மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை?

பெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை?
பிரீமியம் ஸ்டோரி
News
பெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை?

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

ண் குழந்தை வளர்ப்பில் பதின்பருவக் குழந்தைகளைக் கையாளும் பெற் றோர்கள், தங்கள் இயல்பில் வார்த்துக் கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பகிர்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

பெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை?

மகன் காதலிக்கிறானா?

``உங்கள் டீன் ஏஜ் மகன் காதலிக்கிறான் என்பது தெரியவந்தால், உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? ‘அய்யய்யோ’ என்று அதிர்ச்சியாகலாம்; ‘படிப்பில் கோட்டைவிட்டுடுவானே’ என்று அச்சம் ஏற்படலாம்;
‘படிக்கிற வயசுல பண்ற வேலையா இது?’ என்று கோபப்படலாம். ஆனால், நீங்கள் அதற்குச் சந்தோஷப்பட வேண்டும். ஏன்..?

குழந்தைக்குப் பல் முளைக்கும்போது, அது முதல் அடி எடுத்துவைக்கும்போது, முதல் வார்த்தை பேசும்போது மகிழ்கிறீர்கள் இல்லையா? அதுபோலவே, அவன் காதல்கொள்வதும் அவன் வளர்ச்சியில் முக்கிய நிலை என்பதால், நீங்கள் அதற்குச் சந்தோஷப்பட வேண்டும். ‘நம் மகனின் மூளை சரியாகச் செயல்படுகிறது. பாலின வளர்ச்சி நிலைகள் எல்லாம் சரியாகத்தான் நடக்கின்றன’ என்றே கருத வேண்டும்.

பெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை?

நீங்கள் எந்த வகை?

மகனின் காதலை அணுகு வதில் இரண்டு வகையான பெற்றோர்கள் இருக்கின்றனர். ஒன்று, தன் பிள்ளை காதலிக்க ஆரம்பித்துவிட்டதால் தன்னை விட்டுப் போய்விடுவான் என்று ஒரு பாதுகாப்பற்ற உணர்வுக்கு    (இன்செக்யூரிட்டி) ஆளாகுபவர்கள். ‘எவளோ ஒருத்தி பின்னால இவன் போயிடக் கூடாது, அவ நம்ம பையனை படிக்கவிடாம செஞ்சுடுவா, செலவு செய்ய வெச்சுடுவா’ என்று தவிப்பார்கள் இவர்கள். இது தேவையற்ற அச்சம்.

இரண்டாவது வகை பெற்றோர்கள், மகனின் காதலை அறிந்ததும் ஒரு பொறுப்பு உணர்வை (ரெஸ்பான்ஸிபிலிட்டி) உணர்வார்கள். ‘நான் பெத்த மாதிரிதானே அவளையும் கஷ்டப்பட்டு பெத்து வளர்த்திருப்பாங்க... அந்தக் குழந்தையை நம்ம பையன் கஷ்டப்படுத்திடக் கூடாது’ என்று அக்கறைப்படும் இந்த வகை பெற்றோர்களே சமூகத்தில் ஆண் பெண் உறவு சுமுகமாக இருக்க உதவுபவர்கள். ஆண் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும்  இப்படிச் சரியான முறையில் பிள்ளைகளை வளர்த்தெடுத்தால்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும்; நல்ல மாற்றங்கள் நிகழும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

உங்கள் மகன் காதலித்தால், அதை நேர்மறையாக அணுகுங்கள். கோபப்படாமல், அந்தப் பெண்ணிடம் அறிமுகத்தையும் நட்பையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அன்பைப் பரிமாறுங்கள். ஏதாவது பிரச்னை என்றால், உங்களிடம் பகிர்ந்துகொள்ளச் சொல்லுங்கள். இதனால் அவளும் பாதுகாப்பாக இருப்பாள்; உங்கள் மகனும் பாதுகாப்பாக இருப்பான்; நீங்களும் நிம்மதியாக இருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே நீங்கள், உங்கள் மகனின் காதலுக்கு விரோதமாக நடந்துகொண்டால், அவன் உங்களிடம் இருந்து விலகிச் செல்வான். ஏதாவது பிரச்னை என்றாலும் சொல்ல மாட்டான். அவனைப் பற்றிய எந்த விஷயமும் தெரியாமல், உங்களால் எப்படி அவனைப் பாதுகாக்க முடியும்; எப்படி அவனை வழிநடத்த முடியும்? எனவே, காதல் என்பதைப் பிரச்னையாக்கி உங்கள் மகனை உங்களிடமிருந்து நீங்களே தள்ளிவைக்கும் செயலைச் செய்யாதீர்கள். ‘ஓகே... ஓகே! ஆனா, நீயும் அந்தப் பொண்ணும் உங்க படிப்பும் பத்திரம்’ என்று அறிவுறுத்தும் ஃப்ரெண்ட்லி பெற்றோராக இருங்கள்.

பிரேக்-அப் பொறுப்புகள்

பிரேக்-அப் ஆகும்போது, உங்கள் மகனைக் கையாளும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. தன் காதல் கைகூடாமல் போகும்போது ஓர் ஆண், ‘அவள் எப்படி என்னை விட்டுச் செல்லலாம்?’ என்று ஓர் ஆதிக்க மனநிலையில் யோசிக்கலாம். இதை உடனே வேரறுத்து, பெண்ணின் முடிவுக்கு மரியாதை தர வேண்டியதை நீங்கள், உங்கள் மகனுக்கு உணர்த்த வேண்டும்.

ஒரு தோல்வியில் வாழ்க்கை முடிந்து விட்டது என்ற எண்ணம் உங்கள் குழந்தையை அண்டாமல் இருக்க, ‘நீ பெஸ்ட். உனக்கு இதைவிட பெட்டர் சாய்ஸ் காத்திட்டு இருக்கு. அதே நேரம், அந்தப் பெண்ணின் முடிவுக்கும் மதிப்பு கொடு. அவளுக்கும் நல்லதெல்லாம் கிடைக்கட்டும். அப்படி நினைக்கிறதுதான் உண்மையான அன்பு’ என்று சொல்லுங்கள்.

காதல் மட்டுமல்ல... வேலை, வீடு, குடும்பப் பொறுப்புகள் என்று வாழ்க்கை, ஆணுக்கு இன்னும் பல தேர்வுகளை வைத்திருக்கும். அவற்றில் வெற்றியும் வரும்; தோல்வியும் வரும். வெற்றி வந்தால் அதீத கொண்டாட்டமும் வேண்டாம்; தோல்வி வந்தால் துவளவும் வேண்டாம். இரண்டையும் சாதாரணமாகக் கடக்க வேண்டும். எமோஷனல் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து மீள வேண்டும். ஆறுவது சினம் மாதிரி... ஆறுவது காதல், ஆறுவது காமம், ஆறுவது சபலம், ஆறுவது தோல்வி என்று புரியவைத்து, ‘சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும்’ என்று அரவணைக்க வேண்டும். திரும்பத் திரும்ப ஆண் குழந்தைகளை இதை உணரச் செய்தால் தான் அவர்களைச் சரியான ட்ராக்கில் கொண்டுவர முடியும்.

அப்பாக்கள் பேச வேண்டும்!

பதின்பருவ ஆண் குழந்தைகளுக்குரிய மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், தங்களைப் பற்றிய சுயமதிப்பீடு. ‘நான் தேறுவேனா, தேறமாட்டேனா; நான் அழகாக இருக்கிறேனா, ஆண்மையோடு இருக்கிறேனா, என் ஆண்மை சரியாகத்தான் இயங்குகிறதா...’ என்பது போன்ற  கேள்விகள் அவர்களுக்கு ஏற்படும். நிறைய அப்பாக்கள் ஆண் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை. அப்படியே பேசினால்கூட அந்த உரையாடல் படிப்பைப் பற்றியதாகவே உள்ளது. ‘நீ என்ன ஃபீல் பண்ற, இந்த வயதில் இதெல்லாம் நீ கடந்து வருவாய், அந்த அங்கிள் வாழ்க்கையில் இப்படி நடந்தது, என் ஃப்ரெண்டு  வாழ்க்கையில் இப்படி நடந்தது’ என்பது போன்ற உரையாடல்கள் அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் இடையில் பொதுவாக இல்லை.

வயதுக்கு வருவது பற்றி ஒரு பெண் குழந்தைக்கு அம்மா சாதாரணமாகச் சொல்லித்தர முடியும். ஆனால், ஆண் குழந்தைக்குச் சொல்லித்தந்தால்  `என்ன அம்மா நம்மகிட்ட இதெல்லாம் பேசுறாங்க’ என்று வெட்கப்படுவார்கள். ஆண் குழந்தைகள் ஆயிரம் மனத்தடைகளை வைத்திருப்பார்கள். அவற்றை உடைத்து இவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அப்பாக்களின் பொறுப்பு. ஆண்களின் உடல் சிக்கல்கள் பற்றியோ, தன் வாழ்க்கைப் பாடங்கள் குறித்தோ மகன்களிடம் பகிர்ந்துகொள்வது இல்லை. இதனாலேயே ஆண் பிள்ளைகள் கேட்பாரற்று வளர்க்கப்படும் நிலையில் உள்ளனர்.

குழந்தைகளோடு எப்போதும் தொடர்பில் இருப்பதுதான், மேலே சொன்னவற்றையெல்லாம் செய்வதற்கான வழி. அவன் முகத்தில் காணும் மாற்றங்களை வைத்தே அவனது வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பெற்றோர்கள் அறிய வேண்டும். இவ்வளவு முயற்சிகளை ஆண் குழந்தை வளர்ப்பில் பெற்றோர் முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான், எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் அதையும் தாண்டி ஆண் குழந்தைகள் பிழைப்பதற்குத் தயாராக இருப்பார்கள்.’’