கழுதைப்பால் குளியல் சோப்பின் விலை இந்தியாவையே அதிர வைத்துள்ளது. 100 கிராம் கழுதைப்பால் குளியல் சோப்பின் விலை ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இயற்கை பொருள்கள் கண்காட்சி தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார். டெல்லியைச் சேர்ந்த 'ஆர்கானிகோ' என்ற நிறுவனம் தயாரித்துள்ள கழுதைப் பால் குளியல் சோப் இந்த கண்காட்சியில் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வமுடன் இந்த நிறுவனம் கழுதைப் பாலில் தயாரித்த குளியல் சோப்பை வாங்கிச் சென்றனர்.
ஆர்கானிகோ நிறுவனத்தின் தலைவர் பூஜா கவுல் கூறுகையில், '' கழுதைப்பால் மருத்து குணம் நிறைந்தது. இதனால், விலையும் அதிகம். ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.2000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கழுதைப்பாலில் தயாரிக்கப்படும் குளியல் சோப் பாக்டீரியாக்களில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. தோல் சுருங்குதல், வயது முதிர்வான தோற்றம் தருவதைத் தடுக்கிறது. தென்மாநில மக்கள் கழுதைப்பாலின் மகத்துவத்தை அறிந்து வைத்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் எங்கள் தயாரிப்புக்கு அமோக வரவேற்பு இருக்கிறது '' என்கிறார்.
ஆர்கானிகோ நிறுவனம் 2018- ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கழுதைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் 25 குடும்பத்தினர் இந்த நிறுவனத்துடன் கைகோத்துள்ளனர். காஷியாபாத்தில் கழுதைப் பாலை சோப்பு தயாரிக்கப்படும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் கழுதைப்பால் பிஸ்கட் கூட வெளிவரலாம்... இனிமேல் யாரையும் 'கழுதை' என்று திட்டாதீர்கள்!