கலகல...லகலக...காலேஜ் ஏரியா
##~## |
''ம்... இந்த இளைய தலைமுறை பெரும்பாலும் பொறுப்பில்லாமத்தான் இருக்குதுங்க. எப்பப்பாரு... பீச், மால், சினிமா, ஷாப்பிங்னு சுத்தறதே வேலை. ஒண்ணு... காலேஜ் போற சாக்குல அப்பா - அம்மா காசை கரைக்கறது! இல்ல, சஃப்ட்வேர் வேலைனு சொல்லிக்கிட்டு தானே சம்பாதிக்கற காசை கரையவிடறது... இதுதான் இங்க ரொம்ப நடக்குது...''
- இப்படி பெரியவங்க பொருமல் இல்லாத வீடு இங்கே குறைவு!
ஆனால், 'நாங்களும் பொறுப்பானவய்ங் கதான்' என்பதுபோல அவ்வப்போது இளைய தலைமுறை ஷாக் கொடுப்பது உண்டு! சரி, அப்படிப்பட்டவர்களை சந்திக்கவிடலாமே என்று தேடிப்பிடித்து உட்கார வைத்தால்... ரொம்பவே 'ஷாக்'காயிட்டோம்ல..!
தங்களோட ரூம்ல ஃபேவரைட் ஹீரோ/ஹீரோயினோட போஸ்டரை ஒட்டுறது, டீன் ஏஜினர்கிட்ட எப்பவுமே அவுட்டேட் ஆகாத டிரெண்ட். ஆமாங்க... சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ் கேர்ள்ஸ் எடுத்துக்கிட்ட டாபிக்... அவங்களோட போஸ்டர் ஹீரோஸ்!
''தலதான் எப்பவும் முதல்ல. அதனால நாங்க வர்றோம் ஃபர்ஸ்ட்!''னு ஆரம்பிச்சாங்க 'தல’ ஃபேன்ஸ் விஜயலட்சுமி மற்றும் ஜெய்ஸ்ரீ.

''மத்த ஹீரோஸ் மாதிரி எங்க 'தல’க்கு ஃபேமிலி பேக்கிரவுண்ட் சுத்தமா கிடையாது. சிங்கம் மாதிரி சிங்கிளா நின்னு, தன் அழகாலயும் அறிவாலயும் மேல ஏறி வந்தார். தண்டுவடத்தில் பல ஆபரேஷன்கள். ஆனாலும் 'தல’ ஹிட் தொடருது. நடிகரா மட்டும் இல்லாம, தனி மனுஷனாவும் ஹீ இஸ் வெரி ஸ்மார்ட். அதுதான் ஷாலினி, அனௌஷ்கானு ஒரு குடும்பஸ்தராவும் அவரை ரசிக்க வைக்குது. வீ லவ் அஜித்!''னு கண்ணடிச்சாங்க கேர்ள்ஸ்.
''சூப்பர் சொற்பொழிவு!''னு அவங்களுக்கு கவுன்ட்டர் கொடுத்த நிக்கியோட ஹீரோ... கமல்.

''நடிப்பில் முடிசூடா மன்னன், பிறவி நடிகன், நம்ம கமல். சினிமாவில் காசு பார்க்கணும்னு நினைக்காம, கலை உலகைக் காதலிக்கிற மனுஷன். சென்னை தமிழ் முதல் அமெரிக்கன் ஆக்சன்ட் வரைக்கும் கலக்குற சகலகலாவல்லன். நடிப்பு மட்டுமில்ல... இயக்கம், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், லிரிக்ஸ்னு எல்லா ஏரியாவிலும் கலக்குற அவரோட செழிப்பான நாலெட்ஜ வியக்காதவங்க யாரு?
போன ஜெனரேஷன்ல மட்டுமில்ல... இந்த ஜெனரேஷனுக்கும் காதல் மன்னன்னா, அது கமல்தான். ஒருமுறை அவரை நேர்ல பார்த்திருக்கேன். வாவ்... அவ்வளவு டவுன் டு எர்த்! அதில் இருந்து நான் அவரோட ரசிகை இல்ல... பக்தை!''னு கன்னத்துல போட்டுக்கிட்டாங்க நிக்கி!
''நமக்கு சூர்யாதான் டாப்பு!''னு ஆரம்பிச்ச ரேகாஸ்ரீ,
''சூர்யாவைவிட ஒரு ஹேண்ட்ஸம் மேன் நான் பார்த்ததில்லை. யாராச்சும் பார்த்தால் எனக்கு காட்டுங்க. நடிக்க வந்த புதுசுல அவ்ளோ பெர்ஃபெக்ட் இல்லதான் அவர். ஆனா, அதுக்கு அப்புறம் நடிப்பு, டான்ஸ், ஃபைட், ஃபிட்னஸ்னு எல்லா ஏரியாவிலும் தன்னை ஒரு முழு நடிகனா வளர்த்துக்கிட்ட அவரோட அர்ப்பணிப்புக்கு ஹாட்ஸ் ஆஃப். எத்தனை மாஸ் ஹிட் கொடுத்தாலும் மனசுல ஏத்திக்காத பணிவு. நம்பர் ஒன், நம்பர் டூ வட்டத்துக்குள்ள சிக்கிக்காம சினிமாவுல தனக்குனு தனி ரூட் போட்ட 'சிங்கம்’தான் என் செல்லம்!''னு கன்னம் சிவந்தாங்க ரேகா!

''கரீட் மச்சி!''னு அவங்களோட கைகோத்துட்டாங்க பவித்ரா!
''எங்க ஹீரோவை எல்லாம் பார்த்தவொடன பிடிக்காது, பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்!''னு பில்ட் - அப் கொடுத்து வந்தாங்க தனுஷ் ஃபேன் ஜீவிதா.
''நடிகர்னா பெர்சனாலிட்டி என்ற கிராமரை மாத்தி, தன்னோட கறுப்பு, ஒல்லி உருவத்தை சினிமாவில் நிலைநிறுத்த அவர் எவ்வளவு போராடியிருப்பார்..? இன்னிக்கு இருக்கிற ஹீரோஸ் அழகா இருக்கறாங்க, ஆடுறாங்க, ஃபைட் பண்றாங்க. ஆனா... யாரு நடிக்கிறா? அந்த வகையில் தனுஷ் ஒரு சூப்பர் நடிகன். அதனாலதான் 'இந்தியாவிலேயே இள வயதில் தேசிய விருது வாங்கின முதல் ஹீரோ’ என்ற பெருமையை அடைஞ்சிருக்கார். கங்கிராட்ஸ் தனுஷ்!''னு உணர்ச்சிவசப்பட்டாங்க ஜீவி!
''டைரக்டர்ஸ் ஹீரோ ஜீவாதான், என் சூப்பர் ஹீரோ!''னு ஆரம்பிச்ச விமலா, ''பலருக்கும் அவரை 'கோ’லதான் பிடிச்சிருக்கும். ஆனா... 'கற்றது தமிழ்’ல இருந்து நான் அவரோட ஃபேன். கமர்ஷியல், ஆக்ஷன், சைக்கோனு ஒரே மாதிரி போகாம, ஒவ்வொரு படத்துலயும் அவரோட கேரக்டர் செலக்ஷன் வெரைட்டியா இருக்கும். ஜீவா, சிம்ப்ளி சூப்பர்பா!''னு ரசிச்சாங்க விமலா!

''இவங்க எல்லாரும் மாஸ் ஹீரோஸா சொல்றாங்க. பட், என் மனசுக்குப் பிடிச்ச ஹீரோ, சித்தார்த் வேணுகோபால். 'ஆனந்த தாண்டவம்’ல சாதுவா வந்துட்டு, 'நான்’ல மாஸா கலக்குனாரே... அவரேதான். நீங்க வேணா பாருங்க... இவரெல்லாம் நல்லா வருவாரு பாஸ்; நல்லா வருவாரு!''னு சர்டிஃபிகேட் கொடுத்தாங்க கிருஷ்ணகுமாரி!
''சரி, எல்லாரும் சேர்ந்து சொல்லுங்க டாப் டூ ஹீரோஸ்..?''னு கிளைமாக்ஸ் கொஸ்டீன் கேட்டோம்!
''ஒண்ணு, சூர்யா!'' - ஒருவழியா ஒட்டுமொத்த வாக்கெடுப்பில் சொன்னவங்க, ''ரெண்டு..?''னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு கோரஸா கத்தினாங்க...
''வேற யாரு..? நம்ம பவர் ஸ்டார்தான்!''
ஜெயிலுக்குப் போன பிறகுமா இந்த உலகம் அந்த 'பவர் ஸ்டாரை' நம்பிக்கிட்டிருக்கு?
- உ.கு.சங்கவி
படங்கள்: ப.சரவணகுமார்