ஆராதனாவுக்கு வயது மூன்று. ஆராதனாவின் தந்தை சரவணனுக்கு கோவை பூர்விகம்; ஹிமாச்சல பிரதேசம் சிம்லா விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தாய் ஐஸ்வர்யா. மழலை மாறாத கவிதையாக இருந்த ஆராதனாவின் பேச்சிலும் செயலிலும் அவளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

திடீரென்று விழுந்த இடிபோல, ஆராதனாவுக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் என அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடத் தொடங்கினாள் குழந்தை.
சில நாள்களில் ஆராதனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், கடைசியில் வென்றது காலன்தான். உலகமே நொறுங்கிப்போனது போல கடினமான அந்த நேரத்திலும், தங்கள் குழந்தையின் கண்களை தானம் செய்து, இருவர் வாழ்வுக்கு வெளிச்சம் கொடுத்துள்ளனர் சரவணன் – ஐஸ்வர்யா தம்பதி.

இதுகுறித்து, ஆராதனாவின் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்து பின்தொடர்ந்தவரும், மயக்க மருந்து நிபுணருமான மருத்துவர் மானவீரன் கூறுகையில், “ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள அரசு அதிகாரியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
அப்போதுதான் ஆராதனா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. டெல்லியில் இருந்ததால் என்னால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. எனக்குத் தெரிந்த மருத்துவர்கள் மூலமாக குழந்தையை பரிசோதித்தபோது நிமோனியா காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Also Read
குழந்தையின் தந்தை மூலம் டெஸ்ட் ரிப்போர்ட்களை வாட்ஸ்ஆப்பில் கண்காணித்தேன். தொடர்ந்து நான்கு நாள்களுக்கு ஆராதனாவின் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் நாளடைவில் குழந்தையின் மூளை செயலிழக்கத் தொடங்கியது.
திடீரென்று ஒரே நாள் இரவில் இரண்டு முறை இதயம் செயல்படாமல் நின்றுவிட்டது (Cardiac Arrest). சி.பி.ஆர் மூலம் இதயத்தை துடிக்க வைத்தாலும், குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. நான் அங்கு நேரில் சென்றபோது குழந்தையின் உறவினர் ஒருவர், ஆராதனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் தயாராக இருப்பதாகக் கூறினார்.

சிறிது நேரத்தில் அதை ஆராதனாவின் தந்தையும் உறுதிப்படுத்தினார். கடினமான சூழலில், மருத்துவர்கள் கூட ஏதும் சொல்லாமல் அவர்களாக இந்த முடிவை எடுத்ததைப் பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது.
பிறகு அதுதொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டபோது குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்வது சாத்தியம் இல்லை எனத் தெரியவந்தது. ஆனாலும், ‘பாப்பாவின் கண்களை மட்டுமாவது தானம் செய்ய விரும்புகிறேன். மண்ணுக்குள் செல்வதற்கு, ஏதாவது வழியில் அவள் உயிர் வாழட்டும்’ என்றார் சரவணன்.

அவர்கள் சொன்னபடியே குழந்தையின் விழிகள் எடுத்து பதப்படுத்தப்பட்டு, இருவருக்கு தானமும் செய்யப்பட்டுவிட்டது. ஆராதனா புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறாள்” என்றார் நெகிழ்ச்சியுடன்.
விழிகளை தானம் செய்து ஆராதனாவுக்கு இரண்டாவது முறை உயிர் கொடுத்திருக்கும் சரவணனும், ஐஸ்வர்யாவும் போற்றப்பட்ட வேண்டியவர்கள்.