Published:Updated:

அவள் 16

விக்ரம்,சூர்யா, சிம்பு, தனுஷ்... ரெடியா ? !மோ.அருண் ரூப பிரசாந்த் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

##~##

அழகு... உங்கள் பக்கம் கவனத்தை ஈர்க்கும். திறமை... அந்த கவனத்தை தக்கவைத்துக் கொள்ளும். இந்த இரண்டும் சேர்ந்து வாய்க்கப் பெற்றால்... அது உங்கள் தலையில் வெற்றி மகுடமாக தகதகவென ஜொலிக்கும். அதுதான் நடந்திருக்கிறது ரொஷேல் மரிய ராவுக்கு!

ஃபெமினா, மிஸ்.இந்தியா இன்டர்நேஷனல் பட்  டம் வென்றிருக்கும் சென்னைப் பெண், ரொஷேல். எஸ்.எஸ். மியூஸிக் சேனல் 'வீ.ஜே’ வான பலோமாவின் தங்கை, யூ.எஃப்.எக்ஸ் மியூஸிக் சேனலின் 'வீ.ஜே’ என்பதெல்லாம் ரொஷேலின் நேற்றைய அடையாளங்கள். இன்று... கேமரா ஃப்ளாஷ் ஒளிவெள்ளம் பாய்ச்ச, கண்ணிமைக்கவும் நேரமில்லாமல் றெக்கை கட்டி பறக்கிறது இந்தப் பட்டாம்பூச்சி!

''அம்மாவுக்குத்தான் முதல் தேங்க்ஸ். மாடலிங் துறையில நுழைஞ்சதிலிருந்து இன்னிக்கு வரை, என்னைப் பத்தின அத்தனை செய்தி, போட்டோனு ஃபைல் செய்து, என் கனவுகள அவர் நனவாக்கி, எனக்காக அவர் செய்தது நிறைய!''

- அம்மா சென்டிமென்ட்டோடு அட்டகாசமாக ஆரம்பித்தது இந்த அழகுப் பெண்ணின் பேட்டி.

''ஏதோ முதல் நாள் கலந்துகொண்டு, மறுநாள் கிடைச்சுடல இந்தப் பட்டம். எம்.ஓ.பி. காலேஜ்ல படிக்கும்போதே மாடலிங் அறிமுகம். அதன் பிறகு, பல மேடை நிகழ்ச்சிகளில் காம்பயரா, சேனல்ல 'வீ.ஜே’வா படிப்படியாத்தான் இங்க வந்திருக்கேன். இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமிருக்கு. ரேம்ப் வாக், 'வீ.ஜே’, இப்போ இந்த அழகிப் போட்டினு எல்லாமே என் ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் சொன்னதுக்காக கலந்துகிட்டதுதான். ஆனா... மிஸ்.சௌத் இந்தியா அழகிப் போட்டிக்கு செலக்ட் ஆனதுமே, நான் வேற மாதிரி என்னை உணர்ந்தேன். அதுல ஜெயிச்ச பிறகு... வெற்றியோ, தோல்வியோ மிஸ்.இந்தியா போட்டியையும் ஒரு கை பார்த்துடணும்னு நினைச்சேன். இதோ... நான் நெனச்ச மாதிரியே நல்லது மட்டுமே என் வாழ்க்கையில் நடந்துக்கிட்டு இருக்கு!''

அவள் 16

சரி, இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் சர்வதேச அழகிப் போட்டிக்கு எப்படித் தயாராகுது இந்தப் பொண்ணு?!

''ஓவர் டயட்டிங் மேல எனக்கு எப்பவுமே நம்பிக்கையில்ல. இந்தியன் ஃபிளேவரில் காரசாரமா சமைக்கப்படும் சைனீஸ் உணவுகளுக்கு நான் அடிமை. ஆனா, இப்போதைக்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளுக்கு மட்டும் தடா. உலகமெங்கும் பிரபலமாகி வர்ற பீட்ரூட் - கேரட் மிக்ஸான 'ரெட் ஜூஸ்’தான் என் எனர்ஜி டானிக். தினமும் ரெண்டு மணி நேரம் உடற்பயிற்சி, அளவான சாப்பாடு, ஆழமான தூக்கம்... ஆல் இஸ் வெல்!'' என நெஞ்சில் கை வைக்கும் ரொஷேலுக்கு, இந்த அழகிப் பட்டம் நிரந்தரமானது அல்ல என்கிற தெளிவு நிறைய!

''யெஸ், இந்த அழகிப் பட்டம் இன்னும் ஒரு வருஷத்துக்குத்தான். ஆனா... கன்னம் ஒடுங்கி, தோல் சுருங்கி போன பின்னும் நான் என் மனதளவில் அழகாகவே உணர்வேன். உங்களுக்கு உள்ளே இருந்து ஒரு ஸ்பார்க் வரும்... அதுதான் உண்மையான அழகு. ஏழை குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்குவதில்தான் நான் கவனம் செலுத்தப் போகிறேன். 'என்னடா, எல்லாரும் பேசுற அதே அரதப்பழசான டயலாக்தானே’னு நீங்க நினைக்கலாம். உண்மையில் மீடியாவுக்கு வர்றதுக்கு முன்ன பெங்களூருவில் ஒரு தொண்டு நிறுவனத்தில்தான் நான் வேலை செஞ்சேன். ஆனா, அங்கேயிருந்து உடல் உழைப்பைத் தருவதைவிட, மீடியா புகழ் மூலம் பணம் சம்பாதிச்சு அதை அந்த குழந்தைகளுக்குச் செலவு செய்யணும்னு ஒரு ஆசை'' எனும் போது, இன்னும் அழகாகிறார் ரொஷேல்.

அவள் 16

ஸ்விம்சூட்டில் இருந்து, பாரம்பரியப் புடவை வரை எத்தனையோ விதமான ஆடைகள் அணிந்து ரேம்ப் வாக்கில் நடந்திருந்தாலும், ரொஷேலுக்கு பிடித்தது என்னமோ ஷார்ட் டிரஸ்ஸெஸ்தான்.

''என் கால்கள் ரொம்பவே அழகு. அதை எல்லாரும் ரசிப்பது எனக்குப் பிடிக்கும்'' என்று மெட்ரோ பெண்ணுக்கான அத்தனை அம்சங்களோடும் இருந்தது அவரின் பேச்சு.

''மீடியாத் துறையில், ஒரு தடவை போட்ட டிரெஸ்ஸை... இன்னொரு தடவை கேமரா முன் உபயோகிக்க முடியாது. அதனால வருஷம் முழுக்க டிரெஸ் வாங்கிட்டேதான் இருக்கணும். ஸோ, நானும் அக்காவும் பாங்காக், மலேஷியானு போய் மொத்தமா ஷாப்பிங் முடிச்சுடுவோம். இங்கே ஷாப்பிங் செய்யும் செலவைவிட அங்கே ரொம்ப கம்மி. டிசைனும், தரமும் உலகத் தரத்தில் இருக்கும்'' என்கிறார் கண்கள் விரித்து.

''அழகிப் பட்டம் வாங்கியாச்சு, அடுத்து சினிமாதானே?''

''நிச்சயமா! சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் எல்லார்கூடவும் டூயட் பாட ரொஷேல் ரெடி. பாலே டான்ஸ் தெரியும். சினிமா டான்ஸும் கத்துக்கப் போறேன். கிடைக்கற பந்து எல்லாத்தையுமே சிக்ஸர் அடிக்க தயாராவே இருக்கேன். வேறென்ன... மிஸ். இன்டர்நேஷனல் பட்டம் வாங்கினதுக்கு அப்புறம் இன்னும் நிறைய பேசலாம். தேங்க் யூ!''

- ரொஷேலின் கண்களில் கோடி மலர்களின் அணிவகுப்பு !