Published:Updated:

அனாகா...சொல்லி அடிக்கும் ஸ்குவாஷ் கில்லி !

பூ.கொ.சரவணன் படங்கள்: ப.சரவணகுமார்

##~##

அனாகா அலங்கமோனி... ஸ்குவாஷில் தமிழகத்தின் பெயர் சொல்ல இன்னுமொரு புயலாக வந்திருக்கும் 18 வயது தாரகை. உலக அளவில் ஜூனியர் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னைப் பெண். வாழ்த்துக்களோடு வீட்டில் சந்தித்தபோது, படபடவெனப் பேச ஆரம்பித்தார்.

''எனக்கு முதலில் அறிமுகம் ஆனது... டென்னிஸ். நான் டி.வி. பார்க்கிற நேரத்தைக் குறைக்க, ஆறு வயசுலேயே டென்னிஸ் மட்டையைக் கொடுத்து விளையாட வெச்சாங்க வீட்டுல. பிறகு, வெயில்ல விளையாடறதுக்காக என் பாட்டி ஸ்வர்ணம்மாள் வருத்தப்பட, ஸ்குவாஷ் ஆடுகளத்துக்கு மாத்திட்டாங்க.

ஸ்குவாஷ் ஆட்டத்தின் வரலாறே சுவாரஸ்யமானது. போர்க்கள வீரர்கள் தங்களோட பொழுதுபோக்குக்காகவும், புத்துணர்வுக்காகவும் மூன்று சுவர்களை எழுப்பி, அந்த மிகச்சிறிய இடத்துல ஆட ஆரம்பிச்ச ஆட்டம்தான் இது. இந்த ஆட்டத்தில் எதிராளி பிற ஆட்டங்களைப் போல எதிர்ல இருக்க மாட்டார். நமக்கு பக்கவாட்டில் இருப்பார். ஆட்டம் ஆரம்பிக்கும்போது ஸ்குவாஷ் பந்து ரொம்பவே மென்மையா இருக்கும். முழுக்க கண்ணாடியால கட்டமைக்கப்பட்ட ஸ்குவாஷ் ஆடுகளத்துல பந்து மீண்டும் மீண்டும் பட்டு எழும்பும்போது சூடாகி வேகமா எழும்ப ஆரம்பிக்கும். நான் டென்னிஸில் இருந்து இதற்கு மாறியதும், ரொம்பவே கஷ்டப்பட்ட ஒரு விஷயம்... 'சர்வ்'தான். டென்னிஸில் வேகமான சர்வ் போடலாம். ஆனா, இந்த ஆட்டத்துல நுணுக்கமான, திட்டமிடப்பட்ட சர்வ் அவசியம். அதையெல்லாம் கச்சிதமா கத்துக்க சில மாதங்கள் எடுத்துக்கிட்டேன்.

அனாகா...சொல்லி அடிக்கும் ஸ்குவாஷ் கில்லி !

நான் ஆறாவது படிச்சப்போ, குடியரசு தின விழாவில் நடந்த போட்டியில் கோப்பைக்காக முதல் முறை கலந்துக்கிட்டேன். மூன்றாம் பரிசு ஜெயிச்சேன். வெற்றியோட சுவை என் நெஞ்சோட ஒட்டிக்கிச்சு. அடுத்தடுத்து பங்கேற்ற எல்லா போட்டிகளிலும் நிச்சயமா ஒரு பரிசு வாங்கினேன். 13 வயசுலேயே ஸ்குவாஷ்ல தேசிய சாம்பியன் ஆனேன். அடுத்ததா, பல்வேறு உலக அளவிலான போட்டிகளுக்குப் போற வாய்ப்புக் கிடைச்சுது. 'விஸ்பா’ எனும் உலக ஸ்குவாஷ் அமைப்பின் கோப்பையை 16 வயசில் வென்ற பெருமை, டேவிட் நிகோலேங்கிற பெண்கிட்ட இருந்தது. 15 வயசில் அந்த சாதனை என் வசம் ஆக்கிட்டேன்.

ப்ளஸ் டூ படிக்கும்போது பப்ளிக் எக்ஸாம் பயத்திலேயே ஆசிய குழு போட்டியில நான் ரெண்டு ஆட்டங்களில் தோற்க, நம் இந்திய அணி வெண்கல பதக்கத்தோட வெளியேறக் காரணம் ஆனேன். அடுத்த காமன்வெல்த் போட்டிகளிலும் சொதப்பினேன். 'அவ்வளவுதான் அனாகா’னு முணுமுணுக்க ஆரம்பிச்சிருந்தாங்க. ஆசிய கோப்பை வந்தது. என் தேர்வுகளும் முடிஞ்சுருந்தது. கடந்த வருடங்கள்ல யார்கிட்ட எல்லாம் தோற்றிருந்தேனோ, அவங்களை எல்லாம் ஜெயிச்சு இறுதிப் போட்டிக்குப் போனேன். என்னைச் சுற்றியிருந்த விமர்சனங்களை எல்லாம் அன்றோட அடிச்சு விரட்டணும்னு வெறியோட ஆடினேன். ஆசிய சாம்பியன் ஆனேன்!

அனாகா...சொல்லி அடிக்கும் ஸ்குவாஷ் கில்லி !

உலக ஜூனியர் குழு போட்டி அது. தீபிகா பல்லிக்கல், அன்வேஷா, நான்... மூணு பேரும் ஒரு டீம்ல இருக்குறோம். மூன்றாம் இடத்துக்காக அமெரிக்காவோட மோதினோம். மொத்தம் மூணு ஆட்டங்கள் ஆடணும். ஒரு ஆட்டம் தீபிகா ஜெயிக்க, இன்னொரு போட்டியில தோற்றுட்டோம். முடிவு செய்யும் ஆட்டத்தில் நான்! உலக சாம்பியன்ஷிப்ல வெண்கலப் பதக்கத்தை இந்தியா வெல்ல பொன்னான வாய்ப்பு என் கையில. மொத்தம் ஐந்து செட். நானும் எதிராளியும் சரியா இரண்டு இரண்டு புள்ளிகள் எடுத்திருக்க, இறுதி செட் விளையாடணும். ரொம்ப டயர்டாகியிருந்த என் தலையைக் கோதின தீபிகா, 'உன்னால முடியும் அனாகா’னு சொன்னாங்க. அவ்ளோதான்... சடார்னு எனர்ஜி லெவல் கூடின மாதிரி ஒரு ஃபீல். யெஸ்... இந்தியாவுக்கு உலக சாம்பியன்ஷிப்ல ஒரு பதக்கத்தை வாங்கித் தந்தோம். இந்த டீம் சப்போர்ட்டும் என் வெற்றிகளுக்கு முக்கியக் காரணம்.  

வேகம், ஆக்ரோஷம்... ரெண்டும் ஆட்டத்தில் மட்டுமே இருக்கும். மனசை எப்பவுமே அமைதியா வெச்சுருப்பேன். பத்து வருடங்களா தொடர்ந்து ஸ்குவாஷ் ஆடிட்டு இருக்கேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் எனக்கு மெடிக்கல், இன்ஜினீயரிங் ஸீட் கிடைச்சுது. ஆனா, நான் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர்ற எஸ்.எஸ்.என். கல்லூரியில் கணினி பொறியியல் படிக்கிறேன்'' என்று சொல்லும் அனாகா...

''பிடிச்சதை செய்றதுலதானே சுவாரஸ்யம்?!'' என்று கேட்கிறார் சிரித்தபடியே !