Published:Updated:

#நானும்தான் - குறுந்தொடர் - 5

#நானும்தான் - குறுந்தொடர் - 5
பிரீமியம் ஸ்டோரி
News
#நானும்தான் - குறுந்தொடர் - 5

#நானும்தான் - குறுந்தொடர் - 5

ஷைலஜா லிஃப்டில் ஏறி, நான்காவது மாடிக்கான பட்டனை அழுத்த இருந்த நேரத்தில் ‘வெயிட்’ என வந்தான் தருண். அவளுடைய டீம் லீடர். சைலஜா புன்னகைத்து, அவனுடைய வருகைக்காக வழிவிட்டுக் காத்திருந்தாள். 13 பேர் செல்லலாம் எனப் பொறிக்கப்பட்ட அகலமான லிஃப்ட். ‘‘இதைக்கொஞ்சம் பிடி’’ - தருண்குமார் அவன் கையில் இருந்த ஃபோல்டரைக் கொடுத்தபோது படக்கூடாத இடத்தில் பட்டான். விஸ்தாரமாக இடமிருந்தும் நான்கு மாடி தூரத்துக்குள் அவன் இரண்டுமுறை சர்வ இயல்பாகத் தோள்மீது சாய்ந்தான்.

லண்டன் புராஜெக்டுக்கு இன்ஜினீயர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு அவனுக்கு வழங்கப் பட்டிருந்தது. அவனுடைய கோரைப் பற்கள் வெளியே தெரிய ஆரம்பித்தது அதன் பின்புதான்.

எட்டு சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களைத் தேர்வு செய்ய வேண்டும். சைலஜாவுக்கு எட்டில் ஒருவராகத் தேர்வாக எல்லா அடிப்படைகளும் இருந்தன. ஆனால், கிடப்பில் வைத்திருந்தான். ‘‘சி.இ.ஓ-வுக்கு லிஸ்ட் அனுப்பிட்டேன்’’ என்று மட்டும் சொன்னான். அதில் அவள் இருக்கிறாளா என்பதைச் சொல்ல வில்லை. இரண்டு முறை போய் கேட்டு விட்டாள். உற்றுப் பார்த்துவிட்டு, அப்படியே வேறு பேச்சுக்குத் திரும்பி விட்டான்.

ரேகா, ‘‘அவன் நினைச்சா செலெக்ட் பண்ணி அனுப்ப முடியும். சி.இ.ஓ சைன் பண்ணுவார். அவ்வளவுதான். சான்ஸை விட்டுடாதே’’ என்றாள்.

#நானும்தான் - குறுந்தொடர் - 5

சான்ஸை விடாமல் இருக்க ஆபீஸில் சொல்கிற உத்திகள் ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. சைலஜாவைவிட்டுவிட்டு ரேகாவைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுதான் காரணம் என்றார்கள். தருண் பணக்காரன். கச்சிதமான இளைஞன். முப்பது வயதின் தொடத்தி லேயே டீம் ஹெட்டாக வந்தான். நல்ல சம்பளம்தான் என்றாலும், அதைவிட நல்ல சம்பளம் வாங்குகிறவர்களையும்விட உயர் கார் வைத்திருந்தான். பி.எம்.டபிள்யூ. 40 லட்ச ரூபாய்க்கு மேல். பவர் ஹவுஸ் பக்கத்தில் நீச்சல் குளம் உள்ள ஆடம்பர அப்பார்ட்மென்ட்டில் இருப்பதாக ரேகாதான் சொன்னாள். மேலும் சில தகவல்கள் சொன்னாள். அது பிரமிக்க வைப்பதற்குப் பதில் பயமுறுத்தியது. அப்பார்ட்மென்ட்டை அவள் அவ்வளவு புகழ்ந்தாள். உலகப் புகழ்பெற்ற மதுபானங்களையே அவன் அருந்துவான் என்றும் சொன்னாள். ஒவ்வொரு பாட்டிலின் விலையும் பத்தாயிரத்துக்கு மேல் என்பது சைலஜாவுக்குத் தேவையான தகவலாக இல்லை.

‘‘நீ மட்டும்தான் என் அப்பார்ட் மென்ட்டுக்கு வரலை.’’

சைலஜா யோசிப்பது அவனுக்குத் தெரிந்துவிட்டதோ?

‘‘வர்றேன் சார். அடுத்த முறை ரேகா வரும்போது வர்றேன்.’’

‘‘ரேகா வரும்போது நீ எதுக்கு?’’ என்றான். லிஃப்ட் நான்காவது மாடிக்கு வந்துவிட்டது. இனிமேல் புரிந்துகொள்வதற்கு எந்த அகராதியும் தேவையில்லை.

அவனிடம் ஃபோல்டரைக் கொடுத்து, அவனுக்கு வழிவிட்டு, வெளியே வந்தாள். அவனுடைய கேபினைக் கடந்து தன் இருக்கையில் அமர்ந்தாள். அவனுடைய ஒரு வார பெட்ரோல் செலவு, அவளுடைய சம்பளம். லண்டன் வாய்ப்பு பெரிய விஷயம். கனவு. கடன்கள், கல்யாண செலவு, வாழ்க்கைத் தரம் எல்லாவற்றுக்கும் பயன்படும்.

சிஸ்டத்தை உயிரூட்டியபோது, தேம்ஸ் நதி படம்தான் டெஸ்க்டாப்பாக இருந்தது. எப்படியும் லண்டன் வாய்ப்பு கிடைத்துவிடும் என நம்பியிருந்தாள். எட்டு பேர் பட்டியலில் முதல் ஆறு பேருக்கு மெரிட் மதிப்பெண் இருந்தன. அடுத்த இரண்டு பேரில் ரேகாவும் சைலஜாவும். கொஞ்சம் ஒப்பேற்றி அனுப்ப வேண்டிய லிஸ்ட். அதுவும் இல்லாமல் பெண்கள்.

தருண் டீம் லீடராக உயர்ந்தபோது, சைலஜா கைகொடுத்து வாழ்த்தினாள். கைகுலுக்கி முடிந்த பின்பும் அவன் கையை விடாமல் பிடித்திருந்தான். விருட்டென்று இழுத்துக்கொள்ள முடியவில்லை. அவனாகப் பிடியைத் தளர்த்துகிற வரை நாகரிகம் கருதி பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. அவன் ஏதோ பேச்சு சுவாரஸ்யத்தில் கையை விடுவதற்கு மறந்துவிட்டவன் போல இருந்தான். அந்தப் பாராட்டு விழாவில் இன்னும் பலரும் இருந்தனர். அத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களோ என மிரண்டு எல்லோரையும் பார்த்தாள். ஏனோ எல்லோருமே தருணைத்தான் பார்த்தார்கள். அவன் கையைப் பார்க்கவில்லை.

தருண் மெல்ல அவனுடைய ஆள்காட்டி விரல் நகத்தால் உள்ளங்கையில் சுரண்டுவது தெரிந்தது. சைலஜா திகைத்துப் போய் தருண் முகத்தைப் பார்த்தாள். அவன் எல்லோருக்கும் புன்னகைத்ததுபோல அவளைப் பார்த்தும் புன்னகைத்தான். வலுக்கட்டாயமாகத்தான் கையை மீட்க வேண்டியிருந்தது. இப்போது அப்பார்ட்மென்ட்டுக்கு ஏன் வரவேயில்லை என்கிறான்.

ஷிப்ட் முடிந்து கிளம்பும்போது, எப்படித்தான் மூக்கில் வியர்த்ததோ? ‘‘ஹாய் கிளம்பிட்டியா?’’ - தருண் வேகமாக வந்து சேர்ந்தான். இவள் கிளம்புவதற்காகவே அவன் தருணம் பார்த்துக்கொண்டிருந்ததை உணர முடிந்தது.
‘‘கார்ல ட்ராப் பண்ணவா?’’

‘‘பரவால்ல சார்!’’

இப்போதும் லிஃப்டுக்காக வேறு யாரும் காத்திருக்கவில்லை. யாராவது வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தாள். லிஃப்ட் கீழே இருந்தது. மேலே வந்துகொண்டிருந்தது. ‘‘லண்டன் போகிற ஆசையில்லையா?’’ என்றான்.

‘‘ட்ரீம் சார்!’’

லிஃப்ட் கதவு திறந்தது. இருவரும் உள்ளே சென்றனர்.

கிரவுண்ட் ஃப்ளோரில் கதவு திறந்தபோது சைலஜா கண்களைத் துடைத்தபடி வெளியேறியதை எந்த சர்வைலன்ஸ் கேமராவும் அறியவில்லை.

- அதிர்ச்சி தொடரும்

- தமிழ்மகன்,  ஓவியம் : ஸ்யாம்