ஸ்பெஷல் 2
ரெகுலர்
ஸ்பெஷல் 1
Published:Updated:

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

- சி.ஆனந்தகுமார், இ.கார்த்திகேயன், ஆ.கோமதி நாயகம், பூ.கொ.சரவணன்த.,சித்தார்த்படங்கள்: எம்.ராமசாமி, ஏ.சிதம்பரம், ப.சரவணகுமார்

##~##

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில், வறுமைக்கு இடையிலும் வெற்றி மதிப்பெண்கள் பெற்றிருக்கும் 'மிஸ். தன்னம்பிக்கை’ மாணவிகள் சிலரைச் சந்தித்தோம். 'அறிவே சொத்து' என்று, இன்று தங்கள் குடும்பங்களுக்கு பெருமை தேடித் தந்திருக்கும் அந்த தங்கங்கள் பேசுகிறார்கள் இங்கு!

 'கஷ்டப்படுற ஒரு பொண்ணை படிக்க வைக்கணும்!'

செல்விமேரி (1,103 மதிப்பெண்கள் -  வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, சென்னை):

''டென்த் பப்ளிக் எக்ஸாம்ல 91% மார்க் வாங்கியிருந்தேன். அந்த ரிசல்ட் வந்தன்னிக்குதான்... டெய்லரான எங்கப்பா, ரயில் விபத்துல இறந்தார். நானும் அம்மாவும் நிராதரவானோம். இந்த காஸ்ட்லி சிட்டி சென்னையில நாங்க ரெண்டு பேரும் படாதபாடில்லை. என் அப்பாவோட மரணச் சான்றிதழைக் காட்டினதும், எனக்கு இலவசக் கல்வி கொடுத்த கே.கே. நகர் வேளாங்கண்ணி ஸ்கூலை ஆயுசுக்கும் மறக்க முடியாது.

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

அம்மா, உடம்பு சரியில்லாதவங்க. அடிக்கடி ஃபிட்ஸ் வரும். தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும்... மூணாவது மாடியில இருக்கிற எங்க வீட்டுக்கு 20 குடம் தண்ணி அடிச்சு எடுத்து வெச்சுட்டு, அக்கம் பக்கத்துல இருக்கிற 20 பிள்ளைங்களுக்கு டியூஷன் எடுப்பேன். பிறகு, ரெண்டு மணி நேரம் படிப்பேன்.

இப்போ இன்ஜினீயரிங் கட் ஆஃப் 183. ஐ.டி... இல்லைனா, சி.எஸ்.இ படிக்கணும்னு கனவு. நல்ல வேலைக்குப் போய் அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கணும், என்னை மாதிரி படிக்க பணமில்லாமல் கஷ்டப்படுற ஒரு பெண்ணைப் படிக்க வைக்கணும்!''

'உசந்துகிட்டே இருப்பேன்!’

பிரியா, (1,049 மதிப்பெண்கள் - அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிக்குளம், பெரம்பலூர் மாவட்டம்): ''என் உயரம் ரெண்டரை அடிதான். இப்போ மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள், பத்திரிகைக்காரங்க, ஆசிரியர்கள்னு எல்லோரும் பாராட்டுறதுல... கொஞ்சம் வளர்ந்துட்ட மாதிரி தோணுது. மூணு வயசோட என்னோட வளர்ச்சி நின்னுடுச்சு. என்னோட குட்டையான உருவம் காரணமா வெட்கப்பட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தவள, எங்கப்பாதான் எடுத்துச் சொல்லி ஸ்கூல்ல சேர்த்துவிட்டார். பிள்ளைங்க கேலி பேசறப்பல்லாம், அழுது தீர்க்கற என்னை, மணிமொழி டீச்சர்தான் தேத்துவாங்க. 'நீ நல்லா படி... உன்னை எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க’னு தைரியப்படுத்தினாங்க.

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

ஆறாவது படிக்கறதுக்காக, பக்கத்து ஊர் ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்ந்தப்போ, பிரபாவதி  ஃப்ரெண்டாச்சு. பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரெண்டு பேரும்தான் சேர்ந்து படிப்போம். மனப்பாடம் பண்ணாம, டிஸ்கஸ் பண்ணி படிப்போம். எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஞானசேகரன் சார், என் வகுப்பு ஆசிரியர்கள், அம்மா, அப்பா எல்லாரும் என்னோட கம்ப்யூட்டர் இன்ஜீனியர் கனவுக்குத் துணையா நின்னாங்க. இப்போ... அது நிறைவேறப் போகுது!''

'படிச்சே... நோயை விரட்டுவேன்!'

பார்வதிதேவி, (1,057 மதிப்பெண்கள் - விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி): ''பிறக்கும்போதே முதுகுத்தண்டுல பிரச்னையோட பிறந்தவ நான். ரெண்டு வயசுலயே முதல் ஆபரேஷனை சந்திச்சேன். இப்பக்கூட அப்பப்போ வலி இருக்கும். ப்ளஸ் ஒன்ல 'பயோ மேத்ஸ்' குரூப் எடுத்து, தாவரவியல், விலங்கியல் பாடத்துல படம் வரைய, ரெக்கார்ட் எழுத முடியாம மேத்ஸ் - காமர்ஸ் குரூப்புக்கு மாறினேன். அந்த சமயம் பார்த்து மறுபடியும் வலி படுத்தி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. தச்சுத் தொழிலாளியான அப்பா, அவர் நண்பர்கள் உதவியால ரொம்ப சிரமப்பட்டு பணம் ஏற்பாடு செய்ய, ஆபரேஷன் நடந்தது. அந்த வருஷம் ஸ்கூலுக்குப் போக முடியாம, அடுத்த வருஷம் மறுபடியும் ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். இப்போ ப்ளஸ் டூ-ல நல்ல மார்க் எடுத்திருக்கேன்.

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

சி.ஏ, ஐ.சி.டபுள்யூ.ஏ, ஏ.சி.எஸ், கம்பெனி செக்கரட்டரிஷிப்னு புரொஃபஷனல் கோர்ஸ் படிக்க ஆசை. அப்பாவால அவ்ளோ செலவு பண்ண முடியாது. எனக்கு அப்புறம் ரெண்டு தங்கச்சிங்க வேற இருக்காங்க. இப்போ பி.காம்., அப்ளிகேஷன் போட்டுருக்கேன். யாராவது உதவி பண்ணினா, விருப்பப்பட்டதை படிப்பேன். படிப்பாலயே போராடி, என்னோட நோயை ஜெயிப்பேன்!''

'ஆடு வித்த காசு, சி.ஏ படிக்க போதுமா?’

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

சத்யா (1,026 மதிப்பெண்கள் - காமராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி, தூத்துக்குடி மாவட்டம்): ''7 X 5 அளவில் ரெண்டு அறைகள் மட்டுமே உள்ள வீடு எங்களோடது. அப்பா பால்ராஜ், ஐஸ் வியாபாரி. அம்மா தனலட்சுமி, '100 நாள் வேலைத் திட்ட’த்துக்குப் போவாங்க. ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. அப்பாவோட வருமானம், வீட்டுக்கு வர்றதே இல்ல. எல்லாமே அவரோட செலவுக்கே கரைஞ்சுடும். அம்மாதான் கஷ்டப்பட்டு எங்கள காப்பாத்திட்டிருக்காங்க. பரீட்சை நேரத்துல கூட, படிக்க விடாம சத்தம் போட்டுப் புலம்பிட்டே இருப்பாரு அப்பா. வேற வழி தெரியாம, ரூம்ல போட்டு பூட்டிட்டுதான் நான் படிச்சேன். பள்ளிக்கூடம் நாலு கிலோ மீட்டர் தூரம். கவர்மென்ட் கொடுத்த சைக்கிள்லதான் போவேன். என்னோட மார்க்கை பார்த்துட்டு... அம்மாவுக்குப் பழக்கமான ஒரு அக்கா, 'சி.ஏ படிச்சா நல்ல எதிர்காலம் இருக்கு’னு சொல்லியிருக்காங்க. அதனால, பி.காம். முடிச்சுட்டு, சி.ஏ படிக்கப் போறேன். இதுவரைக்கும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சதால ஃபீஸ் எல்லாம் கிடையாது. இனி என்ன செய்றதுனு தெரியல. 'வீட்டுல நிக்கற ரெண்டு ஆடுகள வித்தாவது படிக்க வைக்கிறேன்’னு அம்மா சொல்றாங்க. அந்தக் காசுல சி.ஏ வரை படிச்சுட முடியுமா?!''

'டியூஷனுக்கு வசதியில்ல... நம்பிக்கையும் இல்ல!’

முர்ஷிதா நஸ்ரின், (1,025 மதிப்பெண்கள் - அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்பம்): ''எங்கப்பா டீக்கடை வெச்சுருக்கார். வீட்டுல மொத்தம் நாலு குழந்தைங்க. நான் ரெண்டாவது பொண்ணு. தினமும் வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டுத்தான் ஸ்கூலுக்குப் போவேன். அதுலயும் பொதுத்தேர்வு சமயம், ஆபரேஷன் பண்ணி படுத்த படுக்கை ஆயிட்டாங்க அம்மா. அவங்களையும், அப்பா, அண்ணன், தம்பி, தங்கச்சியையும், வீட்டையும் கவனிச்சுக்கிட்டே பரீட்சை எழுதினேன். 'நல்லா படிக்கிற புள்ளைய, இப்படி கஷ்டப்படுத்துறோமே'னு எங்கம்மா வருத்தப்படுவாங்க. இருந்தாலும் அவங்களுக்கும் வேற வழி இல்லையே!

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

இத்தனை நெருக்கடிக்கு நடுவுலயும் எங்க ஸ்கூல்ல செகண்ட் மார்க் எடுத்திருக்கேன். பாடத்தை மனசுல ஏத்துறதுக்கு முன்ன, எங்க குடும்ப கஷ்டத்தை மனசுல ஏத்தினதுதான் முக்கிய காரணம்! இதுவரைக்கும் டியூஷன் போனதே இல்ல. அதுக்கு வசதி இல்லைங்கிறது ஒரு பக்கமிருந்தாலும், அதுல எனக்கு நம்பிக்கையும் இல்ல. ராத்திரி, பகல் பார்க்காம படிச்சாலும், பவர் கட் ரொம்பவே படுத்திருச்சு. மெழுகுவத்தி வெளிச்சம்தான் கைகொடுத் துச்சு. என் வகுப்பாசிரியர் கிருஷ்ணகுமார் சார், இன் ஜினீயர் கனவை விதைச்சது, எனக்கு பெரிய உந்து சக்தியா இருந்துச்சு.

முர்ஷிதா நஸ்ரின் பி.இ... நிச்சயம் நடக்கும்ல!''

 மொத்தமும் ஒரே பள்ளிக்கு !

வறுமையில் செம்மை... பிரமிக்க வைக்கும் ப்ளஸ் டூ பெண்கள் !

ப்ளஸ் டூ தேர்வில் தமிழகத்தில் 1,189 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்திருப்பவர்... நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம், எஸ்.சுஷ்மிதா. இவர் படித்தது எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில். 1,188 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது... அதே பள்ளியை சேர்ந்த டி.கார்த்திகா. இதே பள்ளியைச் சேர்ந்த பி.பிரபாசங்கரி 1,187 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதே மாவட்டத்தைச் சேர்ந்த க்ரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி மகேஸ்வரியும் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.