ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் !

சா.வடிவரசு படங்கள்: ப.சரவணகுமார்

##~##

கல்லூரி மாணவிகள் அல்லது மாணவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்தாலே... சினிமா, காபி ஷாப், அரட்டைக் கச்சேரி... என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், நான்கு மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, படிக்கும்போதே பிஸினஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது திரும்பிப் பார்க்க வைக்கும் விஷயம்தானே!

கடந்த நான்கு ஆண்டுகளாக கிட்டத்தட்ட, 200 ஈவன்ட்களுக்கு மேடை அலங்காரங்கள் செய்து, அந்த வருமானத்தை தங்களின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்தி வரும் சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியைச் சேர்ந்த 'அனிச்சம்’ குழு கல்லூரி மாணவர்கள் விதார்த்தி, ஆனந்த், சுரேஷ் மற்றும் ஆர்த்தியைச் சந்தித்தோம்.

விதார்த்தி, மாற்றுத்திறனாளி. காது கேட்காத, வாய் பேச முடியாத அவரின் மனதை, நமக்கு அவருடைய அம்மா மொழிபெயர்த்தார். ''அம்மா வயித்துல எட்டு மாச கருவா இருந்தப்போவே, அப்பா இறந்துட்டார். மகாராஷ்டிரா பேங்க்ல வேலை பார்க்கற அம்மாதான், தனியாளா வளர்த்தாங்க. ஓவியத்துல எனக்கு ஆர்வம் அதிகம். தேசிய விருதுகூட வாங்கியிருக்கேன். என்னோட விருப்பப்படி கவின்கலைக் கல்லூரியில பி.எஃப்.ஏ (பேச்சிலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்) சேர்த்துவிட்டாங்க.

அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் !

ரெண்டாம் வருஷம் படிச்சுட்டிருந்தப்போ, 'உனக்கு இருக்கிற கிரியேட்டிவ் திறனுக்கு, நீ மேடை அலங்காரங்கள் எல்லாம் அழகா பண்ணலாம். அதையே தொழிலா எடுத்து  செஞ்சா என்ன?’னு அம்மாதான் வழி ஏற்படுத்திக் கொடுத்தாங்க. 'உன் ஒருத்தியால மட்டும் செய்ய முடியாது. நண்பர்களையும் சேர்த்துக்கோ. அவங்க பணத்தோட கஷ்டம், அருமை தெரிஞ்ச வங்களா இருக்கிறது முக்கியம்’னு டிப்ஸும் கொடுத்தாங்க. வகுப்பு தோழர்கள் ஆனந்த், சுரேஷ், ஆர்த்தி என்னோட இணைஞ்சாங்க. 'அனிச்சம்’னு குழுவுக்குப் பெயர் வெச்சு, களத்துல இறங்கிட்டோம்!'' என்று விதார்த்தியின் குரலாக அம்மா ஒலிக்க... தங்களின் முதல் வாய்ப்புப் பற்றிப் பகிர்ந்தார் ஆர்த்தி.

''நாலு வருஷத்துக்கு முன்ன சென்னை 'ரெயின் ட்ரீ’ ஹோட்டல்ல ஒரு பிறந்தநாள் விழாவுக்கான மேடை அலங்காரம்தான் எங்க ளோட முதல் வாய்ப்பு. பெரியவங்கள கவரும் மேடை அலங்காரத்தோட, குழந்தைகளைக் கவரும் டாட்டூ, பலூன், விளையாட்டுகள்னு அழகா செய்து கொடுத்தோம். வந்திருந்தவங்க எல்லாரும் 'காலேஜ் ஸ்டூடன்ட்ஸா நீங்க?!’னு ஆச்சர்யப்பட்டு பாராட்டினதோட, தங்கள் வீட்டு விழாக்கள்லயும் வாய்ப்புகள் கொடுத்தாங்க'' என்று ஆர்த்தி நிறுத்த,

அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் !

''பிறந்தநாள், திருமணம், ரிசப்ஷன்னு எல்லா ஈவன்ட்களும் எடுத்துச் செய்ய ஆரம்பிச்சோம். பலூன் அலங்காரம், அரிசியில் பெயர் எழுதுறதுனு எங்க டீம்ல இருக்கிற ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஈவன்ட்டுக்கும் புது ஐடியா ஏதாவது ஒண்ணு கொண்டு வருவாங்க. அதுதான் மத்த ஈவன்ட் மேனேஜ்மென்ட்களிடம் இருந்து எங்களை தனிச்சுக் காட்டச் செய்தது. வர்ற வருமானத்தை எல்லாரும் பிரிச்சுக்கிட்டோம். முகூர்த்த மாதங்கள்ல அதிக வருமானம் கிடைக்கும்போது, சிறு தொகையை பள்ளிகளுக்கு நன்கொடையாவும் கொடுப்போம். ஆதரவற்றோர் இல்லம், கேன்சர் நோயாளிகள் இல்லம்னு நடக்கற விழாக்களுக்கு பணம் ஏதும் வாங்காம, இலவசமா மேடை அலங்காரம் செய்து தருவோம்!'' என்றார் ஆனந்த் பெருமையுடன்.

''கல்லூரியில சேர்ந்தப்போ முதல் ஒண்ணரை வருஷம் கட்டட வேலைக்குப் போய் சம்பாதிச்சுதான் ஃபீஸ் கட்டினேன். அப்போதான் விதார்த்தியும், அவங்க அம்மாவும் 'அனிச்சம்’ல என்னையும் சேர்த்துக்கிட்டாங்க. என் காலேஜ் ஃபீஸ் பாரங்கள் குறைஞ்சுது. முழு உழைப்பையும் கொடுத்தேன். டீம்ல இருக்கிற எல்லோருமே இதே எனர்ஜியோட வேலை பார்த்ததால, இந்த கூட்டு முயற்சி 'அனிச்சம்’ குழுவுக்கு பெரிய வெற்றியைத் தந்திருக்கு. ஒரே நாள்ல ரெண்டு, மூணு ஈவன்ட்களுக்குக்கூட ஆர்டர் கிடைக்கும். அதனால எங்க ஃப்ரெண்ட்ஸ் பலரையும் இப்போ இந்த பிஸினஸ்ல இணைச்சு, வேலைகளைப் பகிர்ந்து பார்த்துக்கிறோம். இப்போ 'அனிச்சம்’ல கிட்டத்தட்ட 30 ஃப்ரெண்ட்ஸ் இணைஞ்சு, தமிழ்நாடு முழுக்க இதை செய்துட்டு வர்றோம்'' என்று தாங்கள் கிளை பரப்பிய கதை பகிர்ந்தார் சுரேஷ்.

அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் !

''காலேஜ்ல படிச்சுட்டு இருக்கறதால, பெரும்பாலும் வீக் எண்ட் ஈவன்ட்கள்தான் எடுத்துப் பார்க்கிறோம். மேடை அலங்காரத்துக்கு குறைஞ்சது 3,000 ரூபாய் முதல் வாங்கறோம். 'குறைவான கட்டணத்துல ஈவன்ட் செய்துகொடுக்கிறது, இந்தத் தொழில்ல இருக்கிற மத்தவங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’னு சிலர் எங்ககிட்ட  பிரச்னை பண்ணினாங்க. அதையெல்லாம் பொருட்படுத்தாம, எங்க வேலைகளைச் சரியா, சந்தோஷமா செய்றோம். செகண்ட் இயர் பி.எஃப்.ஏ படிக்கும்போது ஆரம்பிச்ச 'அனிச்சம்’, நண்பர்களோட புரிதலால, இப்போ செகண்ட் இயர் எம்.எஃப்.ஏ. படிக்கும்போதும் இழை அறுபடாமத் தொடருது. கல்லூரி ஆசிரியர்களும் எங்களுக்கு முழு சப்போர்ட் தர்றாங்க. கல்லூரி மாணவர்கள், படிக்கறபோதே நண்பர்களோட இணைஞ்சு பிஸினஸ் பண்றதுக்கு, நாங்க ஒரு முன்னுதாரணமா இருந்தா, ரொம்பவே பெருமைப்படுவோம்!''

- கண்களில் ஒளிகூட்டி முடித்தார் விதார்த்தி, அம்மாவின் குரலில் !