சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

காலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்!

அவள் டீன்ஸ்

##~##

வ்வொரு காலணி தயாரிப்புக்குப் பின்னும் பெரிய உழைப்பு இருக்கிறது. அதை படிப்பாகவே வழங்குகிறது, சென்னை, கிண்டியில் இருக்கும் மத்திய காலணி பயிற்சி நிறுவனம். வழக்கத்தில் இருந்து வித்தியாசமான கோர்ஸை விரும்புபவர்களுக்கும், டிசைனிங்கில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வு. 1957-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று வரை தரமான காலணி தயாரிப்பாளர்கள் பலரையும் உருவாக்கியபடியே இருக்கிறது. இங்கு படித்த மாணவர்களில் பலர், இன்று பிரபல ஷூ தயாரிக்கும் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

தரமான மற்றும் முழுமையான தொழில்நுட்ப வசதிகளோடு, மேற்சொன்ன பெருமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும்... சென்னையின் மத்திய பகுதியில் அமைந்து இருக்கும் இந்தக் கல்வி நிறுவனம், ஏனோ தென்னக மாணவர்கள் பலரின் கவனம் பெறாமலே இருக்கிறது. அதனால், வடமாநில மணவர்களே இங்கு அதிகம் படிக்கிறார்கள். தமிழக மாணவர்களுக்கும் இதன் பயிற்சியையும், அதற்குக் காத்திருக்கும் வேலைவாய்ப்புகளையும் தெரிய வைப்பதற்காக, இந்தக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சண்முக நாதனைச் சந்தித்தோம்.

''தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் இந்த பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கியதற்குக் காரணம், இங்குள்ள மக்கள் காலணி துறை வேலைவாய்ப்புகளில் பயன்பெற வேண்டும் என்பதால்தான். ஆனால், வடமாநில மாணவர்களே அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தப் படிப்பைப் பற்றிய விழிப்பு உணர்வு தமிழக மக்களுக்கு இல்லை.

காலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்!

இன்று தமிழ்நாடுதான் காலணி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. எனவே, வளர்ந்து வரும் காலணி தொழிலில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர, எங்கள் பயிற்சி நிறுவனம் வழிவகுக்கிறது. இது மத்திய அரசு கல்வி நிறுவனம் என்பதால், அனைத்து முன்னணி காலணி

காலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்!

தயாரிப்பு நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, வேலை கொடுக்கின்றன. எனவே, இங்கு படிப்பு முடிப்பவர்களுக்கு நிச்சயம் வேலை உண்டு. முக்கியமாக, பொறுமை அதிகம் தேவைப்படும் இந்த டிசைனிங் துறையில், பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். சொல்லப் போனால், கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வரும் நிறுவனங்கள், பெண்களுக்குத்தான் 60% முன்னுரிமை அளிக்கிறார்கள். இப்படி பல நிறுவனங்களில் வேலை தயாராக இருக்கிறது, அதை நிரப்பும் மாணவர்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருக்கிறது'' என்று வருத்தத்தை வெளிப்படுத்திய சண்முகநாதன், இந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கான வழிமுறைகளைக் கூறினார்.

''காலணி தயாரிப்பு சம்பந்தமான அனைத்துப் பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு, மான்செஸ்டரில் உள்ள காலணி கல்லூரியின் அங்கீகாரம் பெற்ற இரண்டாண்டு டிப்ளமா கோர்ஸ் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஓராண்டு டிப்ளமா படிப்பு உள்ளது. இவை தவிர, இளநிலைப் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பு உள்ளது. இந்த கோர்ஸ் முடிப்பவர்களுக்கு காலணி தொழிற்சாலைகளில் நேரடியாக மேலாண் பதவி கிடைக்கும். தவிர, பல குறுகிய கால கோர்ஸ்களும் உள்ளன. மேலே கூறிய டிப்ளமா மற்றும் முதுநிலை கோர்ஸ்களுக்கான விண்ணப்பம் ஜூன் மாதத்தில் இங்கு கிடைக்கும்'' என்றவர்,

காலணி டிசைனிங்... காத்திருக்கும் வேலைகள்!

''இது பழமையான பயிற்சி மையம். என்றாலும், இங்கு இருக்கும் லேப் வசதிகளும், இயந்திரங்களும், பயிற்சிகளும் நவீனமயமானவை. மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போது, இந்த முழுமையான பயிற்சி அவர்களின் வேகமான முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்கிறது. இந்தக் காரணத்தினால்தான் காலணி நிறுவனங்கள் எங்களை நாடி வருகிறார்கள்'' என்று சந்தோஷமாகக் குறிப்பிட்டார் சண்முகநாதன்.

இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் திறமையை பல வழிகளில் வெளிக்காட்டுகின்றனர். காலணி சம்பந்தமாக நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் இவர்களின் தடம் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்களின் படைப்புகள் இப்போது சீனாவில் நடக்கும் சர்வதேச போட்டிக்குத் தேர்வாகி இருப்பதே அதற்கு சான்று. மத்திய அரசின் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சலுகைகள் இங்கு உண்டு. இங்கு வழங்கப்படும் அனைத்து கல்விச் சேர்க்கையிலும் இவர்களுக்கு 22.5% இட ஒதுக்கீடு வழங்குவதுடன், பொருளாதாரத்தை மனதில் கொண்டு இவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 100% தள்ளுபடியும் அளிக்கப்பட்டுள்ளது.

'அட, இவ்வளவு விஷயங்கள் இத்தனை நாளாக தெரியாமல் போய்விட்டதே' என்று தோணுகிறதா?

அதுதான் இப்போது தெரிந்துவிட்டதே... வாங்குங்கள் விண்ணப்பங்களை!

- பி.என்.அர்ச்சனா, படங்கள்: செ.நாகராஜன்