Published:Updated:

அவள் சினிமாஸ் ஆரோகணம்

அவள் சினிமாஸ் ஆரோகணம்

##~##

பெயரிலும் போஸ்டர்களிலுமே வித்தி யாசம் சொல்லும் 'ஆரோகணம்’ படத் துக்கு, 'வித்தியாசமா ஏதோ டிரை பண்ணி இருக்காங்க போல...’ என்கிற யூகத்துடனே வந்தார்கள் எழுத்தாளர் பொற்கொடி, குடும்பத் தலைவிகளான கீதா, அனு, தேவி, மீனு மற்றும் கல்லூரி மாணவி ராஜி!

கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தன்னையும் பிள்ளை களையும் கைவிட்டுச் செல்ல, தானே தகப்பனாகவும் மாறி குடும்பத்தைத் தாங்குகிறாள் நிர்மலா. அடித்தட்டு வேலை, குறைந்த வருமானம் என்றாலும்... அளவில்லா பாசத்துடன் மகன் செந்தில் மற்றும் மகள் செல்வியை வளர்த்து ஆளாக்குகிறாள். மகளின் நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள் திடீரென காணாமல் போகிறாள் நிர்மலா. செல்வியும் செந்திலும் அம்மாவைத் தேடுவதற்காக, அப்பாவிடம் உதவி கேட்டுச் செல்கிறார்கள். அவளை எங்கெங்கெல்லாமோ தேடும் திரைக்கதைக்குள் நம்மையும் நுழைத்து, 'நிர்மலா, பைபோலார் டிஸார்டர் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்' என்று சஸ்பென்ஸ் உடைத்து, அதில் நல்ல ஒரு மெஸேஜும் கொடுக்கிறார்... இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன்!

'நிலம்' புயல் புண்ணியத்தில் மழை கொட்டிக் கொண்டிருந்த இரவில், சென்னை, சத்யம் தியேட்டரில் இருந்து வெளிவந்த நம் வாசகிகளின் கண்களில் இருந்த திருப்தியே... படத்தின் ரிசல்ட் சொல்ல, அதை வார்த்தைகளில் அவர் மொழி பெயர்த்தது இதோ...

அவள் சினிமாஸ் ஆரோகணம்

குடும்பத்தலைவி கீதா: பெண்களின் மனதை அக்கறையோடவும், அழகாவும், புதுவித திரை மொழியிலயும் படம் பிடிச்சுருக்கிற இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு முதல்ல ஒரு பூக்கூடை! திரைக்கதைதான் படத்தோட முதல் பலம். படம் ஆரம்பிக்கும்போது... ரெண்டு மேல்தட்டுத் தோழிகள் ஸ்டார் ஹோட்டலுக்குப் போற அவசரத் துல காரை மோதி தூக்கி வீசுறது நிர்மலாவைத்தான்னு நம்ப வெச்சு, ஆனா... அவர் எந்த அடியும் படாம பார்லர்ல ஆட்டம் போடும் கதைக் கண்ணிகளை அழகா இணைக்கறது சூப்பர். சீரியஸான கதையோட மையப் பகுதிக்குப் போகும்போது திகட்டாம நகைச்சுவை தெளிச்சு, இந்த சமூக அமைப்புல கீழ்தட்டு, மேல்தட்டுனு எல்லாப் பெண்களுமே மனநலம் குன்றிதான் இருக் காங்கங்கறத கடைசி உரையாடல்ல மனசுக்குள்ள இறங்கி சொல்றது... செம நச்.

கீதா பஞ்ச்: லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஹேட்ஸ் ஆஃப்!

குடும்பத் தலைவி தேவி: கணவன், 'உன்னால தனியா நின்னு வாழ முடியாதுடி...’ என்று சவால்விட்டு, இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் செல்லும்போது, 'நான் வாழ்ந்து காட்டுறேன் பார்’னு நிர்மலா சவால் விடுறது; பையனோட டீச்சர் கிட்ட, 'நீங்க எல்.ஐ.சி போட்டிருக்கீங்களா? நான் ஒரு எல்.ஐ.சி ஏஜென்ட். நீங்க போடுறதா இருந்தா சொல்லுங்க...’னு கேட்டு, பையன் கோபப்பட, 'இப்படித்தாண்டா உன்னைப் படிக்க வைக்கிறேன்...’னு சொல்றது; 'மாப்பிள்ளை வீட்டுல கேட்ட வரதட்சணை கொடுக்க முடியாம உங்கம்மா ஓடியிருப்பா’னு தன் அப்பா சொன்னதும், அம்மா இத்தனை வருஷங்களா தனக்காகச் சேர்த்து வெச் சிருந்த பொருட்களைக் காட்டி செல்வி அழறதுனு... பல இடங்கள் கவிதை! கதாபாத்திரங்களுக்கான தேர்வும் மிகச்சரியா செய்திருக்காங்க.

அவள் சினிமாஸ் ஆரோகணம்

தேவி பஞ்ச்: காதல், ஹீரோயிஸம், அரசியல்னு சுத்துன வட்டத்துலேயே சுத்தாம... ஒரு பெண்ணை ஹீரோவாக்கியிருக்கிற 'ஆரோகணம்’, ஆரத்தி எடுக்க வேண்டிய படம்.

குடும்பத் தலைவி மீனு: நிர்மலாவா நம்ம மனசுக்குள்ள ஊடுருவுறாங்க விஜி சந்திரசேகர். பாதி வசனங்களை அவங் களோட கண்களே பேசிடுது. பழைய சேலை, வியர்வை பூத்த பிளவுஸ், மஞ்சள் முகம், காய்கறி விற்கும்போது ஒருத்தன் கிட்ட மூர்க்கமா சண்டை போடுறதுனு, தெருவோரங்கள்ல பிழைப்பு ஓட்டும் பெண்களோட வாழ்க்கையை, அப்படியே வாழ்ந்திருக்காங்க. அவங்க பார்லர்ல ஆடுற ஆட்டம், கதைக்குள்ள இன்னும் நம்மளை இழுத்துப் போகுது. 'பைபோலார் டிஸார்டர்'ங்கறத பயமுறுத்தாம, மிகைப்படுத்தாம சுமந்திருக்காங்க.  

மீனு பஞ்ச்: ஐ லவ் விஜி சந்திரசேகர்!

கல்லூரி மாணவி ராஜி: பேக்கிரவுண்ட் மியூஸிக் நல்லாயிருக்கு. நிர்மலாவுக்கு சாமி வர்ற ஸீன்ல, அந்த மியூஸிக் த்ரில்லாக்குது. சில இடங்கள்ல மட்டும் வசனம் கேட்காத அளவுக்கு பின்னணி இசை இரையுது. பாடல்கள்ல கொஞ் சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அப்பப்போ வந்து போன பாடல்கள்ல... அந்த ஹோட்டல் பாட்டு மட்டும்தான் நினைவுல இருக்கு.

ராஜி பஞ்ச்: மியூஸிக் டைரக்டர் கே... உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!

அவள் சினிமாஸ் ஆரோகணம்

குடும்பத் தலைவி அனு: சேரி மனிதர்கள், ஸ்டேட்டஸ் மனிதர்கள்னு சென்னையோட ரெண்டு முகங்களையும் அசலா காட்டியிருக்கார் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம். செந்திலும் அவனுடைய அப்பாவும் நிர்மலாவைத் தேடி இரவில் பஸ் ஸ்டாண்ட் போகும்போது ஒரே இருட்டு. முகங்கள் தெரியற அளவுக்காச்சும் இன்னும் கொஞ்சம் ஒளி கசிஞ்சிருக்கலாம். அதே போல படம் நெடுகிலும் நிறைய முகங்கள் கேமராவுல அவுட் ஆஃப் ஃபோகஸ்லயே கடக்கறது... உறுத்தல்!

அனு பஞ்ச்: சின்னச் சின்ன டெக்னிக்கல் குறைகள் இருந்தாலும், 'ஆரோகணம்’ இந்த வருஷத்தோட முக்கியமான படம்!

எழுத்தாளர் பொற்கொடி: ''காஸ்ட்யூம் டிஸைனர் ஷ்ருதி தரமா உழைச்சுருக்கார். முதல் படம் என்பதால, சில துணை நடிகர்களின் இயல்பற்ற நடிப்பை பொறுத்துக்கலாம். அந்த எம்.ஏல்.ஏ. கேரக்டர் எதுக்குனே தெரியல. படத்தின் ஆரம்பத்தில் இருந்து, இறுதி வரை வசனங்களில் ஏன் இவ்வளவு ஆங்கில தாக்கம்? அதைத் தவிர்த்திருந்தா... இது எல்லா தரப்பினரும் பார்க்கும் படமா இருந்திருக்கும். ஆனாலும், பிள்ளைகளைக் காப்பாத்தணும்ங்கற முனைப்புல... தன் நோயைக்கூட தன்னையுமறியாமல் குணப் படுத்திக்கிற ஒரு தாயோட இந்த வைராக்கிய வாழ்க்கை, அழகான திரைப்பதிவு.

பொற்கொடி பஞ்ச்: திஸ் ஃபிலிம் இஸ் ரா, வித்தவுட் எனி நியன்ஸ், டு அட்ராக்ட் த ஆவரேஜ் ஆடியன்ஸ் (நீங்க மட்டும்தான் இங்லீஷ்ல பேசுவீங்களா?).

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்