மேற்படிப்புக்கு உதவுமா கிராஃப்ட் பிஸினஸ் ?
##~## |
''கல்லூரித் தோழிகள் சேர்ந்து ஆபரணங்கள், கிராஃப்ட் வொர்க்குகளை விரும்பிக் கேட்பவர்களுக்கு செய்துகொடுத்தோம். கல்லூரி, குடியிருக்கும் ஏரியாவிலும் நல்ல டிமாண்ட். இதை, எங்கள் மேற்படிப்புக்கான வருவாய் வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் வகையில் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது எப்படி?''
- கே.நந்தினி மற்றும் தோழிகள், சென்னை
வெங்கடலஷ்மி, சிருஷ்டி ஆர்ட்ஸ் - கிராஃப்ட்ஸ், கரூர்:

''கல்லூரி மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கவும், வருமான வாய்ப்பை உருவாக்கித் தரவும் மாவட்டம்தோறும் 'காலேஜ் பஜார்’ என்ற பெயரில் கைவினைப் பொருள் கண்காட்சி முகாம்களை தமிழக அரசே செயல்படுத்திவருகிறது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விழாக்களின்போது இந்த பஜார் ஸ்டால்களை களமிறக்கலாம். தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்டம்தோறும் இருக்கும் பொறுப்பாளர்கள் இதற்கு உதவுவார்கள். கலெக்டர் அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர் பொறுப்பிலிருக்கும் இவர்களிடம் முன்கூட்டியே தெரிவித்தால்... எல்லா ஏற்பாடுகளையும் செய்துதருவார்கள்.
ஏரியாவிலிருக்கும் சுயஉதவிக் குழு பெண்களுடன் சேர்ந்து இந்த பஜாரில் படைப்புகளை கடை பரப்ப லாம். திறமையும் ஆர்வமும் உள்ளவர்களை அடை யாளம் காணவும், ஊக்குவிக்கவும், நடைமுறை

மார்க்கெட்டிங் பயிற்சியாகவும், வருமான வாய்ப்பாகவும் இந்த 'காலேஜ் பஜார்’கள் கலக்கி வருகின்றன.
உங்கள் ஏரியாவில் இருக்கும் அறிமுகமான கடைகள் மூலமாகவும் தொடர்பு கிடைக்கும், கைவினைப் பொருட்கள் விற்பனைப் பிரதிநிதிகள் மூலமாகவும் விற்பனை செய்யலாம். இணையத்தில் இ-காமர்ஸ் மூலமாக கடல் கடந்தும் விற்பனை செய்யலாம்.''
''அதிரடி மாற்றங்களுடன் ஐ.ஐ.டி... சாதக, பாதகம் என்னென்ன?''
''ஐ.ஐ.டி அல்லது என்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்வது என் லட்சியம். அதிரடியாக நுழைவுத்தேர்வு முறைகளில் மாற்றங்களை அறிவித்திருக்கிறார்களே... இதன் சாதக பாதகங்கள் என்னென்ன?''
ரேஷ்மிகா, பாளையங்கோட்டை
ஆர்.ரஞ்சித்பிரபு, இயக்குநர், T.I.M.E பயிற்சி நிறுவனம், தஞ்சாவூர்:

''தரமான மாணவர்களைப் பட்டதாரிகளாக்கும் முனைப்பில் 'ஐ.ஐ.டி' (IIT-Indian Institute of Technology) மற்றும் 'என்.ஐ.டி' (NIT-National Institute of Technology) நிறுவனங்கள் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை. அந்த வகையிலும், 'ஒரே தேசம்... ஒரே தேர்வு' என்ற வளர்ந்த நாடுகளின் பாணியை பின்பற்றியும் வந்திருக்கும் பொது நுழைவுத்தேர்வு இது.
இதற்கு முன்புவரை நாடு முழுவதும் உள்ள 'ஐ.ஐ.டி' மற்றும் பிரபலமான 'ஐ.ஐ.எஸ்.இ.ஆர்' (IISER),, 'ஐ.ஐ.எஸ்.டி' (IIST) கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, தங்களுக்கான பிரத்யேக நுழைவுத்தேர்வை 'ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம்' (IIT-JEE) என்ற பெயரில் நடத்தின. மாநிலத்துக்கு ஒன்றாக இருக்கும் 'என்.ஐ.டி' சார்பாக 'ஏ.ஐ.இ.இ.இ' (AIEEE) என்ற நுழைவுத் தேர்வு தனியாக நடக்கும். தனித்தனியாக இருந்த இந்த நுழைவுத் தேர்வுகள்தான், தற்போது ஒரே பொதுநுழைவுத் தேர்வாக 'சி.இ.டி' (CET- Common Entrance Test)என்று மாற்றம் பெறுகிறது.
முன்பு 'ஐ.ஐ.டி' நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, ப்ளஸ் டூ தேர்வில் 60% மதிப்பெண் பெற்றிருப்பது அடிப்படை தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள், நுழைவுத்தேர்வு முடிவுகளில் நேரடியாக பங்கேற்கவில்லை. புதிய திட்டத்தின்படி ஒட்டுமொத்த 100 மதிப்பெண்களில் 40% வெயிட்டேஜை ப்ளஸ் டூ மதிப்பெண்களே தீர்மானிக்கும். பொதுநுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள், மீதமுள்ள 60% வெயிட்டேஜை தீர்மானிக்கும். இந்த அம்சம் சி.பி.எஸ்.இ பள்ளிகளைவிட, தமிழக போர்டு தேர்வான ப்ளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்களை குவிக்கும் நமது மாணவர்களுக்கு சாதகமானது.

அதேபோல முன்பெல்லாம் மேற்படி 'ஐ.ஐ.டி', 'என்.ஐ.டி' உள்ளிட்ட தேசத்தின் பல பிரபல தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர, குறைந்தது நான்கு நுழைவுத்தேர்வுகளையாவது எழுதியாக வேண்டும். தற்போது இந்த தேர்வுகள் 'மெயின்' (JEE-Mains), , 'அட்வான்ஸ்டு' (JEE-Advanced)என்ற இரண்டே தேர்வுகளில் சுருங்கிவிடுகின்றன. இதில் பாதக அம்சத்தைத் தேடினால், ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் சொதப்பி, வேறொரு நுழைவுத்தேர்வில் ஜெயிக்க இருந்த வாய்ப்பு, தற்போது இல்லை என்பதைச் சொல்லலாம்.
முதல் கட்டமான 'மெயின்' தேர்வில் வெற்றிபெற்றவர்கள், 'என்.ஐ.டி' கல்லூரிகளின் காலி இடங்களுக்கேற்றவாறு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த தேர்வின் முதல் ஒன்றரை லட்சம் டாப் மாணவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்வான 'அட்வான்ஸ்டு' எழுத தகுதி பெறுவார்கள். இதில் பெறும் உச்சமதிப்பெண்களில் இருந்து... 'ஐ.ஐ.டி' கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.''
படங்கள்: என்.விவேக், தே.தீட்சித்