ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

கொஸ்டீன் ஹவர்

எல்லை மீறும் வாசனை வெறி !விபரீதத்துக்கு வழி வகுக்குமா ?

##~##

''பதினைந்து வயதாகும் என் மகள் அதிகம் வாசனைப் பொருட்களை நாடுகிறாள். ஆரம்பத்தில் சோப்பு பவுடர், நெயில் பாலிஷ் என்று விளையாட்டாக வாசம் பிடித்துக் கொண்டிருந்தவள், தற்போது பெட்ரோல், ஃபினாயில், மார்க்கர் பென், சமையல் எரிவாயு என்றெல்லாம் விவஸ்தை இல்லாது, வாசனை ரசனையில் இருக்கிறாள். அவளுடைய பையிலும் இந்த ரீதியில் பல வகையான வாசனை தொடர்பான பொருட்களை பார்த்ததிலிருந்து, அவள் இயல்பாக இல்லை என்று தெரிகிறது. இது சாதாரணமானதா அல்லது கவலைக்குரிய பிரச்னையா?''

- பெயர் வெளியிட விரும்பாத காரைக்கால் வாசகி        

எஸ்.டயஸ், திட்ட இயக்குநர், 'சாக்சீட்’ போதை மறுவாழ்வு மையம், திருச்சி:

கொஸ்டீன் ஹவர்

''குழந்தைப் பருவம் மற்றும் வளரும் பருவத்தில் அதிகம் தனிமையில் தள்ளப்பட்டவர்களின் ஆளுமைத்திறன் சமநிலை தடுமாறும்போது, இம்மாதிரியான பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவார்கள். வெறுத்து ஒதுக்கப்பட்டதாகவோ, அங்கீகாரம் கிடைக்காததாகவோ கருதி அவற்றுக்காக ஏங்குபவர்களாக இவர்கள் இருப்பார்கள். சிறுவயது முதற்கொண்டே வெளியில் தெரியாத மிகுதியான மன அழுத்தம் இவர்களைப் பீடித்திருக்கும். சிலசமயம் தனிமையில் தன்னைத்தானே அடித்துக் கொள்வதும் காயப்படுத்திக் கொள்வதுமாகவோ கூட  இருப்பார்கள்.

கொஸ்டீன் ஹவர்

இத்தகையோர்... தங்களை எதிலாவது ஒன்றில் ஆசுவாசப் படுத்திக்கொள்ளும் அல்லது ஐக்கியப் படுத்திக்கொள்ளும் முயற்சியாக... சில பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். போதை வஸ்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாவது இந்தப் பாதையில்தான். பணமோ, இடமோ, சூழ்நிலையோ வாய்க்கப் பெறாதவர்கள்... இம்மாதிரி எளிதில் கிடைக்கும் அம்சங்களில் தங்கள் திருப்தியை தீர்க்க முயல்வார்கள். இது கூடுதலாக உடல் மற்றும் உளவியல் பிரச்னைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

இப்படியே விட்டால் உங்கள் மகளின் தனிப்பட்ட வளர்ச்சி மட்டுமல்ல... அவள் படிக்கும் இடம், நாளை வேலை, சமூகம் என்று எல்லா மட்டங்களிலும் சங்கடங்களை அவளே அறியாது சிக்கிக்கொண்டு தவிப்பாள். வேறு வகையிலும் வெடித்துக்கொண்டு, சிறு பிரச்னைகளை பூதாகாரமாக்கலாம். எனவே, உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அவருடைய இந்த நிலைக்கு உங்கள் குடும்பச் சூழல் முக்கிய காரணமாக இருக்கும் என்பதால், பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியமானது.''

சித்திரக் கலை... பயில்வது எப்படி?

''இயல்பாகவே படம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். பள்ளி நாட்கள் தொடங்கி பல பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். டிராயிங் தொடர்பான கோர்ஸ்கள் படித்து அத்துறையில் பணிபுரிய விரும்புகிறேன். எனக்கான வாய்ப்புகளுக்கு வழிகாட்டவும்.''

- ச.கிருத்திகா, கடலூர்

என்.தினகரன், துறைத்தலைவர், விஷ§வல் கம்யூனிகேஷன் துறை, ஜெ.ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை:

கொஸ்டீன் ஹவர்

''ஓவியம் உள்ளிட்ட நுண்கலைப் படிப்புகள் என்றாலே சென்னை, அரசு நுண்கலை கல்லூரி மற்றும் கும்பகோணம், அரசு கவின் கலை கல்லூரிகள்தான் பிரதானமானவை. ஏராளமான முன்னோடிகளை தந்த இவை இரண்டும் அரசுக் கல்லூரிகள் என்பதால் படிப்புச் செலவும் அதிகம் பிடிக்காது. பி.எஃப்.ஏ படிப்பில் விஷ§வல் கம்யூனிகேஷன், டிராயிங், சிற்பக்கலை என பல வகையான பிரிவுகளில் பட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. படம் வரைவதில் சற்றே திறமையும் ஆர்வமும் இருப்பவர்கள் இங்கு சேர்ந்து தங்களை பட்டை தீட்டிக்கொள்ளலாம். கட்டணம் குறைவு என்பதோடு ஸ்காலர்ஷிப்புகள், குறிப்பிட்ட பிரிவினருக்கான இலவச உணவு, தங்கும் வசதி மற்றும் அனைவருக்கும் அரசு செலவிலான சுற்றுலாக்கள் என பல வசதிகளையும் உள்ளடக்கியது.

இது தவிர்த்து அனிமேஷன் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ப்ளஸ் டூ தகுதி இருப்பின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் தரப்பில் வழங்கப்படும் பி.எஸ்சி, அனிமேஷன் படிப்புகளில் சேரலாம். திரைத்துறை மற்றும் தொலைக்காட்சிகளில் 2டி, 3டி டிசைனிங் மற்றும் கம்ப்யூட்டர் அனிமேஷன் துறையில் அதிக வருமானத்தில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வாகனத்துறை, ரியல் எஸ்டேட், காலணி தயாரிப்பு, செராமிக் தொழில், பேஷன் டெக்னாலஜி துறைகளிலும் வாய்ப்புகள் உண்டு.

கலை ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் அதிக வாய்ப்பும்... சுவாரசியமும் உள்ள மற்றொரு துறை... விளம்பர நிறுவனங்களில் பணிபுரிவது. தனியார் கல்லூரிகள் மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களுடன் தங்களை இணைத்துக்கொண்டு, பல்வேறு தனியார் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் இப்பயிற்சிகளை வழங்குகின்றன. டிகிரி தவிர்த்த டிப்ளமா, சர்டிஃபிகேட் கோர்ஸ்களும் இவற்றில் அடங்கும். இந்த நிறுவனங்களில் சேரும்போது அவற்றுக்கிடையேயான கட்டண வித்தியாசம், அவர்கள் தரும் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியுமா போன்றவற்றையும் உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம். சில பல்கலைக்கழகங்கள் இதே படிப்புகளை தொலைதூரப் படிப்புகளாகவும் நடத்துகின்றன. ஆனால், செய்முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படிப்புகளுக்கு கரஸ்பாண்டன்ஸ் உசிதமானது அல்ல.

கொஸ்டீன் ஹவர்

ஓவியக்கலையில் எதிர்காலத்தை திட்டமிட இன்னுமொரு எளிமையானதும் ஸ்திரமானதுமான வாய்ப்பு... பள்ளி ஓவிய ஆசிரியராக தகுதி பெறுவது. இதற்கு, அருகில் இருக்கும் ஓவியப் பயிற்சி மையங்களில் நேரடியாகச் சேர்ந்தோ, தபால் மூலமாகவோ அரசு வரையறுத்துள்ள லோயர் மற்றும் ஹையர் கோர்ஸ்களை முடிக்க வேண்டும். பிறகு அரசின் டெக்னிக்கல் டீச்சர் சர்டிஃபிகேட் கோர்ஸுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு, ஓவிய ஆசிரியர் தேர்வை எழுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். காலிப்பணியிடங்கள் மற்றும் அரசின் புதிய பணியிடங்களைப் பொறுத்து ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கான ஓவிய ஆசிரியராக அரசுப் பணியில் சேரலாம். இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் இவர்களுக்குக் கிடைக்கும்.''