ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

சமூக வலைதளத்தில் ஏற்படுகிறதே சஞ்சலம்!

கொஸ் ‘டீன்ஸ்’

##~##

  ''என்னுடைய குடும்பப் பின்னணி, வசதி வாய்ப்பு, அழகு... இவை குறித்தெல்லாம் எப்போதும் பெரிதாக வருந்தியதில்லை. ஆனால், கல்லூரியில் சேர்ந்த பிறகு, சக மாணவியர் போலவே சமூக வலைதளங்களில் இயங்க ஆரம்பித்ததும் அவையெல்லாம் பெரும் குறைகளாக என்னை சுழற்றியடிக்கின்றன. சமூக வலைதளங்களில் சக மாணவிகள் பீற்றிக்கொள்ளும் படாடோபம், தற்பெருமை, ஆண் நண்பர்கள் போன்றவை... என்னுடைய நிலையைக் கேலி செய்வது போல இருக்கின்றன. தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களோடு சகஜமாக பழகவிடாமல் தடுக்கிறது. படிப்பிலும் முன்புபோல கவனம் இருப்பதில்லை. சமூக வலைதளத்தில் முன்பின் தெரியாத ஆண் நண்பர்களால் சமயங்களில் சஞ்சலமும் வருகிறது. இதேபோன்ற சூழலை என்னுடைய தோழிகள் வெகு இயல்பாக கடந்து செல்ல, நான் மட்டும் எங்கே பெரிய வம்பில் மாட்டிக்கொள்வேனோ என்று அஞ்சுகிறேன். என்னைத் தெளிவுபடுத்தும் சரியான ஆலோசனைகள்... ப்ளீஸ்!''

- ஒரு மாணவி, திண்டுக்கல்

சமூக வலைதளத்தில் ஏற்படுகிறதே சஞ்சலம்!

கே.சிவக்குமார், மனநல ஆலோசகர், சென்னை:

''தன்னுடைய பிரச்னை குறித்து எப்போது ஒருவர் கவலையுடன் மீட்சிக்கான வழியைத் தேடத் துவங்குகிறாரோ, அப்போதே தீர்வின் முதல் படியில் அவர் இருக்கிறார் என்று சொல்லலாம். உங்களுடைய சூழல், அதை பின்னி யிருக்கும் சிக்கல், இவற்றைவிட அதிலிருந்து விடுபட நினைக்கும் உங்களுடைய முனைப்பு உங்களுடைய நல்ல இயல்பை அடையாளம் காட்டுகிறது. நல்ல வளர்ப்பு, நல்ல குடும்பப் பின்னணி இவைதான் மேற்படி இயல்பைத் தர முடியும். ஆமாம்... இதுபோன்று உங்களைப் பற்றி பெருமிதப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உங்களிடமும் இருக்கும். அவற்றை முதலில் அடையாளம் காண முயலுங்கள். காலைச் சுற்றிய தாழ்வு மனப்பான்மை, கழன்று ஓடிவிடும்.

சக வயதினரோடு ஒப்பிட்டுக் கொள்வதும், ஏமாற்றமடைவதும் இந்த வயதில் சகஜமானதே! நீங்கள் பார்த்து ஏங்கும் உங்களது தோழியிடமும் இதேபோல் ஏதோவொரு ஏக்கம் இருக்கவே செய்யும். சரியாகச் சொல்வதென்றால், தன்னிடமுள்ள ஏதோவொரு குறையை மறைக்க முயல்பவர்களே... மற்றொரு வகையில் தங்களது சாதாரண செயல்பாடுகளைக்கூட, பெரிதாக தம்பட்டம் அடித்துத் திருப்தி அடைய முயல்வார்கள். சமூக வலைதளங்களில் இந்த சுயவிளம்பரம் என்பது பிறழ்வான மனஎழுச்சி நிலையில், ஒரு 'மேனியா’வாகவே புரையோடிக் கிடக்கிறது. எனவே, அந்த மாதிரியான போலி உலகத்தைப் பார்த்து நீங்கள் சூடுபோட்டுக்

சமூக வலைதளத்தில் ஏற்படுகிறதே சஞ்சலம்!

கொள்வதோ, குமைந்து கிடப்பதோ அநாவசியம். மிகையான அல்லது போலியான தகவல்களைப் பொதுவில் வைத்து, அதன் மூலம் தன்னுடைய பிம்பத்தை உருவாக்க முயல்வது எதிர்பாராத கட்டத்தில் ஏமாற்றத்தில்தான் முடியும்.

உங்களை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும் ஒப்பீடுகளைக் கடக்க நேரிட்டாலும், நேர்மறையாகவே அவற்றை எதிர்கொள்ள வேண்டும். எதிர்மறையான ஒப்பீடல், தாழ்வு மனப்பான்மை மட்டுமல்லாது... பொறாமை, வஞ்சம், மனநிம்மதி இழப்பு, ஆரோக்கியமற்ற போட்டி என சச்சரவுகளுக்கே வழி செய்யும். தாழ்வு மனப்பான்மை அகல, முதலில் உங்கள் தரப்பு நிறைகளைச் சீர்தூக்கி பாருங்கள். அநேகமாக அவற்றின் முன்பு இதர குறைகள் காணாமல் போவதாகவே இருக்கும்.

உதாரணத்துக்கு... உங்களது வசதி வாய்ப்பு மற்றவர்கள் அளவுக்கு இல்லை என்று பட்டால், 'நான் நன்றாக படிக் கிறேன்; அந்த வகையில் நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம், செழிப்பான எதிர்காலம் என்பதற்கான பாதையின் பாதியில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நேர்மறை சிந்தனை, உங்களை உத்வேகப்படுத்தி உழைக்கத் தூண்டும். சக மாணவியரின் விளம்பர சால்ஜாப்புக்களை ஒதுக்கிப் போடும். அதேசமயம் நன்றாக படிக்க, நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வினையூக்கியாகவும் கைகொடுக்கும்.

இணையவெளி சமூகத்தோழமை என்பது எந்த வகையில் பார்த்தாலும் பாதுகாப்புக்குரியது அல்ல. அதிலும் பெண்கள் பல மடங்கு எச்சரிக்கையுடன் செயல்பட்டாக வேண்டும். அந்தரங்க தகவல்கள், அளவு மீறி நெருக்கங்காட்டும் நட்பு இவையெல்லாம் அசந்த சந்தர்ப்பத்தில், கால் வாரவே செய்யும். அதேசமயம், மனமுதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் அணுகினால் சமூக வலைதளங்களால் அனுகூலமும் சாதிக்கலாம். முதற்கட்டமாக நட்பு வட்டத்தை சீர்தூக்கி தூர்வாரி செப்பனிடுங்கள். முன்பின் தெரியாதவர்கள், சந்தேகத்துக்கு இடமளிப்பவர்கள்,

சமூக வலைதளத்தில் ஏற்படுகிறதே சஞ்சலம்!

சஞ்சலத்துக்கு வாய்ப்பளிப்பவர்களை 'அன்ஃப்ரெண்ட்’, 'பிளாக்’ நடவடிக்கைகள் மூலம் தூக்கி எறியுங்கள். சக மாணவியாக இருந்தாலும், அவருடைய சுய தம்பட்டம் உங்களுடைய உளைச்சலுக்கு காரணமாக இருப்பின், அவரது பதிவுகள் உங்கள் பார்வைக்கு வராதவாறு 'அக்கவுன்ட் செட்டிங்ஸ்’ கட்டமைப்பை இறுக்குவது நல்லது. பெண்கள் சமூக வெளியில் பாதுகாப்பாக இயங்குவது குறித்து அனுபவம் வாய்ந்த பெண் இணைய முன்னோடிகள் எழுதியிருக்கும் வழிகாட்டி குறிப்புகள், கட்டுரைகளை இணைய தேடுபொறியில் அலசி வாசியுங்கள்.

இவற்றைவிட சுலபமான வழி, உங்கள் சமூக வலைதள அக்கவுன்ட்டுகளை டி-ஆக்டிவேட் செய்துவிட்டு புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதுதான். இதன் மூலம்... வெட்டி அரட்டை, வீண் ஜம்பம், அந்தரங்கப் பகிர்வு இவற்றை ஒதுக்கிவிட்டு, பக்குவமான நட்பு வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம். படிப்பு, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, உடல் மற்றும் மனநல ஆலோசனை, பொழுதுபோக்கு, ரசனை, திறமைக்கான தளம் என்று பயனுள்ள வகையில் உங்கள் உலகத்தின் ஜன்னலாக சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.''