சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

கொஸ்‘டீன்ஸ்’

கொஸ்‘டீன்ஸ்’

கொஸ்‘டீன்ஸ்’
##~##

''கணவன், மனைவி இருவருமே நன்றாக படித்து, ஐ.டி துறையில் நல்ல வேலையில் இருக்கிறோம். ஆனால், எங்கள் ஒரே மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் கவலைப்படும் வகையில் இருக்கிறது. நகரில் நல்ல பள்ளி, பாடத்துக்கு ஒரு டியூஷன் என்று மெனக்கெட்டும், பத்தாம் வகுப்பில் 80% மதிப்பெண் வாங்க வைப்பதற்குள் படாதபாடாகி விட்டது. எதற்கெடுத்தாலும் 'மூடு சரியில்லை’ என்பதை துருப்பாக வைத்து படிப்பில் ஈடுபாடு இல்லாதிருக்கிறாள். உண்மையிலேயே மகளின் 'மூடு’தான் பிரச்னையா? அடுத்த வருடம் ப்ளஸ் டூ என்ற நெருக்கடியில் அவளை வழிக்கு கொண்டுவருவது எப்படி?''

- பெயர் வேண்டாம்...

கொஸ்‘டீன்ஸ்’

முனைவர். ஒய்.சிம்சன், சிறப்புக்கல்வி ஆலோசகர், வேலூர்:

''உங்கள் மகளின் 'மூடு’ மந்திரம் பற்றி பேசுவதற்கு முன், பெற்றோராகிய நீங்கள் சில அடிப்படை விஷயங்களை திறந்த மனதோடு எதிர்கொண்டாக வேண்டும். பெற்றோர் இருவரும் நன்றாகப் படித்தவர்கள் என்பதற்கும் குழந்தை படிக்கும் போக்குக்கும் தொடர்பில்லை. அதாவது, பெற்றோரின் ஐ.க்யூ குழந்தையின் ஐ.க்யூவை தீர்மானிக்கும் என்று அவசியமில்லை. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். ஐ.க்யூ உள்ளிட்ட பல திறன் அம்சங்களும் அப்படியே. உங்கள் மகள் கடும் பிரயத்தனத்துக்குப் பிறகும் 80% தேர்ச்சிதான் தருகிறார் என்றால், அதுதான் அவரது உண்மையான நிலை. அதற்கு மேலும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. ஒரு பெற்றோராக உங்கள் எதிர்ப்பார்பில் நியாயம் இருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சிகளில் உங்கள் மகளின் இயல்பான தேர்ச்சியும் கெட வாய்ப்புள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கையிலிருக்கும் விஷயத்தில் சிந்தனை இல்லாது மற்றொன்றின் மீது வயப்பட்டிருப்பதை வெளிப்படுத்தவே 'மூடு இல்லை’ என்கிறோம். ஆனால், குழந்தைகள் உலகத்தில் 'மூடு’ என்பது 'எஸ்கேப்பிஸம்’ எனப்படும் தப்பித்தல் தொடர்பானது. பொதுவாக குழந்தையின் 'மூடு’ சார்ந்து அவர்கள் தரும் பிரச்னைகளின் பின்னணியில் மூன்று காரணிகளை அடையாளம் காணலாம்.

கொஸ்‘டீன்ஸ்’

முதலாவது, அவர்கள் நெடுநேரமாக படித்துக் கொண்டிருக்கலாம். இந்த நெடுநேரம் என்பதும்கூட நபருக்கு நபர் வேறுபடக்கூடியது. சராசரியாக 30 - 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒரே விஷயத்தை குழந்தைகளால் கிரகிக்க முடியாது. இதை பொருட்படுத்தாதபோது அவர்களில் சிலருக்கு தூக்கம் கண்ணைக் கட்டும், சிலர் எழுந்து டி.வி பார்க்க, விளையாட விரும்புவார்கள். இதற்கு வழியின்றி பெற்றோர் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி படிக்கத் தூண்டும்போது முதலுக்கே மோசமாக அவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பு வர ஆரம்பித்துவிடும், அல்லது படிப்பது போல் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த தடுமாற்றம் மூளை தொடர்பானது. அதிகபட்சம் ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் தந்து, மூளையை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கும், தனது ரசாயன நிலையை மீட்கவும் வாய்ப்பு தரவேண்டும். பரீட்சை நேரம் என்றால்கூட... கடினமான பாடங்களுக்கு இடையே ஈஸியான பாடங்கள் என்றோ, படிப்பதற்கு பதில் எழுதுவது என்றோ மாற்று உபாயங்களை புகுத்த வேண்டும். படிப்பில் நல்ல ஆர்வமும் சிறப்பான ஐ.க்யூ உள்ளவர்களுக்குமான உத்தி இது.

இரண்டாவது ரகத்தில், நார்மலான ஐ.க்யூ உள்ளவர்களுக்கு இயல்பான உற்சாகமும் ஈடுபாடும் குறைவதன் காரணமாக நீங்கள் குறிப்பிடும் 'மூடு’ மந்திரத்தை அஸ்திரமாக்குவார்கள். அவர்களை கண்டிப்பதற்கு பதில் அவர்களின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்குரிய நிவர்த்திகளுக்கு முயன்றால் போதும்.

பாடம் மட்டுமல்ல, குடும்பம் உள்ளிட்ட சமூகக்காரணிகளும் இந்த 'மூடு’ காரணியின் பின்னிருக்கலாம். உதாரணத்துக்கு, நன்கு செழிப்பான குடும்பத்து குழந்தைகளுக்கு எதற்கு படிக்க வேண்டும் என்பதான மிதப்பான போக்கு இருக்கும். அவர்களிடம், படிப்பு என்பதற்கு வெறும் வேலை, வருமானம் மட்டுமே நோக்கமில்லை; அதையும் தாண்டி தன்னை உணர்தல், ஒரு கலையை கற்றுக்கொள்வது, பிடிப்போடு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவது, சாதனை புரிவது என பிற உற்சாகமூட்டும் காரணங்களை கொஞ்சம் கொஞ்சமாக உணரச் செய்யலாம்.

கொஸ்‘டீன்ஸ்’

மூன்றாவது ரகத்தினரின் ஐ.க்யூ நிலை இயல்பாகவே குறைவாக இருக்கும். கடின பயிற்சி, மிதமிஞ்சிய உழைப்பு இவற்றின் காரணமாக ஓரளவு மதிப்பெண் வாங்கி வருவார்கள். ஆனால், பள்ளிப் படிப்பு தாண்டியதும் காணாமல் போய்விடுவார்கள்.

உங்கள் குழந்தையைப் பொறுத்தவரை, அவர் கடைசி இரண்டு காரணிகளில் அடங்குவார் என்று அனுமானிக்கிறேன். அந்த வகையில் உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்துவதன் மூலமாக மட்டுமே மேற்கொண்டு அவரை சிறப்பாக வழிநடத்தலாம். அவர் கடக்கும் சிறு வகுப்புத் தேர்வு உள்ளிட்ட ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் உடனிருங்கள். கவனித்து சிறுசிறு வளர்ச்சியையும் ஊக்கப்படுத்துங்கள். அவரது தன் மதிப்பை உணரும் தருணங்களை அதிகப்படுத்துங்கள். இதனால் தானாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிப்பு தவிர பிற கல்வி சார் செயல்பாடுகளில் ஆர்வம் இருப்பின் அதிலும் ஈடுபடச் செய்யுங்கள். அவருக்கு திறமை இருப்பின் கல்ச்சுரல்ஸ், கேம்ஸ் உள்ளிட்ட துறைகளில் பங்கேற்க அனுமதிக்கலாம். இதில் கிடைக்கும் உற்சாகத்தை படிப்பிலும் மடைமாற்ற முடியும். பள்ளிச்சூழல் அவருக்கு ஆர்வமுள்ளதாக மாறும். மகளுடைய ஆசிரியரை சந்தித்து கூடுதல் கவனத்துக்கு ஆலோசிக்கலாம். இறுதியாக, உங்கள் மகளின் தகுதி 80% என்றால் மேற்கொண்டு 5% பெற ஆரோக்கியமான ஊக்குவிப்பை தாருங்கள். ஆனால், 99% பெறவேண்டும் என்று எடுத்ததுமே ஆசைப்படாதீர்கள்.''