நீச்சல் சுனாமி ஐஸ்வர்யா !பூ.கொ.சரவணன்படங்கள்: ப.சரவணகுமார்
##~## |
''எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், 'சென்ற முறை எடுத்துக்கொண்ட நேரத்தைவிட குறைவான நேரம் எடுக்க வேண்டும்’ என்பது மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் நான் எடுக்கும் உறுதிமொழி!''
- அத்தனை வேகமாக நீரில் நீந்தி எழுந்து வரும் ஐஸ்வர்யா, ஜில்லெனப் பேசினார். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் இவர், சர்வதேச அளவில் கலக்கிக் கொண்டிருக்கும் நீச்சல் சுனாமி!
''என் அப்பா, பிரபலமான நீச்சல் பயிற்சியாளர் சந்திரசேகர். அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் கோச். அவரிடம் நீச்சல் பயின்ற மீன்குஞ்சு நான். முதன் முதலில் நீந்த ஆரம்பித்தபோது எனக்கு வயது நான்கு. அந்த வயதில் நான் நீச்சல் போட்டியில் வென்ற தங்கம், மறக்கவே முடியாத முதல் வெற்றியின் ருசி. ஆனால், அதற்குப் பின் என் அப்பா, 'இனி போட்டிகள் வேண்டாம். நன்றாகப் பயிற்சி எடு’ என்றார். ஃப்ரீ ஸ்டைல், பட்டர்ஃப்ளை, பிரெஸ்ட் ஸ்ட்ரோக், பேக் ஸ்ட்ரோக் என நீச்சலில் நான்கு பிரிவுகள் உண்டு. நான் பேக் ஸ்ட்ரோக்கை என் பிரிவாக தேர்வு செய்தேன். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் நீருக்குள்ளேயே கழித்து கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் போட்டியில் கலந்து கொண்டபோது, நான் ஆறாம் வகுப்பு மாணவி. மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தேன்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது நான் வாங்கிய பரிசுகள், என் வாழ்வின் பெரிய ஏணி. பேக் ஸ்ட்ரோக்கில் ஒரே சமயத்தில் மூன்று தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை மாநில அளவில் ஜெயித்து தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றேன். அங்கு நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்று தமிழகம் திரும்பினேன். அந்த வெற்றியின் விளைவாக சென்னையில் இருந்து முதல் முறையாக இந்தியாவின் சார்பாக தெற்காசிய விளையாட்டுகளுக்கு தேர்வு ஆனேன். ஆனால், போட்டிக்கு முன்பாக முட்டிக்காலில் சுளுக்கு ஏற்பட, தவித்துப் போனேன். நீச்சலில் முக்கியமான விஷயம் 'கிக்’தான். ஆனால், 'அதை செய்யக்கூடாது' என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இன்னும் பத்து நாட்களில் தெற்காசியப் போட்டிகள் காத்திருந்தன. என் வாழ்வின் கனவு அது. வலித்தால் தாங்கிக் கொள்வோம் என முடிவெடுத்து, பேக் ஸ்ட்ரோக்கில் ஐம்பது மீட்டர் போட்டியில் கலந்து கொண்டேன்.
பாகிஸ்தானில் நடந்த அந்தப் போட்டிக்கு அப்பா அவர் பணிகளின் காரணமாக என்னுடன் வர இயலவில்லை. அது எனக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் எதையெல்லாம் செய்யக் கூடாது என அவர் சொல்கிற தொனியில் அழுத்தம் அடைவதாக நான் நினைத் திருந்ததே அதற்குக் காரணம். ஆனால், போட்டி துவங்க சில மணி நேரம் இருக்கும்போதுதான், அப்பா உடன் இல்லாதது எவ்வளவு சோர்வாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். கண்ணீர் வழிய அவரிடம் தொலைபேசியில் பேசிவிட்டு போட்டிக்குச் சென்றேன். வெள்ளி வென்றேன். பரிசோடு வந்து அப்பாவை கட்டிக்கொண்டு, 'நீங்க கூட இருந்திருந்தா தங்கம் அடிச்சிருப்பேன்னு தோணுதுப்பா’ என்று அழுதபோது, அப்பாவுக்கு நான் வென்ற பரிசுகளையெல்லாம் விட அந்த வார்த்தைகள் சந்தோஷம் தந்தன. என்னை இன்னும் மெருகேற்றினார். அந்த வருடம் மட்டும் மாநில அளவில் 15 ரெக்கார்டுகள் செய்தேன்.

இந்த வெற்றிகளுக்கு இடையே ஒரு சிக்கல். நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பள்ளியில், 'அஞ்சு மாசத்துக்கு மேல அட்டெண்டன்ஸ் போயிடுச்சு. அதனால எக்ஸாம் எழுத வேண்டாம். அல்லது, நீச்சலை விட்டுட்டு ஸ்கூலுக்கு ரெகுலரா வரணும்’ என்று கட்டுப்பாடு விதித்தனர்.
ஆனால்... 'உன்னால நீச்சலை விடாமலும் படிக்க முடியும் ஐஸ்!’ என்றார் அம்மா.
நம்புவீர்களா..? பத்தே நாள் தேர்வுக்குப் படித்துப் பொதுத்தேர்வில் 80% மேல் மார்க் வாங்கினேன். ப்ளஸ் ஒன்-ல் ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் சேர்ந்தபோது, அவர்கள் தந்த ஊக்கம் மற்றும் எடுத்துக் கொண்ட பயிற்சியால் ஓபன் கேட்டகரியில் பெரிய சீனியர்களை எல்லாம் ஜெயித்து, தமிழக அளவில் முதல் ரேங்க் பெற்றேன். அதே வருடம் ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசிய ஜூனியர் போட்டிகளிலும் அடித்தேன். அந்த வெற்றிகள் எல்லாம்தான் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இரண்டாம் இடத்தை எனக்குப் பெற்றுத் தந்து, நான் விரும்பிய ஸீட் கிடைக்கச் செய்தது.
இதுவரை 500 பதக்கங்களுக்கு மேல் ஜெயித்து இருக்கிறேன். இன்னமும் டூ மினிட்ஸ குறைச்சுட்டா... ஒலிம்பிக்ல விளையாடுறதுக்கு வாய்ப்பு கிடைச்சுடும். அது விரைவில் நடக்கும்!''
- துள்ளலோடு முடிக்கிறார் தண்ணீரின் தேவதை!