அவள் டீன்ஸ்
##~## |
''நாங்கள்லாம்... மேடைகள்ல மட்டுமில்ல... சாலைகள்லயும் ஃபேஷன் ஷோ எஃபெக்ட் கொண்டு வந்துடுவோம்ல...''
- இதுதான் எப்போதுமே மெட்ரோ சிட்டி கல்லூரிப் பெண்களின் ராஜநடை! இப்படி மாடர்னாக மிரட்டும் மைசூர் யூனிவர்சிட்டி பெண்கள் சிலரிடம், ''உங்க மேக்-ஓவர் சார்ட் பத்தி கொஞ்சம் விளக்குங்களேன்...'' என்றோம்.
அனைவரும் மூளையைச் சுரண்டி படபடவென கொட்ட, நாம் விறுவிறுவென குறித்துக்கொண்டோம்!
'என்னதான் இங்க க்ளைமேட் கூலா இருந்தாலும், எப்பவுமே சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்குவோம். அப்போதான் சருமம் மிருதுவா இருக்கும். ஃபேஸ் வாஷ், ஃபேர்னஸ் கிரீம், கண்ணுக்கு வித்தியாசமான கலர்ல காஜல், மஸ்காரா, லைட்டா லிப் கிளாஸ்... இதெல்லாம் தினமும். கத்தாழை, முல்தானி மெட்டி, பாலாடை இது எல்லாத்தையும் சேர்த்து ஒரு ஃபேஸ் பேக், அப்புறம் பிளீச்... வாரத்துக்கு ஒரு முறை. அவ்ளோதான்!''
- இது ஷீதல் பட்.

'இதுக்கு மேல போடறதுக்கு வேற என்னம்மா இருக்கு..?' - இது நம்ம மைண்ட் வாய்ஸ்.
''டிரெஸ், மேக்கப் தாண்டி, போட்டுக்குற அக்சஸரீஸும் முக்கியம். ஃபன்கி நெயில் ஆர்ட், ஒரு கையில் மட்டும் வளையல், ஒரு கால்ல மட்டும் பாயல் (கொலுசுதான்), பெரிய டயல் கடிகாரம், கையில பேண்ட், நோஸ் ரிங், பிளாக் மெடல் ஆர்னமென்ட்ஸ்...' என அடுக்கிக்கொண்டே போனார் தாமரலிப்த பத்ரா.
''இதெல்லாம் ஓல்டு. இப்போ புது டிரெண்ட் என்ன தெரியுமா..?'' என்று நம் கவனத்தை ஈர்த்த சரோஜ்குமாரி,
''பெரிய பெரிய காகிள்ஸ், 'டக் இன்’ பண்ணின ஷர்ட், கன்னாபின்னா கலர்ல ஸ்னிக்கர்ஸ், பெரிய பர்ஸ், சைட் பேக்ல ஸ்மைலி பேட்ச், ஜீன்ஸ் பாக்கெட்டுக்கு வெளிய தொங்குற பொம்மை கீ செயின், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள்னு செல்போன் பேக் பேனல், மணிக்கட்டு பக்கத்துல கோட்டான், பல்லி, பூரான்னு சின்னதா டாட்டூ... எப்பூடி?!' என்று கண்ணடித்துச் சிரிக்கிறார் சரோஜ்.
''மாடர்ன் லுக் கிடைக்கணும்னா... ஹேர் ஸ்டைல் ரொம்பவே முக்கியம். வெறுமனே ஃப்ரீ ஹேர் விடுறதைவிட ஃப்ரின்ஜெஸ், ஃபிலிக்ஸ் பஃப் செம கியூட்டா இருக்கும். அதோட ஃபங்கி கிளிப்ஸ் போட்டுக்கிட்டு போனா, எல்லாரும் நம்மளதான் பார்ப்பாங்க!'' என்று முடியை கோதிக்கொண்டே சொன்னார் புஷ்பாஞ்சலி.

''ஃபேஷன் அப்டேட்களை தெரிஞ்சுக்குறதுல ஆர்வமா இருக்கணும். நம்ம ஃப்ரெண்டைப் பார்த்து நாம பண்ணினதா இருக்கக் கூடாது. எப்பவுமே நாமதான் டிரெண்ட் செட்டரா இருக்கணும். சீரியல், சினிமாவில் பார்க்கும் காஸ்ட்யூம்களை எல்லாம் தயக்கமே இல்லாம டிரை பண்ணிப் பார்க்கணும். ஒவ்வொரு முறை ஷாப்பிங் போகும்போதும், டிரெஸ்ஸில் இருந்து செப்பல் வரை நியூ அரைவல்ஸ் என்னனு கேட்டு வாங்கணும்''
- இது வினீதா சிங் தரும் டிப்ஸ்.
''முக்கியமான பாயின்டை விட்டுட்டீங்களே...' என்றபடி மீண்டும் ஆஜரான புஷ்பாஞ்சலி,
''பேச்சு, பழக்கத்துக்கு எல்லாம் முன்னாடியே ஒருத்தங்க மேல மத்தவங்களுக்கு நல்ல இம்ப்ரஷன் உருவாக்குறதுல முக்கிய பங்கு வகிக்கிறது... டியோடரன்ட்தான்!'' என்று ஆரம்பிக்க,
''ஆமாம்... அதுதான் நாம குளிக்காம இருக்கறதை குட்டு உடைஞ்சுடாம பார்த்துக்குது!'' என்று படா சிரிப்புடன் அனைவரின் ரகசியத்தையும் உடைத்தார் சிநேஹ் யாதவ்!
சட்டுபுட்டென்று கடையை சாத்திவிட்டு, நாம் ஜூட்!
- இ.பிரியதரிசினி, படங்கள்: மு.லலித் குமார்