
சட்டம் பெண் கையில்யாழ் ஸ்ரீதேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி
கடந்த இதழ்களில் விவாகரத்துச் சட்டங்கள் பற்றிப் பார்த்தோம். திருமணத்துக்குப் பின் வலுவான காரணங்கள் இல்லாமல் தம்பதிகள் பிரிந்துவாழும்போது, அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ வகைசெய்யும் மணவாழ்வு மீட்புரிமைச் சட்ட நடைமுறைகள் குறித்து இந்த இதழில் பார்ப்போம்.
மணவாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்
ஈகோ, சொந்தங்களின் தலையீட்டால் விஸ்வரூபமாக்கப்பட்ட குடும்பப் பிரச்னை, கோபம், வெறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் பிரிந்து வாழும் தம்பதிகள் பலர். ஒருகட்டத்தில் பிரிவு வாழ்வின் கசப்பு தாங்காமல், ‘நாம் சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்று மனைவி கணவருடனோ, கணவர் மனைவியுடனோ சேர்ந்து வாழ விரும்பினால், அவருக்குப் பக்கபலமாக நிற்கிறது மண வாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்.
இந்து திருமணச் சம்பிரதாயங்களின்படி திருமணம் செய்துகொண்ட இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 9, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச் சட்டம் 1869, பிரிவு 32, இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தால் சிறப்புத் திருமணச்சட்டம் 1954 பிரிவு 22 மற்றும் இஸ்லாமிய மத சம்பிரதாயத்தின்படி நிக்காஹ் செய்துகொண்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியத் தனிச் சட்டங்கள்... என இந்தச் சட்டங்கள் எல்லாம் பிரிந்து வாழும் தம்பதி மீண்டும் சட்டப்படி இணைய துணை நிற்கின்றன.

மனு செய்வது எப்படி?
கணவனோ, மனைவியோ வலுவான காரணமில்லாமல் பிரிந்து வாழ்கிறார்கள் என்றால், சேர்ந்து வாழ ஆசைப்படும் இருவரில் ஒருவர், மேலே குறிப்பிட்டிருக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் வசிப்பிடத்துக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். பொதுவாக, கணவனோ, மனைவியோ, ‘என் துணையை என்னோடு சேர்த்து வையுங்கள்’ என்று நீதிமன்றம் செல்கிறார் என்றால், அந்த ஒரு காரணமே இன்னொருவருக்கு அவர் மீது கரிசனத்தை ஏற்படுத்தும். ஈகோ உடையவும், அவர்கள் மீண்டும் இணையவும் வாய்ப்புகள் உண்டாகும்.
இந்தச் சட்ட நடைமுறை யாருக்கெல்லாம் பொருந்தும்?
* அங்கீகரிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டவர் களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். லிவிங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு இச்சட் டம் பொருந்தாது.
* ‘இருவரும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். ஆனால், எங்களுக்குள் எப்போதும் சண்டை; சேர்ந்து வாழ மறுக்கிறார். எங்களைச் சேர்த்து வையுங்கள்’ என்று இச்சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியாது.
* இருவரும் இரு வேறு வசிப்பிடத்தில் பிரிந்து வாழ்கின்றனர் என்பது நிரூபணமாக வேண்டும்.
* சேர்த்துவைக்க மனு செய்திருக்கும் மனுதாரர், அவரது தரப்பை மெய்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் தரப்பில் நீதிமன்றம் திருப்தி அடைந்தால் எதிர்த்தரப்பை நீதிமன்றத்துக்கு அழைக்கும்.
* எதிர்த்தரப்பு, பிரிந்து வாழ்வதற்கான நியாயமான காரணத்தை முன் வைக்கும் பட்சத்தில், அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஒருவேளை நியாயம் மனுதாரரின் தரப்பில்தான் இருக்கிறது எனில் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனத் தீர்ப்பாகும்.
* ‘தம்பதி இல்லறத்தில் இணைய வேண்டும்’ என்ற தீர்ப்பை எதிர்த்தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.
மணவாழ்வை மீட்டளிக்கும் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களும் உண்டு. அப்படி இரண்டு வழக்குகளையும், அவற்றுக்கு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதையும் பார்ப்போம்.
திரத் கௌர் - கிர்பால் சிங் வழக்கு
இந்த வழக்கை நாம் உதாரணமாக எடுத்துக்கொள்வதற்குக் காரணம்...
50 ஆண்டுகளுக்கு முன்பே, பெண் தனது சுய அடையாளத்தை இழக்கத் தயாராக இல்லை என்பதை உணர்த்தும் வழக்கு என்பதுதான். இந்தத் தம்பதி 1950-களில் திருமணம் செய்துகொண்டவர்கள்.
‘என் மனைவி, என்னைப் பிரிந்து மாமனார் வீட்டில் இருக்கிறார். அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்’ என்று மணவாழ்வு மீட்புச் சட்டத்தை நாடினார் கணவர் கிர்பால் சிங். இந்த வழக்கில் எதிர்த்தரப்பான மனைவியை அழைத்து விசாரித்ததில் உண்மைகள் வெளிவந்தன.
மனைவி திரத் கௌர், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட பணப்பற்றாக்குறை காரணமாக, திரத் டிப்ளோமா பயிற்சியை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார் அவர் கணவர் கிர்பால். ஆனால், அதற்கான கட்டணத்தை மாமனார்தான் கட்ட வேண்டும் என்றார். திரத் தன் தாய்வீட்டுக்கு வந்து, தையல் கலையில் டிப்ளோமா பெற்றார். வெளியூரில் அதிக ஊதியத்தில் தையல் ஆசிரியர் வேலை கிடைக்க, திரத் அங்கேயே சென்று தங்கினார். கணவர் கிர்பால் தனியாக வசித்தார். நேரம் கிடைக்கும்போது மனைவியுடன் வந்து தங்குவார். விடுமுறை நாள்களில் இருவரும் கிர்பாலின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று வந்தனர். கணவர் கேட்கும்போது பணம் கொடுத்துவந்த திரத், மாமனாருக்கும் மணியார்டரில் பணம் அனுப்பியுள்ளார். ஆனால், அளவுக்கு அதிகமாகக் கணவர் பணம் கேட்டுத் தொல்லை செய்தபோது, ஒரு கட்டத்தில் திரத் கொடுக்க மறுத்துள்ளார். பிரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், ‘என் மனைவி வேலைக்குச் செல்ல வேண்டாம். என் வயதான பெற்றோருக்குச் சமைத்துக் கொடுத்து அவர்களைப் பராமரித்துக்கொண்டால் போதும்’ என்ற கிர்பால், ‘என் மனைவியை என்னோடு சேர்த்து வையுங்கள்’ என்று நீதிமன்றத்துக்குச் சென்றார். ‘திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள நானும் விரும்பவில்லை. அவர் வந்து என்னுடன் வாழட்டும். விடுமுறையில் நாங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்கிறோம். அதே நேரம் என் வேலையை என்னால் ராஜினாமா செய்ய முடியாது’ என்று உறுதியாகச் சொன்னார் திரத். ‘என் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுக்கிறேன். வேலையை விட்டுவிட்டு என் மகனுடன் திரத் வாழ வேண்டும்’ என்று அவர் மாமனார் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
மணவாழ்வு மீட்புரிமை சட்டம் என்பது, கணவனும் மனைவியும் ஒருவரைவிட்டு ஒருவர் வலுவான காரணம் இல்லாமல் பிரிந்து வாழும்போது, அவர்களில் ஒருவர் தன் துணையைத் தன்னுடன் சட்டப்படி சேர்த்துவைக்கக் கோர வழிவகை செய்வது. இந்த வழக்கைப் பொறுத்தவரை இவர்கள் பிரிந்து வாழவில்லை, வேலை நிமித்தமாக ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்காமல் இருக்கிறார்கள் அவ்வளவே. அதனால், ‘மனைவியுடன் சேர்த்துவையுங்கள்’ என்ற கணவரின் கோரிக்கை இங்கு எடுபடவில்லை. எனவே, மணவாழ்வை மீட்டளிக்கக் கோரி கிர்பால் மனு செய்த இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அம்மா வீட்டிலிருந்து பணம் வாங்கி வந்து படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும் என மனைவியைக் கட்டாயப்படுத்துவது... வேலை கிடைத்து சொந்தக்காலில் மனைவி நிற்கும்போது, ‘வேலையை உதறிவிட்டு வா, என் தேவையைப் பூர்த்தி செய்’ என்று அழுத்தம் கொடுக்கும் மனநிலையில் உள்ள ஆண்களுக்கு அந்தக் காலத்திலேயே கொடுக்கப்பட்ட சாட்டையடி தீர்ப்பு இது. பெண்ணுக்கு சுயம் என்பது அவளது சம்பாத்தியம் என்பதை அன்றே புரிந்துகொண்டிருந்த திரத்துக்கு வணக்கங்கள்.
சேர்ந்து வாழ மறுத்த மனைவி
மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற தீர்ப்பைக் கணவன் பெற்றும், மனைவி சேர்ந்து வாழ மறுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை வழங்கிய தீர்ப்பைப் பார்ப்போம்.
அந்தத் தம்பதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்கள். மூன்று குழந்தைகள். இல்லறத்தில் இருந்து பிரிந்து வாழும் மனைவியைத் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கணவர் மணவாழ்வு மீட்டளிக்கும் சட்டத்தில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனு செய்தார். மனைவி பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பானது. ஆனால், கொடுமைப்படுத்தும் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பாத பாத்திமா அந்தத் தீர்ப்பினால் அதிருப்தியானார். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கில் நடந்தது இதுதான்...
மகள் பாத்திமாவுக்கு வீடு, திருநெல்வேலி ரயில் நிலையத்தில் கடை, வீட்டுக்குத் தேவையான பொருள்கள் என ஏழு லட்சங்கள்வரை செலவழித்திருந்த அவரின் தந்தை, பேரக் குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணமும் கட்டியுள்ளார். பாத்திமாவின் கணவரோ, ‘என் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகிவிட்டது, சொத்துகள் உன் பெயரில் இருப்பதால் அவற்றை அடமானம் வைக்க கையெழுத்துப் போடு’ எனக் கேட்க, அதற்கு மறுத்த பாத்திமாவை மிரட்டியுள்ளார். அச்சுறுத்தலுக்குப் பயந்து பாத்திமா பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார். இதற்கிடையில் அவர் கணவர் இன்னொரு திருமணமும் செய்துள்ளார். ‘எனவே அவருடன் சேர்ந்து வாழ முடியாது’ என்ற பாத்திமா தரப்பு நியாயத்தை நீதிபதி தீகா ராமன் ஏற்றுக்கொள்ள, ‘கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
எவ்வளவு இக்கட்டான சூழலிலும் சட்டம் பெண்ணுக்குத் துணை நிற்கும் என்பதை இதுபோன்ற தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.