அவள் டீன்ஸ்
##~## |
கார்த்திகா... தமிழகத்தின் தடகளப் போட்டிகளின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவர். மாநில, தேசியப் போட்டிகளில் பரிசுகள் குவித்த இந்த விளையாட்டுப் புயல் படிப்பது, மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு இளம் வணிகம். 2013-ம் ஆண்டுக்கான ஜூனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க, புனே கிளம்பிக் கொண்டிருந்தவரிடம் கொஞ்சம் பேசினோம்.
''சொந்த ஊர் மயிலாடுதுறை பக்கத்துல கபூர் கிராமம். எங்களுடையது விவசாயக் குடும்பம். ஆறாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தப்போ, ஸ்கூல் பி.இ.டி மிஸ் செல்வராணிதான் ஓட்டப் பந்தயத்தில் என் திறமையைக் கண்டுபிடிச்சு எனக்கே உணர்த்தினாங்க. அடுத்த வருஷமே வட்ட அளவிலான போட்டியில 'சிறந்த வீராங்கனை’ பட்டம் வாங்குற அளவுக்கு பட்டை தீட்டிட்டாங்க. 'உன் திறமைக்கு இன்னும் அதிகமான தீனி வேணும்’னு சொல்லி, மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்த்துவிட்டாங்க. பயிற்றுநர் பிரபாகரன் சார்கிட்ட வந்து சேர்ந்தது, என் பாக்கியம். நீளம் தாண்டுதல்தான் எனக்கான களம்னு புரிய வெச்சார்.
அப்போ 10-வது படிச்சுட்டு இருந்த நான், அந்த வருஷம் ஈரோட்டில் நடந்த குடியரசு தின விளையாட்டுப் போட்டியில நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் (Triple jump) இரண்டிலும் தங்கம் வென்றேன். அதுதான் என்னோட மாநில அளவிலான முதல் பதக்கங்கள். அந்தப் போட்டியில 'சிறந்த வீராங்கனை’யாவும் தேர்வானேன். அதே வருஷம் ஆந்திராவில் நடந்த 2010-ம் ஆண்டுக்கான ஜூனியர் தடகளம் போட்டியில நீளம் தாண்டுதல்ல இரண்டாமிடம் வந்து, தேசியப் பதக்கத்தை முதல் முறையா வாங்கினேன்'' என்றவர், தொடர்ந்து தன் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

''2010-ல நடந்த மாநில ஜூனியர் தடகள போட்டியில 5 மீட்டர், 2011-ல 5.34 மீட்டர் தாண்டி ரெண்டு தடவையும் மாநில அளவுல சாதனை செஞ்சேன். இன்னிக்குவரைக்கும் இது ரெண்டும் ரெக்கார்ட். 2011-ல பெங்களூருல நடந்த தேசிய ஜூனியர் போட்டியில பழைய சாதனையான 5.79 மீட்டர் தூரத்தை சமன் செய்து வெள்ளி வாங்கினேன். அதே வருஷம் குண்டூர், அதுக்கப்புறம் 2012-ல கொல்கத்தா, புனேனு நடந்த தேசிய ஜூனியர் தடகள போட்டிகள்ல, நீளம் தாண்டுதல்ல தொடர்ந்து தங்க வேட்டைதான். இதோ இப்போ மறுபடியும் புனே கிளம்பிட்டிருக்கேன்!'' என்று சிரித்தவர்,
''முதல்ல படிப்பை முடிச்ச கையோட ஒரு வேலையில் அமர்ந்து என் குடும்பத்துக்கு நிம்மதி தரணும். அப்புறம் என் தாய்நாட்டுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் பதக்கம் வாங்கித் தர்ற என் கனவைத் துரத்தணும்!''
- கை குலுக்கி ரயிலேறக் கிளம்பினார் கார்த்திகா!
- மு.சா.கௌதமன் படங்கள்: செ.சிவபாலன்