்சியும் அக்கறையும் வளர்பிறையாகட்டும்!