
#நானும்தான் - குறுந்தொடர் - 3
ஜன்னல் வழி நிலவு மட்டும்தான் துணை என நினைத்தாள் நித்யா. உண்மையில் தனக்கு யாருமே இல்லையா என ஓர் உடனடி கவலை அவளை வெறுமையில் ஆழ்த்தியது.
அந்தச் சின்னஞ்சிறு கிளினிக்கில் இன்னும் இரண்டு பேஷன்ட்டுகள்தான் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தனர். கைக்குழந்தையோடு இருந்த பெண்ணிடம் ‘அடுத்து நீதான்’ என்பதை ஜாடையில் மட்டும் சொன்னாள். அந்தப் பெண் சிரித்தாள். நித்யா அந்தக் குழந்தையின் கன்னத்தருகே காற்றைக் கிள்ளி முத்தமிட்டு, ‘‘போலியோ ட்ராப்ஸ் குடுத்தாச்சா?’’ என்றாள். அதற்குள் பேஷன்ட் வெளியே வர, அந்தப் பெண் தலையாட்டியபடியே உள்ளே போனாள். இப்போது இன்றைய கடைசி நோயாளி மட்டுமிருந்தார். அறுபது வயது மதிப்பு. ‘‘இதுக்கப்புறம் வீட்டுக்குப் போய் சமைக்கணுமா?’’ என்றார். விளக்கம் கொடுக்க வேண்டாம் என நினைத்தாளா, சோர்வா எனக் கோடு கிழித்து அறிய முடியவில்லை. இத்தகைய தருணங்களில் நித்யாவிடம் பொதுவாக ஒரு பதில்தான்... சிரிப்பு.
நகரத்துக்குச் சற்றே தள்ளியிருந்த அந்த கிளினிக்கில் ஒவ்வொரு நாள் மாலையும் எட்டு பேர் சராசரி நோயாளிகள். கிளினிக்கை ஐந்து மணிக்கெல்லாம் வந்து திறந்துவைப்பது, வருகிறவர்களுக்கு வரிசைப்படி சிகரெட் அட்டை டோக்கன்களை வழங்குவது, மருந்து வழங்குவது, டாக்டர் போனதும் கிளினிக்கைப் பூட்டிக்கொண்டுக் கிளம்புவது என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள்.
இப்போது சமையல் பற்றி விசாரித்த பெரியவரும் போய்விட்டார். டாக்டர் மட்டும்தான். உள்ளே போய், டாக்டர் குடித்துவைத்த காப்பி கோப்பையைக் கழுவி, ஃப்ளாஸ்க்கில் இருந்த மீதி காபியை ஊற்றி அவருக்குத் தந்தாள்.

‘‘உட்காரும்மா. பொண்ணு எப்படியிருக்கு?’’
‘‘சக்கர வண்டி வாங்கிக் குடுத்தப்புறம் பரவால்ல சார்... அவளே முடிஞ்ச வரைக்கும் பாத்துக்குறா.’’
டாக்டர் ஏதோ பேச விரும்பி சற்றே அவளை நோக்கி அக்கறையுடன் பார்த்தார். நித்யா கைகட்டி உட்கார்ந்து கேட்கட்டும் எனக் காத்திருந்தாள்.
‘‘உன் ஹஸ்பண்ட் இப்ப எங்க இருக்கான்... கடைசியா எப்ப பார்த்தே?’’
அவரிடம் அரைகுறையாகச் சில உண்மைகளை மட்டும் சொல்லியிருந்தாள். `புருஷன் விட்டுட்டு ஓடிட்டான். இளம் பிள்ளைவாதத்தால் கால் சூம்பிப் போன குழந்தையை வெச்சுக்கிட்டு கஷ்டப்படுறேன் டாக்டர்... எனக்கு ஒரு வேலை குடித்தீங்கன்னா பொழைச்சுக்குவேன்’ என்பதை மட்டும் சொல்லியிருந்தாள்.
‘‘திருச்சில.’’
‘‘திருச்சியிலயா?’’
‘‘அஞ்சு வருஷத்துக்கு முன்ன. அப்ப கூடத்தான் இருந்தான். குழந்தைக்கு மொட்டையடிக்கறதுக்காக திருச்செந்தூர் கூட்டிக்கிட்டுப் போனான். திடீர்னு ஆளக் காணோம். பீடி பிடிக்கப் போயிருக்கும்னுதான் நினைச்சேன். காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் உக்காந்திருந்தேன். ஒரு டீயும் பன்னும்தான் சாப்பாடு. இருட்டிப்போச்சு. குழந்தையைத் தூக்கிட்டுப்போயி கடல்ல குளிப்பாட்டிக் கூட்டிக்கிட்டு வந்தேன். அவன் வரவே இல்ல.’’
‘‘அப்பப் போனவன்தானா?’’
‘‘மூணு நாளு அங்கேயே கோயில் ஓரத்தில் படுத்துக்கிடந்தேன். குழந்தைய மடியில வெச்சுக்கிட்டு அழுதேன். சில பேர் பிச்சைக்காரின்னு காசு போட்டாங்க. சில பிச்சைக்காரங்க, `இது எங்க இடம் எழுந்து போடீ'ன்னாங்க... வந்துட மாட்டானான்னு ரொம்ப காத்துட்டு இருந்தேன். செத்து போலாம்னு குழந்தையைத் தூக்கிட்டு கடல்ல இறங்கினேன். கொஞ்சதூரம் தண்ணிக்குள்ள நடந்தேன். கடல் தண்ணியும் கண்ணீருமா உப்பு உரைக்குது. மடியில் இருந்த குழந்தை மட்டும் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருந்துச்சு. அப்படியே தண்ணியில முங்கினேன்... குழந்தை அம்மா அம்மான்னு அலறுது. நான் தண்ணிக்குள்ள தம் கட்டிக்கிட்டு இருந்தேன். அப்ப ஓர் அலை அடிச்சுது. கையில இருந்த குழந்தை நழுவி கரைக்குப் போயிடுச்சு. நான் மட்டும் கடலுக்குள்ள அடுச்சுக்கிட்டு போனேன். அப்பத்தான் பயந்துட்டேன். குழந்தையை விட்டுட்டு செத்துடக் கூடாதுன்னு எப்படியோ அலையில இருந்து தப்பிச்சுக் கரைக்கு வந்தேன்.’’
டாக்டர் அதிர்ச்சியோடும் சோகத்தோடும் கவனிக்க ஆரம்பித்தார்.
‘‘ஒரு பொண்ணு அநாதையா அழுதுகிட்டு இருந்தா பார்க்கிற ஆம்பளைங்களுக்குப் பரிதாபம்தான் வரும்னு தப்பா நினைச்சுட்டேன். வேற எண்ணம்தான் அதிகமா வருது. ஓர் ஆள் வந்தான். `ஏம்மா அழுற... சாப்பிட்டியா'னு அக்கறையா விசாரிச்சான். ரோட்டுக் கடையில இட்லி வாங்கித் தந்தான். அங்கே யார்கிட்டயோ பேசினான். போனவன் கொஞ்ச நேரம் பொறுத்து வந்தான். மறுபடியும் ஏதோ என்னைப் பார்த்து ரகசியமா பேசுனாங்க. எதுவும் தப்பா இருந்துடக் கூடாதுன்னு திருச்செந்தூர் முருகன் கோபுரத்தைப் பார்த்து வேண்டிக்கிட்டேன். இட்லி வாங்கித் தந்தவன் இளிச்சிக்கிட்டே கிட்டவந்து குழந்தையை வாங்கிக்கிட்டான். ‘நான் பாத்துக்குறேன். நீ இவன்கூட போ’ன்னான். எனக்குப் புரிஞ்சுக்கிச்சு. குழந்தைய பிடுங்கிட்டு ஓட்டமா ஓடினேன். பஸ் ஸ்டாண்டுல ஏதோ ஒரு பஸ்ல ஏறி உக்காந்துட்டேன். கையில காசு இல்ல. பஸ் கண்டக்டர் வந்து டிக்கெட் கேக்கறாரு. ‘இந்த பஸ்ஸு எங்கே போவுதுன்னு கேட்டேன். மெட்ராஸுன்னு சொன்னார். காதுல இருந்த கம்மலைக் கழற்றி... `இத வெச்சுக்கிட்டு யாராவது எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொடுங்க'னு சொன்னேன். அழுதேன். கண்டக்டர் இறங்கிப் போம்மான்னு கத்தறாரு. அப்பத்தான் ஒரு பெரியவர் எனக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து, இங்கே கூட்டியாந்தாரு.’’
‘‘உன் புருஷன்?''
‘‘பஸ் திருச்சி வந்தப்ப அவனைப் பார்த்தேன். பஸ் ஸ்டாண்ட்டுல நல்ல கூட்டம். அந்தப் பெரியவர் எனக்கும் என் பொண்ணுக்கும் டீ வாங்கித் தந்தார். அப்ப, ரோட்ல போலீஸ் அவனை அடிச்சு இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஏதோ பொம்பளைச் செயினை அறுத்துட்டான்னு தெரிஞ்சுது.’’
‘‘பச்’’ என்றார் டாக்டர்.
‘‘நீங்க எதுக்கு டாக்டர் பீல் பண்றீங்க... என் விதி.’’
‘‘பொண்ணுக்கு இப்ப என்ன வயசு?’’
‘‘பதினாறு ஆவுது. பாவி ரெண்டு சொட்டு போலியோ ட்ராப் விட்டிருந்தா அவளுக்கு இந்த நிலைமை இல்ல. தெரியாமப் போச்சு. அவளை விட்டுட்டு சாகவும் மனசில்ல. சாகடிக்கவும் மனசில்ல.’’
‘‘கடவுள் இருக்கார்மா...’’
‘‘தெர்ல டாக்டர். அவ இருக்கிற வரைக்கும் நான் இருப்பேன். இல்லன்னா, நான் இருக்கிற வரைக்கும் அவ இருப்பா.’’
டாக்டர் மெல்ல எழுந்தார். நித்யா அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பின்புறமாக வந்து நின்றார். நித்யாவின் தோளின் இருபுறத்தும் தன் இரண்டு கைகளை வைத்து அழுத்தினார். அவள் சுதாரித்து எழுந்துவிடாதபடியான அழுத்தம்.
‘‘நான் இருக்கிறேன் நித்யா’’ என்றார்.
- அதிர்ச்சி தொடரும்
- தமிழ்மகன், ஓவியம் : ஸ்யாம்